Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்ருஷி வாக்கியம் (82) - சாப்பாடு பற்றி தர்ம சாஸ்திரம் என்ன சொல்கிறது?

ருஷி வாக்கியம் (82) – சாப்பாடு பற்றி தர்ம சாஸ்திரம் என்ன சொல்கிறது?

rv2 7 - Dhinasari Tamil
உணவு விஷயத்தில் நம் தர்ம சாஸ்திரமும் வைத்திய சாஸ்திரமும் என்ன சொல்கின்றன என்று ஆராய்ந்து பார்த்தால் இரண்டும் ஒரே மாதிரி கூறுவதைக் காணமுடிகிறது.

அதாவது மதம் என்று அழைக்கப்படும் நம் தர்ம சாஸ்திரமும் மனிதனின் ஆரோக்கியத்திற்கு உதவும் வைத்திய சாஸ்திரமும் ஒரே கருத்துக்களையே கூறுகின்றன என்பதை காணும்போது நமக்கு விஞ்ஞானமே மதமாக உள்ளது என்பது தெளிவாகிறது.

போஜனம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய சில நியமங்களைக் கூறியுள்ளார்கள். பொதுவாக அவை அனைவரும் அறிந்தவையே! சுத்தமாக குளித்த பின் சாப்பிட வேண்டும். பரிசுத்தமாக சமைத்த உணவை இறைவனுக்கு படைத்து விட்டு உண்ண வேண்டும்.

அது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார். சமைத்து வெகுநேரம் ஆன உணவையோ ஊசிப்போன உணவையோ உண்ணக் கூடாது.

“பாவனையால் மாசடைந்த” உணவைக் கூட உண்ணக் கூடாது என்று ஒரு வாக்கியம் உள்ளது. இந்த கருத்து மகாபாரதத்தில் கூட காணப்படுகிறது.

கிருஷ்ண பரமாத்மாவை சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள். பாண்டவர்கள் கூறியவற்றை சபையில் கூறிய பின் கிருஷ்ணனுக்கு துரியோதனன் ‘ஆதித்தியம்’ அளிப்பதாக முன்வந்தான். கிருஷ்ணனுக்காக துச்சாதனனின் மாளிகையை சுத்தம் செய்து அனைத்து வசதிகளோடும் அங்கு ராஜபோஜனம் ஏற்பாடு செய்திருந்தான் துரியோதனன். கிருஷ்ணனை போஜனத்திற்கு வரும்படி அழைத்தான். ஆனால் கிருஷ்ணன் அதை மறுத்து விதுரனின் இல்லத்திற்குச் சென்றான்.

இங்கே கவனிக்க வேண்டியது உயர்ந்த ராஜபோஜனம் அங்கு கிடைத்த போதும் அதனை “பாவனையால் தீமையடைந்த” உணவாக கிருஷ்ண பரமாத்மா கருதினான். அதாவது நல்ல எண்ணத்தோடு பரிமாறும் உணவே சிறந்த உணவு. நல்ல உள்ளத்தோடு அளிக்கப்படாத போது ஏதோ வயிற்றை நிரப்பிக் கொள்ளலாம் என்று உணவு உண்டால் அது உடலினுள்ளே சூட்சுமமான பாதிப்பை ஏற்படுத்தும்.

“பக்தி கலுகு கூடு பட்டடைனனு சாலு!” என்ற கவி வேமனாவின் செய்யுளைக் கூட இந்த நேரத்தில் நாம் நினைவுகூற வேண்டும். உள்ளன்போடு அளிக்கும் சோறு ஒரு கவளமானாலும் போதும்.

வைத்திய சாஸ்திரத்தில் கூட இதுபோன்ற கருத்துக்கள் நிறைய உள்ளன. சிலச் சில நேரங்களில் உணவு உண்டால் அது உடம்புக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் விஷமாக மாறுகிறது என்று தெரிவிக்கிறார் சரகர்.

“காமக்குரோத சமாவிஷ்டோ மா புஞ்சேயாத் கதாசனா !” – இது வைத்திய சாஸ்திரத்தில் சரகர் கூறியுள்ள வாக்கியம்.

காமம் குரோதம் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகும்போது போஜனம் செய்தால் அது துஷ்ட அன்னமாக மாறுகிறது என்கிறார். அதாவது நம் உடலில் நிகழும் தீவிரமான காமவிகாரமோ கோபமோ ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதனால் ரத்தத்திலும் ஜீரண அமைப்பிலும் சில மாற்றங்கள் உண்டாகின்றன. அப்படிப்பட்ட நேரங்களில் உண்ட அன்னம் தீயதாக மாறுகிறது. இதனைக் கொண்டு உணர்ச்சிகளுக்கும் சாப்பாட்டிற்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்ள வேண்டும்.

அதேபோல் சாப்பாட்டு நேரத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று மனு ஸ்ம்ருதி விவரிக்கிறது.

“அன்னம் த்ருஷ்ட்வா ப்ரணம்யாதௌ ஆபோசானம் ச காரயேத் !”

“உணவை பார்த்ததுமே முதலில் அதை கைகூப்பி வணங்க வேண்டும்!” என்று கூறுகிறது மனுஸ்மிருதி.

