தர்க்கம், வாதம் இவை பற்றி நம் சனாதன தர்மம் என்ன கூறுகிறது? நம்பிக்கைக்கும் தர்க்கத்திற்கும் சமமான கௌரவம் அளிக்கிறது நம் தர்மம்.
சாஸ்திரத்தை நம்புவது ஒருபுறம். சாஸ்திர வாக்கியத்தை அறிவாற்றலோடு தர்க்கம் செய்வது மறுபுறம். நம்பிக்கையோடு கூட தர்க்கம் செய்ய வேண்டும். தர்க்கம் செய்தாலும் நம்பிக்கை இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு மார்க்கம் மிகவும் பலமானது என்று அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க முடியும்.
நாம் கடைபிடிப்பதற்கு விசுவாசம் போதுமானது. ஆனால் பிறருக்கு எடுத்துக் கூறி போதிப்பதற்கு தர்க்கம் தேவைப்படுகிறது. ஒவ்வொன்றையும் உதாரணத்தோடு விளக்குவதும் பல்வேறு விதமான பிரமாணங்களோடும் ஆதாரங்களோடும் கூறுவதும் தர்க்கத்தில் தேவைப்படும்.
அதனால் தர்க்கம், வாதம் என்ற சொற்களில் உள்ள இன்னும் சில உள்ளர்த்தங்களைக் கூட கவனிக்க வேண்டும். எந்த சாஸ்திரத்தை எவ்வாறு ஆராய வேண்டும் என்பதும் தெரிந்திருக்கவேண்டும். தர்க்கத்தில் அது இன்றியமையாதது.
அப்படியின்றி குருட்டுத்தனமாக விவாதிப்பது, பிடிவாதமாக வாதிப்பது, தங்கள் அனுபவத்தில் இல்லாதவற்றையெல்லாம் தூக்கி எறிந்து விடுவது…. போன்றவை அல்ல தர்க்கம் என்பது.
விவாதம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குக் கூட தர்க்க சாஸ்திரத்தில் வழிமுறைகளை கூறியுள்ளார்கள். ஜல்பம், விதண்டம், வாதம் என்று மூன்று விதங்களாக விவாதங்களை எடுத்துக் கூறியுள்ளார்கள்.
விவாதிப்பதற்கு ஒரு பிரமாணமான ஆதாரம் இருக்க வேண்டும். அப்படியின்றி குருட்டாம்போக்கில், ‘நான் நம்ப மாட்டேன்!’ என்று பேசி வருவது தர்க்கமாகாது. அடுத்துள்ளவர் அழகாக இங்கித ஞானத்தோடும் சமன்வயத்தோடும் விளக்கி வரும்போது உடன் இருப்பவர் கத்திக் கொண்டே இருப்பார்.
“சேஷம் கோபேன பூரயத்” என்று கூறியுள்ளது போல் சத்தம் போட்டு கோபத்தோடு பேசினால் சத்தியம் வெளிப்படாது. அதனால் எப்போதும் நிதானமாக இருக்க வேண்டும். பேசுபவருக்கு விசாலமான உள்ளம் இருக்க வேண்டும். கேட்பவருக்கும் திறந்த உள்ளம் இருக்க வேண்டும். இதனை ஓபன் மைண்ட் என்கிறோம்.
அவ்வாறின்றி முதலிலேயே ஒரு அபிப்பிராயத்தை ஏற்பாடு செய்துகொண்டு முன்முடிவுகளோடு வந்தமர்ந்து, ஒரு கருத்தை ஒருவர் தவறு என்று நிரூபித்து வருகையில் சண்டித்தனமாக விவாதம் செய்வார்கள் சிலர்.
ஓரொரு தடவை அந்த விவாதம் எங்கு வரை போகும் என்றால் தனி மனித நிந்தனைக்கும் வர்க்கங்களின் நிந்தனைக்கும் வழிவகுத்துவிடும். அதன் மூலம் பிரச்சனை எங்கு தொடங்கியது? எதைப் பற்றி விவாதம் செய்கிறோம்? என்ற விஷயத்தைக் கூட மறந்து விடுவோம். அப்படிப்பட்ட விவாதங்களுக்கோ தர்க்கங்களுக்கோ வாய்ப்பளிக்கக் கூடாது.
உண்மையில் யாரோடு விவாதிக்க வேண்டும்? யார் விவாதிக்க வேண்டும்? என்பதற்குக் கூட நியமங்கள் உள்ளன. ஒரு கருத்தைப் பரிந்துரைத்து முன்னெடுத்துச் செல்லும் போது அதனை படித்தறிந்து, கடைப்பிடித்து, புரிதல் உள்ளவர் அங்கு அமர வேண்டும். அதை விடுத்து அபிப்பிராயம் கூறுவதற்கு அனைவரும் தயாராகவே இருப்பார்கள். ஆனால் புரிதலோடு விவாதிப்பவர்கள் எத்தனை பேர்?
