எங்கிருந்தோ வந்த வெள்ளைக்காரருக்கு அனுக்ரஹம் செய்கிறீர்கள்….எங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை!

“எங்கிருந்தோ வந்த வெள்ளைக்காரருக்கு அனுக்ரஹம் செய்கிறீர்கள். அவரும் பெரியவாளைப் பார்த்ததுமே கடவுளைப் பார்த்த மாதிரி ஆனந்தப்படுகிறார்.ஆனால் பக்கத்தில் உள்ள எங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லையே? அந்த ஞானம் வரவில்லையே?”-தொண்டர்கள்.

“நீங்கள் எல்லோரும் ஞானியாகிவிட்டால் , எனக்கு யார் ஸ்நானம் பண்ணி வைப்பார்கள்? சாதம் போடுவார்கள்?” பெரியவா.

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

ஸ்ரீ பெரியவாள் ஓரிக்கையில் இருந்தபோது, ஒரு வெள்ளைக்காரர் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தார். அவர் டெல்லியிலிருந்து மும்பை போவதற்குப் பிளேனில் டிக்கெட் கேட்டார். கிடைக்கவில்லை. உடனே சென்னைக்குச் செல்லும் விமானத்தைப் பிடித்தார் .மீனம்பாக்கம் வந்து சேர்ந்தார். விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்ததும், ‘எங்கே போவது’ என்று கேள்விக்குறி எழுந்தது.

அங்கிருந்த டாக்ஸி டிரைவரிடம், “இங்கு யாராவது ரிலீஜியஸ் லீடர் (மதத் தலைவர்) இருக்கிறாரா?” என்று கேட்டார்.

“காஞ்சிபுரத்தில் சங்கராசார்ய ஸ்வாமிகள் இருக்கிறார்” என்று பதில் வந்தது.

“உடனே என்னைக் காஞ்சிபுரத்தில் கொண்டு போய் விடு” என்று சொன்ன வெள்ளைக்காரர் காரிலேயே காஞ்சிபுரம் வந்துவிட்டார்.

ஸ்ரீ பெரியவாள் அந்தச் சமயம் ஓரிக்கை என்ற இடத்தில் ஒரு கீத்துக் கொட்டகையில் – பிட்சை செய்து விட்டு விச்ராந்தி பண்ணிக் கொண்டு இருந்தார்கள்.

அந்த வெளிநாட்டுக்காரர் ஸ்ரீ பெரியவாளைப் பார்க்க ரொம்ப ஆவலாய் இருந்தார்.

நாங்கள் அவரிடம், ” Please wait for some time, Swamiji is taking rest” என்று சொன்னோம்.

சிறுது நேரம் கழித்துப் பெரியவாள் எழுந்து ஆசமனம் செய்தார்கள்.விபூதி தரித்துக் கொண்டார்கள். “அவர் வந்து விட்டாரா?” என்று பலமுறை கேட்டார்கள். அப்போது அவ்விடத்தில் நாகலட்சுமி என்ற பக்தையும் இன்னும் சில பெண்களும் தான் இருந்தார்கள். வேறு யாரும் இல்லை.

நாங்கள் பெரியவாளிடம், “நாகலட்சுமி வகையறா உட்கார்ந்து இருக்கிறார்கள். வேறு புதியவர் யாரும் இல்லை என்றோம்.

பெரியவாள் மறுபடியும், “அவர் வந்து விட்டாரா?’ என்றார்கள்.

“ஒரு வெள்ளைக்காரர் வந்து இருக்கார்.”

“ஆமாம்! அவரைத்தான் கேட்டேன்” என்றார்கள், பெரியவாள்.

அந்த வெள்ளைக்காரரைப் பெரியவாளிடம் அழைத்து வந்தோம். அவருக்குத்தான் என்ன பக்தி! என்ன சந்தோஷம் ரொம்பவும் பிரியமாகவும்,அன்புடனும் பெரியவாளின் பக்கத்தில் -ரொம்பப் பக்கத்தில் – வந்து உட்கார்ந்து கொண்டார்.’அப்படிச் செய்யக் கூடாது ‘ என்று அவரிடம் சொல்வதற்காக நாங்கள் அவரை நெருங்கினோம்.

அப்போது பெரியவாள், “அங்கேயே உட்காரட்டும் .ஒன்றும் சொல்ல வேண்டாம்”என்று ஜாடை காட்டி தடுத்து விட்டார்கள்.

வெள்ளைக்காரர் மிகவும் சாந்தமாகவும் ஆனந்தமாகவும் பெரியவாளின் முகத்தையே பார்த்துக் கொண்டு புளகாங்கிதம் அடைந்தார்.

“ஏன் இவ்வளவு ஆனந்தப்படுகிறீர்கள்?” என்று அந்த வெள்ளைக்காரரைக் கேட்டோம்.

“Didn’t you see the light there? என்று கேட்ட வெள்ளைக்காரர் தொடர்ந்து,
“Is it the Sankaracharya referred by Paul Brunton? My god! My god!” என்று சொல்லி பேரானந்தப்பட்டார்.

ஸ்ரீ பெரியவாள் சுமார் 45 நிமிடங்கள் வெள்ளைக்காரருக்குக் காட்சி கொடுத்தார்கள்.

“The purpose for which you came to India is over. Your goal is over, Get love” என்று அவரிடம் சொல்லச் சொன்னார்கள், சொன்னோம்.

அந்த வெள்ளைக்காரரோ பெரியவாளின் தரிசனத்தில் மயங்கிப் போய் விட்டார். “நான் சில தினங்கள் இங்கு இருக்கணும்” என்று அனுமதி கேட்டார்.

பெரியவாளோ. “அதெல்லாம் வேண்டாம். ஸ்டார்ட் இம்மீடியட்லி” என்று சொல்லி ஒரு ஆரஞ்சு பழத்தைக் கொடுத்து அவரை அனுப்பி விட்டார்கள்.
அவர் சென்ற பிறகு நாங்கள் பெரியவாளைக் கேட்டோம்.

“எங்கிருந்தோ வந்த வெள்ளைக்காரருக்கு அனுக்ரஹம் செய்கிறீர்கள். அவரும் பெரியவாளைப் பார்த்ததுமே கடவுளைப் பார்த்த மாதிரி ஆனந்தப்படுகிறார்.ஆனால் பக்கத்தில் உள்ள எங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லையே? அந்த ஞானம் வரவில்லையே?”

பெரியவாள், “நீங்கள் எல்லோரும் ஞானியாகிவிட்டால் , எனக்கு யார் ஸ்நானம் பண்ணி வைப்பார்கள்? சாதம் போடுவார்கள்? ஆகவே,உங்களுக்கு இப்போது எதுவும் தெரியவேண்டாம்”என்று புன்னகையுடன் சொன்னார்கள்.

பல ஜன்மங்களில் புண்ணியம் செய்து இருந்தால்தான், நம்மால் பெரியவாளைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும்.

“எங்கிருந்தோ வந்த வெளிநாட்டார் செய்த புண்ணியத்தில், ஆயிரத்தில் ஒரு பங்கு கூட நாம் செய்யவில்லை?” என்று அணுக்கத் தொண்டர்களான நாங்கள் ஆதங்கப்பட்டு பேசிக் கொண்டோம்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...