“அன்னம் ப்ரம்மே திவ்ய தானாத்!” என்ற உபநிடத வாக்கியம் கூட இதனையே தெரிவிக்கிறது.

rv1 9 - Dhinasari Tamil

இது போன்றவற்றை சிறு வயது முதல் வழக்கமாக்கிக் கொள்வது நன்மை பயக்கும். முதலில் இறைவனை நினைக்க வேண்டும். அன்னத்தின் மீது கைவைத்து இறைவனின் நாமத்தையோ இறைவனின் மந்திரத்தையோ உச்சரிக்கும் போது அந்த அன்னம் அமிர்தமாகிறது. பெரிய பெரிய நைவேத்தியங்கள் போன்றவற்றை செய்து இறைவனுக்கு படைக்க முடியாவிட்டாலும் சாப்பிடும் முன் உணவை இறைவனுக்கு சமர்ப்பித்து விட்டு உண்டால் அதுவே சிறந்த நன்மையை ஏற்படுத்தும்!

குறைந்த பட்சம் இதைச் செய்ய முடிந்தால் கூட உண்ணும் உணவில் இறைவனின் அருள் பிரவேசிக்கிறது. அதனை உண்ணும் போது தெய்வீக அருளாக நம்மை அந்த அன்னம் பவித்திரம் செய்கிறது. இவ்விதமாக ஆகாரம் ஏற்கும் பழக்கத்தை பால்ய பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்கு கற்றுத் தர வேண்டியது பெற்றோரின் இன்றியமையாத கடமை.

“அன்னத்தை பார்த்ததும் நமஸ்காரம் செய்!” என்று மனு கூறியுள்ளாரென்றால், எந்த உணவால் பிராணனும் ஜீவிதமும் நிலைபெறுகிறதோ அதனை இறைவனின் சொரூபமாக தரிசிக்க வேண்டும் என்று எடுத்துக் கூறுகிறார். உணவை உண்ணும் போது நல்ல எண்ணங்களோடு ஏற்கவேண்டும்.

“அச்சிஷ்ணான்னம் அதிக்ளின்னம் சீதம் சுஷ்கம் ந காதயேத்!”

“அதிகம் சூடாக உள்ள உணவு, மிகவும் நனைந்து போன உணவு, மிகவும் குளிர்ந்து போன உணவு, காய்ந்து போன உணவு… இவற்றை உண்ணக் கூடாது”. இதுவும் சரகர் கூறியுள்ள வாக்கியமே!

“அஜல்பன் நஹசன் தன்மனா புஞ்சீதா !”
“அதிகமாகப் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் உண்ணக் கூடாது” என்கிறார். “தன்மனா புஞ்சீதா” – அதாவது ஏகாக்ர சித்தத்தோடு உண்ணவேண்டும். உண்ணும் உணவை ரசித்து உண்ண வேண்டும். சாப்பிடும் போது வேறு எந்த விஷயத்தைப் பற்றியும் நினைப்பதோ பேசுவதோ செய்தால் அன்னத்தை மனதால் ஏற்க இயலாமல் போகும்.

எதுவானாலும் சரி. ஒருமித்த மனதோடு ஏகாக்ரமாகச் செய்தால் அந்த வேலை அற்புதமான பலனை அளிக்கிறது அல்லவா? அதே போல் போஜனம் செய்வதைக் கூட கருத்தொன்றிச் செய்ய வேண்டும். “தன்மனா புஞ்சீதா” என்பதன் பொருள் இதுவே! இவ்விதமாக ஆராய்ந்து பார்த்தால் அன்னத்தை புஜிப்பதில் பவித்திர பாவனை மிகவும் அத்தியாவசியம் என்பது தெரிகிறது.

மகான் ஸ்ரீ ராம்சரண் என்ற ராம பக்தரான யோகியின் வாழ்க்கை முறை எப்படி இருந்ததென்றால் அவர் அரிசியை ஒவ்வொன்றாக எடுத்து ராமநாமம் சொல்லிக் கொண்டே பாத்திரத்தில் போடுவாராம். அவ்வாறு பொறுக்கி எடுத்த அரிசியை சமைத்து ராமனுக்கு நிவேதனம் செய்து பின் உட்கொள்வாராம். அவ்வாறு உண்ட உணவு “ராமான்னம்” ஆகிறது. ராமனின் நினைவு உள்ளமெங்கும் நிறைகிறது.

அதனால் உலகியல் முன்னேற்றம் வேண்டுமென்றாலும் ஆன்மீக முன்னேற்றம் வேண்டுமென்றாலும் நல்ல எண்ணங்களோடும் சத்பாவனையோடும் உணவை உண்ண வேண்டும் என்பதை ருஷி வாக்கியங்களின் சாரமாக ஏற்போமாக!

சத் பாவனை பகவத் சிந்தனையால் மட்டுமே கிடைக்கும் என்பதால் பகவானின் நினைவோடு அன்னமும் நீரும் ஏற்பவன் இகத்திற்குத் தேவையான ஆரோக்கியத்தையும் பரத்திற்குத் தேவையான ஞானத்தையும் மன சாந்தியையும் பெறுகிறான்!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,161FansLike
373FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,481FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

பள்ளித்தேர்வில் RRR படத்தைப் பற்றி கேட்கப்பட்ட கேள்வி! வைரல்!

ரசிகர்களும் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

நான் தில்லி பையன், ஹிந்தி சரளமாக பேசுவேன்.. சித்தார்த்! இந்த பொழப்புக்கு பானிப்பூரி விக்கலாம் வைச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

நடிகர் சித்தார்த் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறுவதில்லை. ஏனோ அந்தப் படங்கள்...

டான்-திரை விமர்சனம்..

லைக்கா மற்றும் எஸ்.கே. நிறுவனம் இணைந்து தயாரித்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இன்று வெளியிட்டுள்ள...

தந்தையின் பயோபிக்கில் தந்தை ரோலில் நடிக்க மறுத்த மகேஷ்பாபு!

நடிக்க மாட்டேன் என சட்டென மறுப்பு கூறி விட்டார் மகேஷ்பாபு.

Latest News : Read Now...