சாதாரணமாக உலகத்தில், “பூமிக்கு பாரமாக உள்ளான்!” என்பது போன்ற பேச்சுகளைக் கேட்டு வருகிறோம். அதாவது வீணாக வாழ்பவர்கள் என்ற பொருள் இச்சொற்களில் காணப்படுகிறது.
பூமிக்கு பாரம் எது? பூமி பொறுக்க இயலாதது எது? இதனை அறியவேண்டும். பூமிக்கு இன்னொரு பெயர் உள்ளது. “அனைத்தையும் தாங்கக்கூடியது, சகித்துக் கொள்ளக் கூடியது” என்பது அதன் பொருள். அந்தப் பெயரே “க்ஷமா” என்பது. அனைத்தையும் சகித்துக் கொள்கிறாள் பூமாதா!
பெரிய பெரிய மலைகளைத் தாங்குகிறாள். எத்தனையோ பாரங்களைச் சுமக்கிறாள். அப்படியிருக்கும்போது பூமியால் தாங்க முடியாத மனிதர்கள் கூட இருப்பார்களா? இருக்கிறார்கள்!
புராணங்களில் இது குறித்து அனேக சந்தர்ப்பங்களில் விவரித்துள்ளார்கள். பூமாதேவி விஷ்ணுவிடம் சென்று முறையிடுகிறாள். என்னவென்றால், “நான் பாரத்தைச் சுமக்க இயலாமல் இருக்கிறேன்” என்கிறாள். “யாருடைய பாரம்?” என்று கேட்டால் “துஷ்டர்களின் பாரம்” என்கிறாள்.
கிருஷ்ண பரமாத்மாவை பூமிக்கு வரவழைப்பதற்காக பிரம்மா முதலான தேவர்களோடு சேர்ந்து பூதேவி, நாராயணனிடம் முறையிடுகிறாள். “ஒரு காலத்தில் ராக்ஷசர்களாக இருந்தவர்கள் தற்போது அனேகவித அரசர்களாகப் பிறந்துள்ளார்கள். அவர்களின் பாரத்தை என்னால் தாங்க இயலவில்லை. சுவாமீ! நீ வந்து என்னைக் காத்தருள்வாயாக!” என்று துதிக்கிறாள். அதேபோல் பிற சந்தர்ப்பங்களில் கூட துஷ்டர்களும் அசுரர்களும் அதிகமாகி அதர்மம் பெருகியபோது பூமாதேவி அவர்களின் பாரத்தைத் தாங்க இயலாமல் வருந்துகிறாள்.
அதர்மம் எப்போதுமே உலகில் இருந்து கொண்டுதான் இருக்கும். தர்மமும் அதர்மமும் கலந்துதான் இருக்கும். ஆனால் பொறுத்துக் கொள்ளக்கூடிய அளவு என்று ஒன்று இருக்கும் அல்லவா? எந்த அளவுக்குத் தாங்க இயலும்?
யாராவது தீய செயல்களை இழைத்தால் ஓரளவுக்கு நாம் சகித்துக் கொள்வோம். ஆனால் சகிப்புத்தன்மைக்கும் கூட ஒரு எல்லை உண்டல்லவா?
அதேபோல் பூமாதேவியின் பொறுமைக்குக் கூட ஒரு எல்லை இருக்கிறது. பஞ்ச பூதங்களும் தர்மம் தழைத்தோங்கும் போது மகிழ்கின்றன. அதர்மம் பெருகும் போது அவற்றால் பொறுக்க இயலாமல் போகிறது. வருந்துகின்றன. அதன் மூலம் பலவித இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்றன. ஏனென்றால் அதர்மத்தை பொறுக்க இயலாமல் பிரகிருதியில் விபரீதங்கள் நிகழ்கின்றன.
உதாரணத்திற்கு சிலர் இயற்கையை பாழ் செய்து அநியாயமாக நடந்து கொள்வார்கள். மரங்களை வெட்டுவது, பூமியைத் தோண்டுவது போன்றவை எல்லாம் தர்மத்தை மீறும் செயல்கள். அதன் பலனாக ப்ரக்ருதி ஏதோ வகையில் சீற்றத்தை வெளிப்படுத்துகிறது.
அதாவது பஞ்சபூதங்களால் சகித்துக் கொள்ளக்கூடிய எல்லையை மனிதன் மீறும்போது பிரகிருதி வடிவில் பரமாத்மாவே மனிதனுக்கு புத்தி புகட்டுகிறார் என்று கொள்ள வேண்டும்.
தேவீ பாகவதத்தில், “சிலவற்றை என்னால் தாங்க இயலாது!” என்று பூமாதேவி கூறுகிறாள். பவித்திரமான பொருட்களை பூமி மீது நேராக அப்படியே வைக்கக்கூடாது என்பது நியமம். நடுவில் அவற்றுக்கு ஏதாவது ஒரு ஆசனம் இருக்க வேண்டும். அது இல்லாமல் அவற்றை இருத்தக் கூடாது. அது அந்த பவித்திரமான பொருள்களுக்கு அளிக்கும் மரியாதை.
வெற்றிலை, மணி, தீபம், புஷ்பம், பூஜை செய்யும் சாளக்கிராமம். விக்கிரகம், சிவலிங்கம் போன்றவற்றை பூமி மீது நேராக வைக்க கூடாது. அவ்வாறு வைத்தால் பூமியால் தாங்க முடியாது. அந்த பவித்ரமான பொருட்களை ஏதாவது ஒரு பீடம், தாம்பாளம் இவற்றின் மீது வைக்க வேண்டும். அதேபோல் ஜபம் செய்யும்போது கூட நேராகத் தரையில் அமராமல் ஆசனத்தின் மீது அமரவேண்டும். இவை பூமாதேவிக்கு நாம் அளிக்க வேண்டிய மரியாதைகள்.
