spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்மகா பெரியவர் மகிமைகருணைக் காஞ்சி கனகதாரை – பாகம் 8

கருணைக் காஞ்சி கனகதாரை – பாகம் 8

“இந்த நாள் ஃபாஷனுக்கு நாங்க இருந்த தினுஷு ரொம்ப தூரந்தான்; அதுவும் அம்மா வெறும் நாள்லயே ஏறக்கொறைய தெவச மடி பாக்றவதான்-னாலும் அந்தக் கால தசைக்கு அப்பா இந்த மாதிரி விஷயத்துல கொஞ்சம் கொஞ்சம் ‘முற்போக்கு’ன்னு சொல்ரேளே, அந்த மாதிரி. இப்டி இருக்கற எடங்கள்-ல நெருப்பாட்டம் ஆசாரமாயிருக்கிறவாளுக்கு ரொம்ப ச்ரமமும் எரிச்சலுமாத்தானே இருக்கும்? அண்ணா செறு வயசானாலும் நெருப்பாட்டம் மடி! ஆனாலும் எங்காத்துல எல்லாத்துக்கும் சாந்தமா நெகிழ்ந்து குடுத்துண்டு அவர் பாட்டுக்கு ஒதுங்கியிருப்பார்.” பிறிதொரு ஸமயம் சொன்னார் “ஆசார்யளோட பீடத்துல ஓக்காரனும்னா எவ்வளவு வைதிக பரிசுத்தி வேணுமோ அவ்வளவு எனக்கு முன்னாடி இருந்தாரே அவருக்குத்தான் இருந்தது. ஏன் பின்னே அத்தனை சுருக்க அவரை ஆசார்யாள் தங்கிட்டேயே எடுத்துண்டுட்டார்னு யோஜிச்சு, யோஜிச்சுப் பாத்திருக்கிறேன். முடிவா, என்ன தோணித்துனா, வரப்போற அவைதிக ப்ரளய சமுதாயத்துக்கு அத்தனை சுத்தரை ஆசார்யாப் பெற லாயக்கில்லை-னுதான் அவரை எடுத்துண்டு, என்னை அங்கே இழுத்து ஓக்காத்தி வெச்சிருக்கார் போலேயிருக்குன்னு!” அவர் சிரித்துக்கொண்டு தான் சொன்னார். கேட்டவர்களுக்குத்தான் நெஞ்சு தழுதழுத்தது. காந்தன் அத்யயனம் ஆரம்பித்துச் சிறிது காலத்திலேயே அவருடைய பிதா பித்ருலோகம் ஏகிவிட்டார். துர்பாக்வதியான லக்ஷ்மியம்மாள் – அதிதுர்பாக்யவதியும் ஆகப்போகிறோம் என்று அப்போது அறியாதவள் – ஏக புத்திரனுக்குக் காப்பு அன்றய காமகோடி பீடாதிபர்களே என்ற நல்லறிவுடன் அக் காலங்களில் ஸ்ரீ மடத்தின் ராஜதானியாயிருந்த கும்பகோணத்துக்கு அவனை அனுப்பிவிட்டார். ஆசார்ய ஸ்வாமிகள் – கலவை பெரிய பெரியவர் என்றோமே, அவர் – பாலனிடம் பேரன்பும் பெருங் கருணையும் பூண்டார். அக் காலத்தில் வெகு சிறப்பாக வேத அப்யாஸம் அளித்து வந்த சிதம்பரம் பாடசாலையில் பாலன் அத்யயனம் தொடர ஏற்பாடு செய்து அங்கு அனுப்பி வைத்தார். காந்தனின் சிதம்பர வாஸ காலத்தின் ஒரு கட்டத்தில் ஸ்ரீ சரணாளின் தந்தையும் சிதம்பரத்தில் உத்தியோகம் பார்த்ததுண்டு. அப்போது காந்தன் அங்கு அடிக்கடி வருவான். சரியாச் சொல்லவேண்டுமாயின் அதுவே இந்த இருபதாம் நூற்றாண்டின் வெளி வாயிலான 1900. காந்தனுக்கு நேராக உடன் பிறந்தோர் யாருமில்லாததால் சித்தியின் மக்களையோ அப்படி நேசித்தான். ஆயினும் அந்தப் பாசத்தையும் ஒரு கௌரவமான சாந்தம் மூடியிருக்கும். “நான் எத்தனை வளவளாவோ, அத்தனை ‘கொயட்’ அண்ணா” என்றார் ஸ்ரீ சரணர். இவர்களுக்கும் அவனிடம் தனியானதொரு ப்ரியம். தந்தையில்லாக் குழந்தை என்று சித்தி மஹாலக்ஷ்மி – நமது மஹானை ஈந்த மாதரசி – காந்தன் மீது தனியான வாஞ்சை காட்டுவாள். எல்லோருக்கும் நல்லவராக இருந்த பெரியவாளின் தந்தை சுப்ரஹ்மண்ய சாஸ்திரிகளும் அப்படியே! பாலன் காந்தன் பல தினங்கள் இவர்கள் வீட்டிலேயே தங்கிக் கொண்டு, பாடசாலை சென்று வந்திருக்கிறான். சில ஆண்டுகளுக்குப் பின்னரும் – விழுப்புரம், திண்டிவனம் முதலிய இடங்களுக்கு ஸ்ரீ சரணரின் பூர்வாச்ரமத் தந்தை மாற்றல் பெற்று, அக்குடும்பம் இடம் பெயர்ந்த பின்னரும் – காந்தன் அங்கெல்லாம் சென்று தங்கியிருக்கின்றான். “எங்கள்-ள ஒத்தராவேதான் அண்ணா இருந்தார். நான் ஆத்துக்கே செல்லம்னு பேரு, அதை விட்டா அண்ணாவுக்குத்தான் ஜாஸ்தி அட்டென்ஷன்” என்றார் ஸ்ரீ சரணர். இவ்வாறு வேத வேத்யனான நடராஜனின் திருத்தலமான சிதம்பரத்தில் இருந்த நாள்களில், காந்தன் வேதஸூக்தங்கள் சொல்வான். சில, மனப்பாடம் ஆவதற்காக உருப்போடுவான், மனப்பாடம் ஆன சிலவும் பாராயணமாகச் சொல்வான். அந்தப் பத்து வயசு சுத்த பிரஹ்மசாரி இவ்விதம் வேதம் ஓத, ஆறு வயஸூ கிணி அமரிக்கையாக உடன் உட்கார்ந்து ஆசையாகக் கேட்ட நாட்கள் உண்டு. அந்தக் ‘கிணி’ யாரென்று புரிந்திருக்கும். ஆம், உத்தர ஆச்ரமத்தில் நமது ஸ்ரீ சந்த்ரசேகரேந்திர சரஸ்வதிகளான ஸ்வாமிநாதன்தான். கிணி அவனது செல்லப்பெயர். ‘கிணி’ என்பது கிளி என்பதற்கு கன்னட வார்த்தை. அதிலிருந்து அவன் எத்தனை செல்லமென்று ஊஹிக்கலாம். துருதுருபையனான கிணிக்கு வேத சப்தத்தில் ஏதோ ஒரு ஈர்ப்பு லயம் இருந்துதான் அப்படி அமரிக்கையாய் அமர்ந்து அத்யயனம் கேட்டிருக்க வேண்டும். வேதத்துக்குப் புது வாழ்வு தரவே பிறந்த அவதாரனுக்குள்ளே அந்தப் பொறி அன்றே சற்றுக் கனன்றிருக்கிறது! கேட்டதை அப்படியே பிடித்து ஜ்வலிக்கச் செய்யும் கற்பூர மூளையானதால், புரியாத அந்த வேதபாஷையின் வேத மந்திரம் சிலவும் கிணிக்கு மனப்பாடமாகிவிட்டது! -தொடரும்.. ஸ்ரீ ரா.கணபதி அண்ணா அவர்களின் தொகுப்பில் இருந்து பிரசுரிக்கபட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe