“அவர்களை நான் வணங்குகிறேன்! அவர்களுக்கு நான் நமஸ்காரம் செய்கிறேன்!” என்று சுபாஷிதம் எழுதிய பர்த்ருஹரி கூறுகிறார். “தேப்யோ நமஹ் கர்மஹே !” என்கிறார். யாருக்கு? சில குணங்களை விவரிக்கிறார். “இந்த குணங்கள் உள்ளவர்களை வணங்குகிறேன்” என்கிறார்.
இதனைக் கொண்டு பிறரால் வணங்கப்பட வேண்டுமென்றாலோ பிறருடைய வணக்கத்திற்கு உகந்தவராக இருக்க வேண்டுமென்றாலோ இந்த குணங்கள் இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த குணங்களை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்தால் உத்தமமான மனிதர்களாக மாற முடியும். ஒரு மனிதனாக தன்னைத்தானே உயர்த்திக் கொள்ள வேண்டுமென்றால் சில இயல்புகள் இருக்க வேண்டும். அப்போது சக மனிதர்களால் கௌரவ மரியாதைகளைப் பெற முடியும்.
அந்த குணங்கள் என்னென்ன என்பதைக் கூறி அப்படிப்பட்ட சத்புருஷர்களை நான் வணங்குகிறேன் என்கிறார் பர்த்ருஹரி.
“வாஞ்சா சஜ்ஜன சங்கதௌ பர குணே ப்ரீதி:
குரௌ நம்ரதா வித்யாயாம் வ்யசனம்
ஸ்வயோஷிதி ரதி: லோகாபவாதாத் பயம் !
பக்தி: சூலினி சக்தி ராத்மதமனே
ஸம்சர்க முக்தி: கலை:
ஏதே யத்ர வஸந்தி நிர்மல குணா:
தேப்யோ நம: குர்மஹே !!”
முதல் குணம் என்னவென்றால், “வாஞ்சா சஜ்ஜன சங்கதௌ” – ஸத்புருஷர்களோடு சாங்கத்தியம் கொள்ள வேண்டும். இது மிகச் சிறந்த லட்சணம். ஒரு நல்ல மனிதனுக்கு இருக்க வேண்டிய நல்ல குணம் சத் புருஷர்களோடு சேர்ந்திருக்க வேண்டும் என்ற கோரிக்கை!
எனவே மனிதன் எப்போதும் நல்ல மனிதர்களின் சகவாசத்தை விரும்பவேண்டும். ஆசைகளிலே உயர்ந்த கோரிக்கை சத் சாங்கத்தியம். யார் உயர்ந்த நடத்தை, உயர்ந்த ஞானம், தர்மம் எது அதர்மம் எது என்ற பகுத்தறிவு – இவற்றை கொண்டிருப்பார்களோ அவர்களே சத் புருஷர்கள்! அப்படிப்பட்ட நல்ல மனிதர்களின் நட்பு வேண்டும் என்று விரும்பவேண்டும்.
இரண்டாவது, “பர குணே ப்ரீதி:” ‘பிறரின் நற் குணங்களிடம் விருப்பம் கொண்டிருப்பது’. அதாவது மற்றவர்களின் நல்ல திறமைகளை அடையாளம் கண்டு மதிக்கக்கூடிய லட்சணம். இது சாதாரணமானவர்களிடம் இருக்காது. எப்போதும் பிறரின் தோஷங்களையே, குறைகளையே தேடிக்கொண்டிருப்பார்கள். அவ்வாறின்றி பிறரிடம் உள்ள நல்ல குணங்களைப் பார்த்து அவற்றின் மேல் விருப்பம் கொண்டு பாராட்டுவது சிறந்த குணம்.
இனி மூன்றாவது – “குரோ நம்ரதா:” – குருவிடம் பணிவோடு விளங்க வேண்டும். வினயத்தோடு விளங்க வேண்டும்.
நான்காவது, “வித்யாயாத் வ்யசனம்”. வித்யை மீது பற்று இருக்க வேண்டும். ‘வ்யசனம்’ என்றால் யார் எத்தனை எடுத்துச் சொன்னாலும் விடாத பழக்கம் என்று பொருள். சத் புருஷர்களிடம் அப்படிப்பட்ட வ்யசனம் வித்யை மீது இருக்கும். இன்னும் நிறைய கற்க வேண்டும் என்றும் கற்ற வித்தையை நன்கு அத்யயனம் செய்ய வேண்டும் என்றும் அத்யயனம் செய்யும் போது “இது போதும் போ!” என்ற அலட்சிய இயல்பு இல்லாமல் இருப்பது… இவை அனைத்தும் வித்யையில் வ்யசனம். இது உத்தமமான லட்சணம்.