உலகின் நலனைக் கெடுப்பவர்களை பூமியால் பொறுக்க இயலாது. பாரமாக உணர்வாள். தன் சுகத்திற்காக பிறரை வருத்துபவரை பூமி சகித்துக் கொள்ள மாட்டாள். இதனை நன்கு உணர வேண்டும்.
ஊழல், அசத்தியம் இவையெல்லாம் சுயநலத்தால் ஏற்படுகின்றன. பலவித அதர்ம வழிகளில் பொருளீட்டுபவர்கள் பூமிக்கு பாரமாகிறார்கள். பூமி அவர்களைக் கண்டிக்கிறது. தன்னால் இயலாவிட்டால் பகவானை பூமிக்கு அழைத்து வந்து அவர்களை அழிக்கிறாள் பூமி. இதனை அறிய வேண்டும்.
ராவணன் போன்றவர்கள் முதலில் பக்தர்களே! ஆனால் தர்மத்திற்கு விரோதமாக நடந்து கொண்டதால் பூமி அந்த பாரத்தைத் தாங்காமல் சுவாமியை அழைத்து வந்து அவனை அழித்தாள். இவற்றை மறக்கக்கூடாது.
பூமி இன்னும் யாருடைய பாரத்தைத் தாங்க மாட்டாள்? என்று கேட்டால் சோம்பேறிகளை பாரமாகக் கருதுவாள். அதர்மம் செய்பவர்களோடு கூட சோம்பேறிகளையும் பாரமாக உணர்கிறாள் பூமி. எந்த வேலையும் செய்யாமல் தின்று திரியும் வீணர்கள் பூமிக்கு பாரம்.
யார் யாரை பூமாதேவி பாரமாகக் கருதுவாள் என்பதை வியாச மகரிஷி அழகாக தெரிவிக்கிறார்.
“ஏஷாம் ந வித்யா ந தபோ ந தானம்
ஞானம் ந சீலோ ந குணோ ந தர்ம:
தே மர்த்ய லோகே புவி பார பூதா:”
“வித்யை இல்லாதவர்கள், தவம் இல்லாதவர்கள், தானம் செய்யாதவர்கள், ஞானம் இல்லாதவர்கள், சீலம் இல்லாதவர்கள், குணம் இல்லாதவர்கள், தர்மம் இல்லாதவர்கள் போன்றோரை பூமி தாங்கமாட்டாள்”.
நற்குணங்கள் அற்றவர்கள் பூமிக்கு பாரம். வித்யை, தவம், தானம், ஞானம், சீலம், நற்குணம் எல்லாம் சேர்ந்து இருப்பவர்கள் பூமிக்கு மகிழ்ச்சியை அளிப்பவர்கள். அப்படிப்பட்டவர்கள் பூமியின் பாரத்தை குறைத்தவராவார்கள். அப்படிப்பட்டவர்களைப் பார்த்து பூமி ஆனந்தம் அடைவாள்.
ப்ரக்ருதி நலமாக இருப்பதற்குக் காரணம் ஸத்புருஷர்களே! இந்த நற்குணங்கள் இருப்பவரே புருஷர்! சத்புருஷர்களைத் தாங்குவதால் பூமி மகிழ்கிறாள். அவர்களால் உலகில் அனைவரும் காப்பாற்றப்படுகிறார்கள்.
பிறருக்கு நன்மை விளைவிப்பவர்கள் பூமியை மகிழச் செய்பவர்களாகிறார்கள். நாம் நம்மைச் சுற்றியிருக்கும் இயற்கையை மகிழ்விக்க வேண்டும் என்றால் தர்மத்தோடு கூடிய வாழ்க்கையை வாழ வேண்டும்.
இதில் சிறப்பு என்னவென்றால் தானம் தவம் ஞானம் போன்ற குணங்களில் ஏதாவது ஒன்று இருந்தால் கூட போதும். ஏனென்றால் அனைவரிடமும் அனைத்து நற்குணங்களும் இல்லாமல் போகலாம். ஆனால் தானம் செய்யும் இயல்பு இருக்க வேண்டும். தானம் செய்வதற்கு தனம் இல்லை என்றால் தர்ம வாழ்க்கையோடு சீலத்தைக் காப்பாற்ற வேண்டும். நற்குணமாவது இருக்க வேண்டும். தனம் இல்லாவிட்டால் தவமாவது இருக்க வேண்டும். தவம் என்பது நியமத்தோடு வாழ்வதும் நற்செயல்களைச் செய்வதும். இதற்கு செல்வந்தர்களாக இருக்க வேண்டும் என்று தேவை இல்லை. மனமிருந்தால் போதும்.
எனவே இங்கு கூறிய அனைத்து நல்ல குணங்களும் மனிதனிடம் இருந்தால் மிகவும் சிறப்பு. அவற்றுள் சிலவாவது இருந்தால் பூமியில் வாழ்வதற்கு நாம் அருகதை உடையவர்களாவோம்.
வியாச மகரிஷி அருளிய இந்த வாக்கியத்தை பிள்ளைகளுக்கு சிறுவயதிலிருந்தே கற்றுக்கொடுத்தால் தனி மனித நடத்தை சமுதாயத்திற்கு உதவும் வண்ணம் மலரும் என்பதை அறியலாம்.
இத்தனை அற்புதமாக சர்வ காலத்திற்கும், சகல மக்களுக்கும் உதவக்கூடிய விஸ்வ விஞ்ஞானத்தை அருளிய வியாச மகரிஷிக்கு வந்தனம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்