மந்திர சித்தியின் மகிமை தெரியணுமா?!

“மந்திர சித்தியின் மகிமை தெரியணுமா?”

( “மந்திர சித்தி ஆயுட்டுத்தா இல்லியாங்கறதை ஜபம் பண்றவா அனுபவ சித்தாந்த்தமா தான்  தெருஞ்சுக்க முடியும்! ஒரு சந்தர்ப்பதுலே ஜபம் பண்ணி உபாசிக்கிறவாளுக்கு தான் இது தெரியும்–(ந்ருசிம்ஹ பாரதி ஸ்வாமிகள் கதையைச் சொல்லி பிரம்மச்சாரி இளஞன் சங்கரனின் சந்தேகத்தைப் போக்கிய பெரியவா)

கட்டுரையாளர்-எஸ். ரமணி அண்ணா நன்றி-சக்தி விகடன்-2006

ஒரு முறை காஞ்சி மகா ஸ்வாமிகளை தரிசிக்க வந்திருந்தான் பிரம்மச்சாரி இளைஞன் ஒருவன். பெரியவாளை நமஸ்கரித்து எழுந்தான்.

அவனை உற்று நோக்கிய ஸ்வாமிகள், நீ குளித்தலை சங்கரன் தானே ? சௌக்கியமா இருக்கியா என்று விசாரித்தார்.

“ஒங்க ஆசீர்வாததுலே சௌக்கியமா இருக்கேன் பெரியவா!” என்றான் சங்கரன்.

“அது சரி, நோக்கு இப்போ என்ன வயசாகறது ?” – இது ஸ்வாமிகள்.

“முப்பது பெரியவா” என்றான் சங்கரன்.

உடனே பெரியவா, “கல்யாணம் பண்ணிக்காம இப்படியே பிரம்மச்சாரியா காலத்தை ஒட்டிடலாமுனு தீர்மானிச்சுடையாக்கும். !” என்று சிரித்தார்.

“ஆமாம் பெரியவா” என்றான் சங்கரன்.

“சரி..சரி. நீ இப்போ வந்திருக்கறதிலேயே ஏதாவது விசேஷம் உண்டா ? விஷயம் இல்லாம நீ வர மாட்டியே !” என்று சொல்லி விட்டு சிரித்தார் ஸ்வாமிகள்.

உடனே சங்கரன், “ஆமாம் பெரியவா ! எனக்கு ஏற்பட்டு இருக்கிற ஒரு சந்தேகத்தை நிவர்த்தி பண்ணிண்டு போகலாம்னு வந்தேன் !” என்றான்.

ஸ்வாமிகள், “அப்படியா! சொல்லு, சொல்லு ! நோக்கு அப்படி என்ன பெரிய சந்தேகம் ? என்று கேட்டார்.

மந்திர ஜபம் சம்பந்தமா ஒரு சந்தேகம் பெரியவா…” என்று சொன்னான் சங்கரன்.

உடனே ஸ்வாமிகள் அவசரமாக, “மந்திர ஜபம் சம்பந்தமானதுனா…நீ ஏதாவது மந்திர ஜபம் பண்ணறயா என்ன ?” என்று கேட்டார்.

“ஆமாம் பெரியவா!” – இது சங்கரன்.

“ஓஹோ…உபதேசம் ஆகியீருக்கோ ?”

“ஆயிருக்கு பெரியவா.”

“பெரியவா (உபதேசம் பண்ணியவர்) யாரோ” ?

“மைசூர் யக்ஞநாராயண கனபாடிகள் !” – சங்கரன்.

“பேஷ்! ரொம்ப வாசிச்சவா. என்ன மந்திரமோ ?” என்று கேட்டார் ஸ்வாமிகள்.

சங்கரன் வாயைத் திறப்பதற்குள் ஸ்வாமிகள், “இரு..இரு . நீ மந்திரத்தை சொல்லிடப்படாது! அது ரகசியமா ஒன்கிட்டேதான் இருக்கணும். எந்த தேவதா பரமான மந்திரம்னு மட்டும் சொல்லு” என்று உத்தரவிட்டார்.