இனி ஐந்தாவது, “ஸ்வயம் ஷிதி ரதி:” – இது மிக முக்கியமான அம்சம். உத்தம மனிதருக்கு தன் மனைவியின் மீது மட்டுமே தன்னுடையவள் என்ற எண்ணம் இருக்கும். மற்ற பெண்களிடம் மாத்ரு பாவனை கொண்டிருப்பார்கள். தன் மனைவியை மட்டும் பெண்ணாகப் பார்த்து பிற பெண்களை தாயாக பார்ப்பவர்கள் மட்டுமே சத் புருஷர்கள் எனப்படுவர். இது போன்ற குணங்களை சிறுவயதிலிருந்தே பிள்ளைகளுக்கு கற்பித்தால் பெண்களை கௌரவைக்க வேண்டுமென்ற இயல்பு ஏற்படும்.
இதுவரை பார்த்த ஐந்து குணங்கள்:- சத்சங்கத்தின் மீது வாஞ்சை, பிறரின் நற்குணங்களின் மீது ப்ரீத்தி. குருவிடம் பணிவு. வித்யையிடம் விடாமுயற்சி. தன் மனைவியிடம் மட்டுமே பெண் என்ற பாவனை. பிற பெண்களிடம் மாத்ரு பாவனை.
இனி ஆறாவது, “லோகாபவாதாத் பயம்”. அதாவது லோக அபவாதம்… உலகம் நிந்திக்குமே என்ற பயம் கொண்டிருப்பது. இது மிகவும் இன்றியமையாத குணம். உலகில் பிறர் நம்மை நிந்திக்காமல் கவனமாக இருக்க வேண்டும். உலகம் நிந்திக்கும்படியான வாழ்க்கை வாழக் கூடாது என்பது இதன் பொருள். எவ்வாறு வாழ வேண்டுமென்றால் அதர்ம வழியில் செல்வம் சேர்க்காமல், அதர்மம் செய்யாமல், அநீதியாக நடக்காமல் வாழ வேண்டும். ஆனால், “உலகம் எத்தனை நினைத்தாலும் பரவாயில்லை. என் விருப்பப்படி நான் இருப்பேன்!” என்று கூறுபவன் வழி தவறியவன் ஆகிறான். பிரஷ்டன் ஆகிறான். அதனால் பழிக்கு அஞ்ச வேண்டும்.
“பக்தி: சூலினி” – இது ஏழாவது குணம். ‘சூலி’ என்றால் சிவன். சிவனிடம் பக்தியோடு இருப்பது. இதுவும் ஒரு சுப லட்சணம். இங்கு சிவனிடம் பக்தி என்பது இறைவன் மேல் பக்தி என்று பொருள்படுகிறது. தெய்வபக்தி உத்தம லட்சணங்களில் ஒன்று. அப்படியின்றி, “என்னிடம் எல்லா நல்ல குணங்களும் உள்ளன. ஆனால் நான் கடவுளை நம்ப மாட்டேன்!” என்றால் அது தீய குணம். ஏனென்றால் அனைத்து நற்குணங்களும் எப்போது ஒளிவீசும்? ஆன்மீகத்தில் சிரத்தை இருந்தால்தான் ஒளிரும்!
அடுத்து, “சக்தி ராத்மதமனே!” சத் புருஷர்கள் சக்தியோடு விளங்க வேண்டும். எதில் சக்தி பெற்றிருக்க வேண்டும்? தன் மனதினை கட்டுப்படுத்துவதில் சக்தி பெற்றிருக்க வேண்டும். அப்படியின்றி பிறரை அடக்குவதில் சக்தியோடு இருப்பது நல்ல குணமல்ல. தன் மனதை அடக்கி ஆள்வதில் சக்தி கொண்டிருக்க வேண்டும்.
இனி, “ஸம்சர்கமுக்தி: கலை:” – மூர்க்கர்களோடு சினேகம் இல்லாமல் இருப்பது!. இது மிக இன்றியமையாத குணம். முதல் குணமாக சத் புருஷர்களோடு சிநேகத்தை விரும்புவதைக் கூறிய பர்த்ருஹரி, இறுதி குணமாக துஷ்டர்களிடம் ஸ்நேகமில்லாமல் இருப்பதைக் கூறுகிறார். மத்தியில் மீதி நற் குணங்கள் பற்றி விவரித்துள்ளார்.
இவை நிர்மலமான குணங்கள். இவை யாரிடம் இருக்குமோ அவர்களை நான் வணங்குகிறேன்! என்கிறார்.
உத்தம மானுடன் என்பதற்கான அடையாளத்தை இந்த குணங்கள் வழியே அற்புதமாக விளக்கியருளிய மகரிஷிக்கு சமமான சுபாஷிதக்காரருக்கு வந்தனம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்