மிக உயர்ந்த விஷயங்களைப் பற்றி எதுவும் படித்தறியாத, அது பற்றிய அறிவும் புரிதலும் அற்றவர்களை அமரச்செய்து பேச வைக்கக்கூடாது. உதாரணத்திற்கு, ‘ராமாயணத்தில் ராமன் நடந்து கொண்ட விதம் தர்மமா? அதர்மமா?’ என்பது பற்றி மீமாம்சம் செய்யும்போது ஏதோ சாதாரணமாக படித்த, முரட்டுத்தனமானவர்களையோ நாத்திகர்களையோ உட்காரவைத்து ராமனைப் பற்றிய சர்ச்சையில் ஈடுபடுவது போன்ற பாவச்செயலும் வீண் செயலும் வேறொன்று இருக்க முடியாது.
உண்மையாகவே ராமாயணத்தைப் படித்து சரியாக புரிந்து கொண்டவராக இருக்க வேண்டும். ஒரு வாக்கியத்துக்கு மற்றொரு வாக்கியமோ ஸ்லோகமா உதாரணம் காட்டக் கூடியவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டவரை அமரச்செய்து அது தர்மமா அதர்மமா என்ற மீமாம்சை அப்போது செய்யலாம். அப்படியின்றி ராமாயணம் படிக்க மாட்டான்; ஒரு ஸ்லோகத்தைக் கூட சரியாக உச்சரிக்கத் தெரியாது; விளக்கி கூறவும் தெரியாது; வெறும் நிந்தித்து அவமரியாதை செய்து வெறுப்பதையே வேலையாகக் கொண்டவவனை உட்காரவைத்து விவாதித்து அவனை சம்மதிக்கச் செய்ய வேண்டும் என்ற தேவையே இல்லை! இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
தற்காலத்தில் இதுபோன்ற உபயோகமற்ற சர்ச்சைகள் அதிகமாகி வருகின்றன. அவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். இது வெறும் நாஸ்திக ஆஸ்திக சண்டையாக மாறி வருகிறதே தவிர அத்யயனம் செய்து படித்து புரிந்துகொண்டு சர்ச்சை செய்வதென்பது காணாமல் போய் விட்டது.
அதனால் ஒரு கருத்தின் மீது பேச வேண்டுமென்றால் அந்த விஷயத்தைப் பற்றி முழுமையான அத்யயனமும் புரிதலும் உள்ளவர்கள் மட்டுமே அமரவேண்டும். எதுவும் தெரியாதவர்கள் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக பார்வையாளர்கள் ஸ்தானத்தில் அமர வேண்டுமே தவிர விவாத மேடையில் அமர கூடாது. இதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆன்மீக சாதனையில் குரு வாக்கியத்தையோ சாஸ்திர வாக்கியத்தையோ எடுத்துக் கொண்டு சாதனை செய்ய வேண்டுமே தவிர தர்க்கித்துக்கொண்டு பொழுது போக்கினால் சாதனையில் பலவித குறைகள் ஏற்பட்டு விடும்.
ஏனென்றால் மதம் என்றாலே ஒரு நம்பிக்கை. நம்பிக்கைக்கு தர்க்கம் வேலைக்காகாது. விசுவாசத்திற்கு தர்க்கத்தோடு பணியில்லை. நம்பிக்கையை மதிக்கவேண்டும். ஒருவருடைய விசுவாசத்தை மற்றவர் கௌரவிக்க வேண்டுமே தவிர நம்பிக்கையை தர்க்கத்தால் மறுப்போம் என்று மோதலுக்கு முன்வர கூடாது. ஏனென்றால் தர்க்கமும் நம்பிக்கையும் இரண்டு முனைகள். ஒருவன் நம்புவது தர்க்க சம்மதத்தோடு இருக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் விசுவாசம் எப்போதும் தர்க்கத்திற்கு பிடிபடாது.
முக்கியமாக இறைவன் விஷயத்தில் தர்க்கம், சாஸ்திர சம்மதத்தோடு மட்டுமே நடக்க வேண்டும். சாஸ்திரத்தில் இல்லாத தர்க்கங்களை தம் இஷ்டத்திற்குச் செய்யக்கூடாது என்று கூறியுள்ளார்கள்.
இதுகுறித்து சிறந்த ருஷி வாக்கியத்தை நாரத மகரிஷி பக்தி சூத்திரங்களில் நமக்கு அளித்துள்ளார். “வாதோ நாவலம்ப்ய: !” அதாவது “விவாதத்தை நடத்தக் கூடாது” என்கிறார். யார்? பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் விவாதத்தில் ஈடுபடக்கூடாது.
