More

  To Read it in other Indian languages…

  பெரியவா கால்பட்டதும் நாகப்பட்டினத்தில் -நாலு நாள் கொட்டித் தீர்த்த மழை!

  “வறட்சியால் ,மழையின்மையால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டணத்தில்-நாலு நாள் தொடர்ந்து கொட்டிய மழை

  (பெரியவாளின் கால்பட்ட புனித சம்பவம்.)-

  (இன்று குரு பூர்ணிமா-16-07-2019-சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம்)

  (மறுபதிவு-குருபூர்ணிமா ஸ்பெஷல்)

  கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
  புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
  நன்றி- குமுதம் பக்தி
  (சுருக்கமான ஒரு பகுதி)

  1941-42ல் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுசரிக்க தங்களோட ஊரில் பெரியவா தங்கப்போறர் என்று தெரிஞ்சதும் நாகப்பட்டணத்துக் காராளுக்கெல்லாம் பரமானந்தமாயிடுத்து.அதுக்குக் காரணம் வறட்சி. பூமி வறண்டு நிலமெல்லாம் வெடிச்சிருந்தது. குளமெல்லாம் வத்தி மைதானம் மாதிரி ஆகியிருந்தது.

  பஞ்சமும்,வறட்சியும் நிலவின விஷயம் பெரியவாளுக்கு தெரியவந்தாலும் தன்னோட திட்டத்தை மாத்திக்காம அங்கேதான் முகாமிடணும் என்று சொல்லிவிட்டார். எங்கேயோ அலைஞ்சு திரிஞ்சு ஸ்நானம் பண்றதுக்குத் தேவையான ஜலத்துலேர்ந்து மத்த எல்லாத் தேவைகளுக்குமான தீர்த்தத்தைக் கொண்டுவந்து தர்றதுக்கு ஏற்பாடு செஞ்சு குடுத்தா,ஊர்க்காரா.

  ரெண்டுமூணுநாள் கழிஞ்சது. நாலாவது நாள் காலம்பற நீலாயதாக்ஷி அம்மன் கோயிலோட சிவாசார்யாரும் நிர்வாகியும் பெரியவாளை தரிசிக்க வந்தா. அவாளோட ஊர்ப் பெரியமனுஷா சிலரும் வந்திருந்தா.எல்லாரோட முகத்துலயும் கவலை ரேகை படிஞ்சிருந்தது, பட்டவர்த்தனமாவே தெரிஞ்சுது.

  வந்தவா, ஆசார்யாளை தரிசிச்சு சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணினா. அவாளை ஆசிர்வதித்த ஆசார்யா,

  “எல்லாருமா சேர்ந்து என்கிட்டே ஏதோ விஷயத்தை சொல்றதுக்காக வந்திருக்கறாப்ல தெரியறது? என்ன சேதி?” அப்படின்னு கேட்டார்.

  “பெரியவா..உங்களுக்கு தெரியாதது இல்லை. நாலஞ்சு வருஷமாகவே இங்கே மழை இல்லை. ஊரே வறண்டு கிடக்கு. போனவருஷம் வரைக்கும் எப்படியோ சிரமப்பட்டு கோயில் திருவிழாவை நடத்திட்டோம். இந்த வருஷம் அதுக்கு எந்த வகையிலயும் சாத்தியமே இல்லாத சூழ்நிலை. அதான் திருவிழாவை நிறுத்திடலாம்னு தோணுது. நாங்களா தீர்மானிக்கறதைவிட உங்ககிட்டே சொல்லிட்டு அப்புறம் தீர்மானிக்கலாம்னுதான் வந்திருக்கோம்!” தயங்கி தயங்கி சொன்னா எல்லாரும்.

  எல்லாத்தையும் கேட்டுண்ட ஆசார்யா, மௌனமா கையை உயர்த்தினார். “அவசரப்பட வேண்டாம். கொஞ்சம் பொறுத்துப் பார்த்துட்டு தீர்மானிக்கலாம்!” சொல்லிட்டு கல்கண்டு பிரசாதம் குடுத்து அவாளை ஆசிர்வாதம் செஞ்சார்.

