நமஸ்கரித்தவர் எழுந்திருக்கவில்லை; அவருக்கு இனி மண் வாசனை பிராப்தமில்லை!

“நமஸ்கரித்தவர் எழுந்திருக்கவில்லை”

(இனி, எந்த ஒரு தாயின் ‘கர்ப’மும் அவருக்குக் ‘கிருஹம்’ ஆக முடியாது! ‘யத்ர கத்வா, ந நிவர்த்தந்தே.’ அவருக்கு இனி மண்வாசனை பிராப்தமில்லை)

.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

முதுமை,உடல் தளர்ச்சி,துணை இல்லாமல் வெளியே போகமுடியாது. ஆட்டோ,டாக்ஸியில் போகலாமே என்றால், அதற்கெல்லாம் வசதியில்லை.

நெஞ்சு மட்டும் படபடவென்று அடித்துக் கொள்கிறது – ‘அவன் வர்றதுக்குள்ளே, இவாளைப் பார்த்துடணும்.. ஒரே ஒருதடவை…”

வெறும் பகற்கனவு என்பது அவருக்கே புரிகிறது. ஆனால், நாள் ஆக ஆக, தவிப்பும் வளர்ந்துகொண்டே போயிற்று.

வாசற்படியிலே, காலடிச் சத்தம் கேட்டாலே, ‘அவன் தானோ?’ என்ற திகில். ‘போக வேண்டியிருக்கிறதே?’

என்ற அச்சம் இல்லை; ‘தரிசிக்காமல் போகிறோமே!’ என்ற ஏக்கம்.

ஒருநாள் வாயிற்புறத்தில் காலடிச் சத்தம்.

ஆமாம், காலடிச் சத்தம்.

“உங்களை அழைச்சிண்டு காஞ்சிபுரம் வரும்படி பெரியவா உத்திரவு…” என்றார் வந்தவர்.

வயோதிகரின் ஆத்மா சிலிர்த்தது. ‘நான் எனக்குள்தானே பேசிக்கொண்டேன்? அதெப்படி பெரிவாளுக்குக் கேட்டிருக்கும்.?’

‘நான் என்ன பண்டிதனா? அக்னிஹோத்ரியா? இல்லை, அமைச்சரா? அரசியல் தலைவனா? எப்போதோ ஒரு தேங்காயைச் சமர்ப்பித்து, நமஸ்காரம் செய்த நினைவு. நெஞ்சில் பதிந்த திருவுருவம், காலத்தால் மறைந்து விடவில்லை.’

மடத்துப் பணியாளர், ” என் தோளைப் புடிச்சிண்டு நடந்துவந்து கார்லே ஏறிக்கிறேளா?” என்றார்.

“கார்! ‘விமானத்தையல்லவா எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்!’

இவர்கள் இருவரும் காஞ்சிபுரத்தைச் சென்றடைந்த சமயத்தில், பெரியவா அன்னை காமாக்ஷி கோயிலில் இருந்தார்கள்.

“அம்பாளைத் தரிசனம் பண்ணிட்டுப் போகலாமா?” என்றார் சிப்பந்தி.

“முதல்லே, பெரியவா தரிசனம்….அப்புறமா…”

பெரியவாள் திருமுன்னிலையில் போய் நின்றார். பேச்சு வரவில்லை. கண்கள் பேசிக் கொண்டன. ஒரு வழியாகச் சமாளித்துக் கொண்டு, பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார்.

ஐந்து நிமிஷமாயிற்று. எழுந்திருக்கவேயில்லை.

பெரியவா தன்னுடைய ஒரு காஷாய வஸ்திரத்தைக் கொடுத்து,அந்தச் சரீரத்தின்மேல் போர்த்தச் சொன்னார்கள்.

மடத்துப் பணியாளர்களே இறுதிச் சடங்குகளை செய்யும்படி உத்திரவாயிற்று.

“முதல்லே, பெரியவா தரிசனம்; அப்புறமா…”

அப்புறமா அம்பாளை தரிசித்துக் கொள்ளலாம் – என்று சொல்லத்தானே விரும்பினார்.

அவர் விருப்பம் நிறைவேறிவிட்டது.

அரைமணி கழித்து, அவர் ‘விமான’த்தில் பயணித்துக் கொண்டிருந்தார் – அம்பாளை தரிசிக்க.

இனி, எந்த ஒரு தாயின் ‘கர்ப’மும் அவருக்குக் ‘கிருஹம்’ ஆக முடியாது!

‘யத்ர கத்வா, ந நிவர்த்தந்தே.’

அவருக்கு இனி மண்வாசனை பிராப்தமில்லை

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...