உடனே சங்கரன், “ஹனுமத் உபாசனா பரமான மூல மந்திரம் பெரியவா” என்றான்.

“சரி! இந்த மூல மந்த்ர ஜபத்திலே நோக்கு நிவர்த்தி பண்ணிக்க வேண்டிய சந்தேகம் என்ன ?”

“இல்லே பெரியவா…இந்த மந்திரம் உபதேசமான இருவத்து மூணாம் வயசிலேருந்து கடுமையா விதிப்படி ஜபிச்சிண்டு வர்றேன்! ஏழு வருஷமா ஜபிக்கிறேன் பெரியவா. ஆனா ஒண்ணுமே தெரியல்லே” என்றான்.

“ஒண்ணுமே தெரியலேன்னா ?” என்று வியப்புடன் கேட்டார் ஸ்வாமிகள்.

உடனே சங்கரன், “இல்லே பெரியவா ! அந்த மந்திரம் ‘நேக்கு சித்தி ஆயிடுத்தா இல்லியா’ங்கறது தெரியலியே பெரியவா!” என்றான் குரலில் வருத்தத்துடன்.

ஸ்வாமிகள் சற்றும் தாமதிக்காமல், “இப்ப அதைத் தெரிஞ்சுண்டு என்ன பண்ணப் போறே நீ? அது போகட்டும்.

நீ ஜபத்தை ஆத்மார்த்ததுக்காக பண்றயா? இல்லே…எதாவது காம்யார்தமா (காரணத்தை உத்தேசித்து) பண்றயா?” என்று வினவினார்.

உடனே சங்கரன் “ஆத்மார்த்ததுக்கு தான் பண்றேன் பெரியவா. இருந்தாலும் மந்திர சித்தி ஆகி அந்த தேவதையின் கிருபை கிடைச்சுடுத்தாணு எப்படி தெரிஞ்சுகரதுனு புரியலே. நீங்க தான் அதைச் சொல்லணுமுன்னு பிரார்த்திக்கிறேன்” என்று வினயத்துடன் கண்களில் நீர் மல்கச் சொன்னான்.

உடனே ஸ்வாமிகள், “மந்திர சித்தி ஆயுட்டுத்தா இல்லியாங்கறதை ஜபம் பண்றவா அனுபவ சித்தாந்த்தமா தான் தெருஞ்சுக்க முடியும்! ஒரு சந்தர்ப்பதுலே ஜபம் பண்ணி உபாசிக்கிறவாளுக்கு தான் இது தெரியும் சங்கரா !” என்று வாத்சல்யத்துடன் சொன்னார்

சங்கரன் சமாதானம் அடையவில்லை. “இல்லே பெரியவா…நேக்கு அனுபவ சித்தான்த்தமெல்லாம் இது வரை ஏற்படலை. ஒண்ணும் புரியவுமில்லை. ஜபத்தை மாத்திரம் குரு சொன்னபடி ஏழு வருஷமா பண்ணிண்டு வர்றேன்! சித்தி ஆயிடுத்தா இல்லியான்னு தெரிஞ்சுக்க முடியலை. மனசு சில நேரம் ரொம்ப ஆயாசப்படறது பெரியவா…இதை நேரடியா தெரிஞ்சுக்க ஏதாவது வழி இருந்தா சொல்லணும் !” என்று இரு கை கூப்பி கிழே விழுந்து நமஸ்கரித்தான் சங்கரன்.

ஆச்சார்யாள் சற்று நேரம் மௌனமாக இருந்தார். சங்கரனின் குழப்பம் அவருக்கு புரிந்தது. அவனுக்கு இதை எடுத்துக்க் கூறி புரிய வைக்க வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டார். சங்கரனை கிழே உட்காரச் சொன்னார். ஆச்சார்யாள் பேச ஆரம்பித்தார்.