  அன்னிக்கு மத்தியானம் உச்சி வெயில் சுட்டுண்டு இருக்கிற சமயத்துல முகாம்லேர்ந்து புறப்பட்டு எங்கேயோ வெளியில போனார் பரமாசார்யா. எல்லாரும் என்ன காரணம்? எங்கே போறார்னு புரியாம பார்த்துண்டு இருக்கறச்சேயே மளமளன்னு நடந்துபோய், பக்கத்துல இருந்த கோயில் குளத்துல இறங்கினார்.

  குளம் வறண்டு பெரிய மைதானம் மாதிரி இருந்ததோட, பாதம் கொப்பளிக்கற அளவுக்கு சூடேறி இருந்தது.அதுல இறங்கின பெரியவா ,கோயில் பிராகாரத்துல அடிப்பிரதட்சணம் செய்யற மாதிரி தன்னோட பாதத்தை ஒவ்வொரு இடமா பதிச்சு, மெதுவாக நடந்தார். ஒரு இடத்துல நின்னவர், சட்டுன்னு கால் விரலால ஒரு இடத்துல கீறுறாப்புல தோண்டினார். அந்த இடத்துலேர்ந்து கொஞ்சமா ஜலம் வந்தது .உடனே அந்த ஜலத்துல தன்னோட வலது பாதத்தை வைச்சவர்,இடது காலைத் தூக்கிண்டு மாங்காடு காமாட்சி ஒத்தக்கால்ல தவம் இருக்கிறமாதிரி ஒரு சில நிமிஷம் நின்னு ஆகாசத்தை உத்துப் பார்த்தார். அடிச்ச வெயில்ல கொஞ்ச நாழியிலேயே பெரியவா பாதம் பதிஞ்சிருந்த இடத்துல இருந்த தண்ணியும் வத்திடுத்து.

  யார்கிட்டேயும் எதுவும் பேசலை பெரியவா கொஞ்ச நேரத்துல அங்கேர்ந்து புறப்பட்டு முகாமுக்கு வந்துட்டார்.

  அன்னிக்கு சாயந்திரம் வானத்துல இருந்த வெள்ளை மேகம் எல்லாம் திடீர்னு கருநீலமா மாறித்து. ஒண்ணா சேர்ந்து திரண்டு கருமேகமாச்சு . மளமளன்னு மழையா பொழிய ஆரம்பிச்சுது. ஒரு நாள் ரெண்டு நாள் இல்லை. தொடர்ந்து நாலுநாள் மழை கொட்டித் தீர்த்து ஊர் முழுக்க வெள்ளப் ப்ரவாகமா ஓடித்து, கோயில் குளம் உட்பட.அந்த ஊர்ல உள்ள எல்லா நீர்நிலையும் நிரம்பி வழிஞ்சுது.ஊரும், ஊர்மக்களோட மனசும் பூரணமா குளிர்ந்தது.

  கோயில்காரா மறுபடியும் பெரியவாளைப் பார்க்க வந்தா. “அதான் மழை பெய்ஞ்சு குளமெல்லாம் ரொம்பிடுத்தே, அப்புறம் என்ன ,ஜாம்ஜாம்னு திருவிழாவை நடத்துங்கோ!” ஆசிர்வதிச்சார் ஆசார்யா.

  வறட்சியா இருக்கிற ஊர்னு தெரிஞ்சும் நாகப்பட்டணத்துல வியாசபூஜை பண்ணணும், சாதுர்மாஸ்ய விரதம் இருக்க முகாம் இடணும்னு பெரியவா தீர்மானிச்சது ஏன்? அங்கே அங்கே நிலவற வறட்சியை நீக்கவேண்டிய பணி தனக்கு இருக்குன்னு முன்பே அவருக்கு தெரியுமோ? வத்திப் போயிருந்த குளத்துல பெரியவா காலால் கீறினதும் பாதம் நனையற அளவுக்குத் தண்ணி எங்கேர்ந்து வந்தது?

  வருணபகவான் தன்னோட வரவே அப்பவே அறிவிச்சுட்டாரோ?

  இதுக்கெல்லாம் விடை..நாகை நீலாயதாக்ஷிக்கும் மகாபெரியவாளுக்கும் மட்டும் தெரிஞ்ச ரகசியம்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  1 × three =

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Follow Dhinasari on Social Media

  19,033FansLike
  388FollowersFollow
  83FollowersFollow
  0FollowersFollow
  4,645FollowersFollow
  17,300SubscribersSubscribe
  -Advertisement-
  Exit mobile version