ஒருவர் வேங்கடேஸ்வர ஸ்வாமியின் பக்தர். பெருமாளை வழிபட்டு வருகிறார். அவருக்கு சுவாமியின் பெயரை நினைத்தாலே உடல் சிலிர்த்துப் போகிறது. கண்களை மூடினால் சுவாமியின் உருவம் மனதை நிறைக்கிறது. ஆனந்த பரவசத்தில் திளைக்கிறார். வேங்கடேஸ்வர ஸ்வாமிக்கு தர்மம் பிரியமானது என்பதால் தர்ம வாழ்க்கையை மேற்கொண்டுள்ளார். அத்தகைய சத் புருஷரை கௌரவிக்க வேண்டும். அதை விடுத்து, “வெறும் கல்லைப் போய் தெய்வம் என்று எவ்வாறு வழிபடுகிறாய்? அந்த சுவாமியின் நாமத்திற்கு மகிமை உள்ளதா?” என்று அவரோடு தர்க்கம் செய்யக்கூடாது. அவருடைய பக்தியை கௌரவிக்க வேண்டும்.
பிறர் இதுபோல் தர்க்கம் செய்து வருவதைக் கேட்டால் பக்தருக்கு இருக்கும் பக்தியில் சிறிது அசைவு ஏற்பட்டு விடும். விசுவாசம் நலிவுறும் அல்லது நழுவும். அதனால் பக்தி மார்க்கத்திலும் ஆன்மீக சாதனையிலும் இருப்பவர்கள் தர்க்கங்களின் வழிக்கு போகக் கூடாது என்கிறார் நாரதர்.
அதனால்தான், “ஸ்திரீ தன நாஸ்திக வைரி சரித்ரம் ந ஸ்ரவணீயம் ந ஸ்மரணீயம்” என்கிறார் நாரதர். “பக்தி மார்க்கத்தில் இருப்பவர்கள் காம விருப்பத்தோடு கூடிய உரையாடல்களில் ஈடுபடக்கூடாது. செல்வத்தின் மீது ஆசை கொள்ளக் கூடாது. அதேபோல் நாஸ்திகர்களின் தோழமை கூடாது” என்கிறார்.
ஏனென்றால் நாத்திகர்கள் தர்க்க அறிவோடு சிந்திப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. அவர்கள் இறைவன் இல்லை என்று நம்புகிறார்கள். ஆஸ்திகன் இறைவன் உள்ளான் என்று நம்புகிறான். இருவருடையதும் நம்பிக்கைகளே! இதை அறியவேண்டும்.
இறைவன் இல்லை என்ற பலமான அபிப்ராயத்தில் இருப்பவர்கள் அதை நிரூபிப்பதற்குத் தகுந்த காரணங்களை தேடிவருவார்கள். இறைவன் இருக்கிறான் என்று நம்பிக்கை உள்ளவன் அதற்கான காரணங்களைத் தேடுகிறான்.
இல்லை என்பவனுக்கு ஆழ்ந்த அறிவும் புரிதலும் கிடையாது. உள்ளான் என்பவனுக்குப் புரிதல் உள்ளது. அதனால் இல்லை என்பவன் தர்க்கம் செய்வதற்குக் கூட பெரிதாக விஷயமற்றவன். இதையும் கவனிக்க வேண்டும்.
அதனால் ஆன்மீக சாதகன், விவாதங்களில் ஈடுபடக் கூடாது. விவாதத்தில் ஈடுபட்டால் என்ன ஆகும்? நம் சாதனையிலும் நம்பிக்கையிலும் நலிவு ஏற்படும். சாதனை முற்றிய நிலையில் தர்க்கம் அவனைக் கலைக்க இயலாது. ஆனால் ஆரம்ப சாதகன் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தவன் செய்யும் தர்க்கமோ ஹேதுவாதமோ நம் விசுவாசத்தை நழுவ செய்வதற்கு முயற்சி செய்யும். அதனால் நாம் பலமாக அடி எடுத்து வைக்க இயலாமல் போகலாம். நம்பிக்கையோடு எடுத்து வைக்கும் உறுதியான அடிகளை, நம்பிக்கை ஊசலாடும் நிலையில் எடுத்து வைக்க இயலாமல் போகும். சாதாரணமாக நடக்கும் போது கூட திடமாக அடி எடுத்து வைத்தால்தான் நடையைத் தொடர முடியும். சந்தேகத்தோடு அடி எடுத்து வைத்தால் வழுக்கி விழுந்து விடுவோம். இதனைப் புரிந்து கொள்ளவேண்டும்.
அதனால் தர்க்கத்திற்கும் விவாதத்திற்கும் போகாமல் அகண்டமான நம்பிக்கையோடு கூடிய பக்தியால் மட்டுமே நாம் உய்வடைய முடியும். இது பக்தி மார்க்கம். இதுவே உண்மையான சாதனை மார்க்கம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்