கண்ணன் வரவுக்காக ஏக்கம்!

குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியில் (ஆறாம் திருமொழி) வரும் பாசுரம் இது. இதில், கண்ணன் ஒரு சிறுமியை நோக்கி, “நீ யமுனையாற்றின் மணற்குன்றிலே போய் நில், நான் அங்கே வருகிறேன்’ என்று சொன்னான். அவ்வாறே அவளும் அங்கே போய் விடியுமளவும் நின்றாள். ஆனால் கண்ணன் வரவில்லை. அதனால், வருத்தம் மிகக் கொண்டு திரும்பினாள். மற்றொரு நாள் அவனைக் கண்ட போது தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினாள் இவ்வாறு. “அநியாயமாய் உன் பொய்யைக் கேட்டு மோசம் போனேன். கனவிலும் பொய் சொல்லி அறியாத வஸýதேவர் வயிற்றில் பிறந்த நீயும் உன் தந்தையைப் போல் இருப்பாய் என்று நம்பிக் கெட்டேனே’ என்றவாறு கண்ணனிடம் கூறினாளாம். ஏர் மலர்ப் பூங்குழல் ஆயர் மாதர் எனைப் பலர் உள்ள இவ் ஊரில் உன்தன் மார்வு தழுவுதற்கு ஆசையின்மை அறிந்தறிந்தே உன்தன் பொய்யைக் கேட்டு கூர் மழை போல் பனிக் கூதல் எய்திக் கூசி நடுங்கி யமுனை யாற்றில் வார் மணற் குன்றிற் புலர நின்றேன் வாசுதேவா உன் வரவு பார்த்தே. கண்ணபிரானே அழகிய பூக்களை அணிந்த வாசனை மிக்க கூந்தலையுடைய இடைப் பெண்கள் எத்தனையோ பேர் இருக்கின்ற இந்தத் திருவாய்ப்பாடியில் உன் மார்புடன் அணைவதற்கு ஆசையில்லாமல் இருக்கின்றேன். இருந்தும் உன் பொய்யான வார்த்தைகளைக் கேட்டு, அவற்றை மெய்யென மயங்கினேன். அதனால்தான், மழை போல் பெய்யும் பனியால் உருவான குளிரில் நடுங்கி, யாரும் பார்த்து விடுவார்களோ என்று கூச்சமடைந்து நின்றேன். அதுவும், யமுனை நதியில் ஒரு மணற் குன்றிலே உன் வரவை எதிர்பார்த்துக் கொண்டு பொழுது விடியும் வரை நான் அங்கேயே காத்து நின்றேனே… என்று தன் ஏமாற்றத்தைச் சொல்கிறாள் இந்த ஆயர் சிறுமி.