“பல வருஷங்களுக்கு முன்னால் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்திலே ந்ருசிம்ஹ பாரதி ஸ்வாமிகள் என்று ஒரு பெரிய மகன் பீடாதிபதியா இருந்தார். ஒரு நாள். அந்த ப்ராந்தியந்தை சேர்ந்த மதத்து சிஷ்யன் ஒருவன் ஸ்வாமிகளை தரிசிக்க வந்தான். வந்தவன் வெறுமனே வரவில்லை. இப்போ என் கிட்டே கேட்ட இதே கேள்வியை சுமந்துண்டு வந்திருந்தான்.

ஸ்வாமிகளை நமஸ்காரம் பண்ணிவிட்டு, கையில் கொண்டு வந்திருந்த கொய்யா பழங்களை ஸ்வாமிகளிடம் சமர்ப்பித்தான்.

“வா…சௌக்கியமா ? என்ன வேணும் ?” என்று அன்போடு விசாரித்தார் ந்ருசிம்ஹ பாரதி ஸ்வாமிகள். சிஷ்யன் பவ்யமாக சொன்னான். ‘ஸ்வாமி எனக்கு ஒரு மந்திரம் உபதேசம் ஆகி ஜபிச்சுண்டு வர்றேன் ! பல வருஷமா ஜபிக்கிறேன். அந்த மந்திரம் சித்தி ஆகி விட்டதானு தெரிஞ்சுக்க முடியலே ! எப்படி தெரிஞ்சுக்கறது ஸ்வாமி ?’

உடனே ஸ்வாமிகள், ‘நீ பாட்டுக்கு விடாம ஆத்மார்த்தமா ஜபத்தை விடாம பண்ணிண்டு வா ! சித்தி பலனை அந்த தேவதையே தானாக அனுக்ரகிக்கும் !” என்று சமாதானம் கூறினார்.

ஸ்வாமிகளோடஇந்த பதில் சிஷ்யனுக்கு திருப்தி தரலே ! எனவே, அவன் ஸ்வாமிகளை விடவில்லை. ‘ இல்லே ஸ்வாமி ! மந்திரம் சித்தி ஆயிடுதுன்கறதை நானே உணர்ந்து தெரிஞ்சுக்கணும் ! அதற்கு ஒரு வழி சொல்லணும். பிரார்த்திக்கிறேன் !” என்றான்.

அவனுடைய மனோ நிலையை புரிந்து கொண்டார் ஸ்வாமிகள். அவனை அருகில் அழைத்தார்.

‘கவலைப்படாதே கொழந்தே. அதுக்கும் ஒரு வழி இருக்கு !” என்றார் ஸ்வாமிகள் உற்சாகத்தோடு. ‘மந்திர சித்தியை தெரிஞ்சுக்க ஒரு வழி இருக்கா ? உடனே அதை அநுக்க்ரஹிக்கநும் ஸ்வாமி !” என்று அவசரப்பட்டான் சிஷ்யன்.

உடனே ந்ருசிம்ஹ பாரதி ஸ்வாமிகள் சிரிச்சுண்டே சொன்னார். “தினமும் நீ ஜபம் பண்ண ஆரம்பிக்கறச்சே ஒரு மரப் பலகையை போட்டுண்டு அதுக்கு மேலே நிறைய நெல்லைப் பரப்பி விடு ! அதுக்கும் மேல ஒரு வஸ்திரத்தைப் போட்டுண்டு உட்காந்து ஜபம் பண்ண ஆரம்பி ! பிரதி தினமும் இப்படி பண்ணிண்டு வா ! என்னிக்கி நீ ஜபம் பண்றச்சே பலகை மேலே பரப்பி இருக்கிற நெல் மணிகள் தானாகவே பொரியறதோ அன்னிக்கு ஒனக்கு ஒன மந்திரம் சித்தி ஆயிட்டதா அர்த்தம்…என்ன புரியறதா ?’

சிஷ்யனுகுப் புரிந்தாலும், ‘இது சாத்தியமான காரியமா ? ஸ்வாமிகள் நம்மை திருப்தி படுத்த இப்படிச் சொல்கிறாரா ?’ என்று குழம்பியவன். யாருமே எதிர்பார்க்காத ஒரு கேள்வியை ஸ்வாமிகளைப் பார்த்து கேட்டு விட்டான்.

குருநாதர் என்னை ரொம்ப மன்னிக்கணும். தெரிஞ்சுக்கணும்னு ஆசையோடு தான் இதைப் பிரார்த்திக்கிறேன். குரு ஸ்தானத்துலே இருக்கறவாளை பரீட்சைப் பண்ணறதா நெனசுக்கப்படாது ! கண்ணாலே பார்க்கணும்னு ஒரு ஆசை தான்…வேற ஒண்ணுமில்லை. ஸ்வாமிகள் இப்படி பலகை மேலே வஸ்திரத்தைப் போட்டு ஒக்கார்ந்து ஜபம் பண்ணி…நெல்..பொறி…’ என்று முடிப்பதற்குள்.

‘நீங்க அப்படி உட்கார்ந்து ஜபம் பண்ணி இது வரைக்கும் எப்பவாவது நெல் பொரிஞ்சுருக்கானு தெரிஞ்சுக்க ஆசைபடறே ! அவ்வளவு தானே ?’ என்று சிரித்த ஸ்வாமிகள், உடனே அங்கேயே ஒரு பலகையை கொண்டு வரச் சொல்லி கிழக்கு முகமாகப் போடச் சொன்னார் ! அதன் மேலே நிறைய நிலைப் பரப்பச் சொன்னார். தனது வஸ்திரத்தை அதன் மேல் போட்டு பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடினார். அங்கு ஏகக் கூட்டம் கூடி விட்டது!

சில வினாடிகள் தான். திடீர் என்று பலகையின் மேல் பொரபோரவென்று நெல் பொறிகிற சப்தம். லேசாகப் புகையும் வெளிப்பட்டது! ஸ்வாமிகள் எழுந்தார். நெல் மேல் போட்டிருந்த வஸ்திரத்தை எடுத்தார். பலகையின் மேல் வேலை வெளேர் என்று நெற்பொறிகள்! கூட்டம் பிரமிப்புடன் வியந்தது!

ந்ருசிம்ஹ பாரதி ஸ்வாமிகள் கேள்வி கேட்ட சிஷ்யனைப் பார்த்தார். கேவிக் கேவி அழுதபடியே நின்றிருந்தான் அவன். ஒருவருக்கும் பேச நா எழவில்லை !” மகா ஸ்வாமிகள் இந்தச் சம்பவத்தை சொல்லி முடித்தார். சங்கரன் கண்களிலும் நீர். பிரமித்துப் போய் நின்றிருந்தான்.

சற்று பொருத்து சங்கரன், “பெரியவா…நீங்க..” என்று ஏதோ ஆரம்பிக்க, இடைமறித்த மகா ஸ்வாமிகள், ‘என்ன சங்கரா…பெரியவா…நீங்க அந்த மாதிரி பலகையிலே நெல்லைப் பரப்பி ஒக்காந்து ஜபம் பண்ணி பொரிச்சுக் காட்டறேளா?’ னு கேக்கப் போறியா என்று சிரித்தார்.

சங்கரன் சாஷ்டாங்கமாக மஹா ஸ்வாமிகளின் பாதத்தில் விழுந்து வணங்கி, “போதும் பெரியவா…மந்திர சித்தியோட மகிமையை இந்த அளவுக்கு நீங்க விளக்கிச் சொல்லி நான் புரிஞ்சுண்டதே போதும். என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கோ. நான் புறப்படறேன்!” என்று தெளிவடைந்தவனாக ஆச்சாரியாளிடம் விடைபெற்றான் !

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...