spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்பெருமாளே... மருகோனே... மால் மருகா!

பெருமாளே… மருகோனே… மால் மருகா!

- Advertisement -
Kanchi Paramacharya With Kamakshi Amman
Kanchi Paramacharya With Kamakshi Amman

அருணகிரிநாதர் தம்முடைய திருப்புகழ் பாட்டுக்கள் ஒவ்வொன்றையும் ‘பெருமாளே’ என்கிற வார்த்தையுடனேயே முடிக்கிறார்.
பொதுவாக ‘பெருமாள்’ என்றால் மகாவிஷ்ணுதான்.
ஓர் ஊரில் ‘ஈச்வரன் கோயில்’, ‘பெருமாள் கோயில்’ என்ற போது ‘பெருமாள் கோயில்’ என்றால் விஷ்ணு ஆலயம்தான். சிவசக்தியின் பூர்ணதேஜஸாக இருக்கப்பட்ட சுப்ரமண்யத்தை இப்படி பெருமாளாகச் சொல்லச் சொல்லி அவர் முடிப்பதும் அழகாகத்தான் இருக்கிறது.

தமிழ்நாட்டிலேயே பொதுவில் இவரை மகாவிஷ்ணுவுடன் சம்பந்தப்படுத்திப் பேசுவது அதிகம்.

‘மருகன்’ என்றும் முருகனைச் சொல்கிறோமே, இது எதனால்? அவர் அம்பாளுக்கு சகோதரராக இருக்கிற மகாவிஷ்ணுவின் மருமகன் என்பதால்தான்.

‘மால் மருகன்’ என்கிறோம். மருமகன் என்றால் மாப்பிள்ளை என்று அர்த்தம். மருமகப் பிள்ளை என்பார்கள். பூர்வத்தில் வள்ளி தேவசேனைகள் மகாவிஷ்ணுவின் புத்திரிகள்தான். அதனால் மாமாவான விஷ்ணு முருகனுக்கு மாமனாராகவும் இருக்கிறார்.

சிவனுக்கு மகன், மகாவிஷ்ணுவுக்கு மருமகன் என்ற பெருமை இவருக்கே இருக்கிறது. ‘மருகோனே’ என்று அருணகிரிநாதரும் சொல்வார்.

ஆனால், வடதேசத்தில் இந்த மாமனார் சமாசாரமே சுப்ரமணியருக்குக் கிட்டே வரக்கூடாது. அவர் இங்கே எந்நாளும் பிரம்மசாரித் தெய்வம்தான்.

சில இடங்களில் ஸுப்ரம்மண்யர் கோயிலுக்குள் ஸ்திரீகளை அநுமதிப்பதுகூட இல்லையாம். அத்தனை கடுமை.

‘சுப்ரம்மண்யர்’ என்ற பெயரும் வடதேசத்தில் பிரசித்தியில்லை. அங்கே அவரைக் ‘கார்த்திகேய’ என்றே சொல்வார்கள்.

பரமேசுவரனின் கண்களிலிருந்து ஆறு பொறிகள் வெளிவந்து, அவை சரவணப் பொய்கையில் தங்கி ஆறுமுகனாக உருக்கொண்டன. அப்போது கார்த்திகைப் பெண்கள் – கிருத்திகா தேவதைகள் – என்கிற ஆறுபேர் அவரை எடுத்துப் பாலூட்டினார்கள். ஆகாசத்தில் கிருத்திகா நக்ஷத்திரங்கள் என்று ஆறு கூட்டமாக (Constellation) இருக்கின்றனவே, இவற்றின் அதிதேவதை அவர்களே.

கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்ததால் அவருக்குக் ‘கார்த்திகேயர்’ என்று பெயர் வந்தது. தனக்குத் தாயார் மாதிரி இருந்தவர்களின் பெயரை வைத்தே இப்படி அவர்களுக்குப் பெருமையாகப் பெயர் கொண்டார். வடக்கே இந்தப் பெயரே வழங்குகிறது. இல்லாவிட்டால் “குழந்தை” என்பதை வைத்து ‘குமாரன்’ என்பார்கள். “குமார ஸ்வாமி” என்று நாம்கூடச் சொல்கிறோம். ‘குமரன்’ என்று குறுக்கிச் சொல்வது தமிழ் மொழிப் பண்பு. வடக்கே ‘குமாரன்’ என்றால் சுப்ரம்மண்யர்தான். சிவசக்திகளின் பிள்ளை – சர்வலோக மாதா பிதாக்களின் (விசேஷமான) புத்திரன் – இவர்தான். நாம் பிள்ளை (பிள்ளையார்) என்றால் விக்நேசுவரரைத்தான் நினைக்கிறோம். ஆனால், வடக்கே கணேசருக்கு ஏனோ ‘குமார’ சப்தத்தைக் காணோம், ஷண்முகரே அங்கே குமாரராக இருக்கிறார். காளிதாசன் செய்திருக்கிற காவியத்தைப் பார்த்தாலும் அதற்கு ‘குமார ஸம்பவம்’ என்றே பெயர் இருக்கிறது.

‘குமார சம்பவம்’ என்ற சொற்றொடர் சாக்ஷாத் வால்மீகி ராமாயணத்தில் வருகிறது.
பாலகாண்டத்தில் விசுவாமித்திரர் ராம லக்ஷமணர்களுக்கு ஸ்கந்த உற்பத்தி கதையை விரிவாகச் சொல்கிறார். இதன் முடிவில், வால்மீகி சாதாரணமாக ‘இந்தக் கதை கேட்டதற்கு இந்தப் பலன்’ என்று ‘பலச்ருதி’ சொல்வதில்லைதான் என்றாலும், விதிவிலக்காக-சொல்கிறார்: ஸ்ரீ ராமனிடம் விசுவாமித்திரரின் வசனமாகச் சொல்கிறார்: ‘குமார ஸம்பவக் கதையைச் சொன்னேன். இது தனத்தையும் கொடுக்கும். புண்ணியத்தையும் கொடுக்கும், அப்பா, காகுத்ஸா, இந்த லோகத்தில் ஒரு மனுஷ்யன் கார்த்திகேயனிடம் பக்தி வைத்துவிட்டால் போதும். தீர்க்காயுள், புத்திர பௌத்திர சௌபாக்கியம் எல்லாம் அவனுக்குக் கிடைத்துவிடும். முடிவிலோ ஸ்கந்த லோகத்துக்கே போய் அவருடனேயே நித்தியவாசம் செய்யலாம்’ என்கிறார். (பாலகாண்டம் – 37வது ஸர்க்கம்: சுலோ: 31-32) .

இங்கே ‘குமார ஸம்பவம்’ என்று ஆதிகவி சொன்னதைத்தான் மங்கள வாக்காகக் கொண்டு காளிதாஸன் தன் காவியத்துக்கு அதே பெயரைக் கொடுத்தான்.

‘குமாரன்’ என்ற பெயரை வைத்துத்தான் ‘கௌமார மதம்’ என்ற ஸுப்ரம்மண்ய உபாஸனை ஏற்பட்டிருக்கிறது. ஷண்மதங்கள் என்று ஆறைச் சொல்வார்கள்! கணபதியை முழுமுதற் கடவுளாக வழிபடுவது காணபத்தியம்; சூரியனை முழு முதலாகக் கொள்வது ஸெளரம்; அம்பாளையே (சக்தி) பரமதாத்பரியமாகச் சொல்வது சாக்தம்; சிவனைச் சொல்வது சைவம்; விஷ்ணுவைச் சொல்வது வைஷ்ணவம்; இன்னொன்று சுப்பிரம்மணியரையே பரமாத்மாவாக உபாஸிப்பது. இங்கே ‘குமார வழிபாடு’ என்ற பொருளில் ‘கௌமாரம்’ என்றே பெயர் உண்டாகியிருக்கிறது.

மேலே ‘ஸ்கந்த லோகம்’ என்று வால்மீகி ராமாயணத்திலிருந்து ஒரு வார்த்தை சொன்னேன். ‘ஸ்கந்தன்’ என்பதும் சுப்பிரமணியரின் பிரக்யாதி வாய்ந்த பெயர். ‘ஸ்கந்த’ என்கிற தாது (Root) வுக்கு, ‘வெளிப்படுவது’ என்று அர்த்தம். மேகத்திலிருந்து மின்னல் வெளிப்படுவதுபோல், சிவ ஜோதியிலிருந்து ஆறு பொறிகளாக வெளிப்பட்டுத் தெறித்ததால், ‘ஸ்கந்த’ என்ற பெயர் உண்டாயிற்று. ‘ஸ்கந்த’ என்ற நாமாவை விசேஷமாக வைத்தே புராணத்திற்கு ‘ஸ்காந்தம்’ என்ற பெயர் வந்திருக்கிறது. தமிழில் இதைக் காஞ்சிபுரத்தில் இருந்த கச்சியப்ப சிவாச்சாரியார் ‘கந்தபுராணம்’ என்று செய்திருக்கிறார். ‘ஸ்கந்தன்’ தமிழில் கந்தனாகிறான்.

இருந்தாலும், தமிழ்நாட்டில் மருமகனாகக் சிறப்புப் பெற்றிருப்பவன் வடதேசத்தில் மகனாகவே – குமாரனாகவே – விசேஷிக்கப்படுகிறான். சகல ஜீவராசிகளும் ஆதி தம்பதியின் குழந்தைகளாயிருக்க, “பிள்ளை என்றால் இவன்தான்” என்று சொல்லும்படியாக, முருகனுக்கு இருக்கிற மகிமை என்னவென்று பார்ப்போம்.

  • காஞ்சி மகாபெரியவரின் சொல்லமுதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe