Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 9)

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 9)

mahaswamigal series
mahaswamigal series

9. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி
-Serge Demetrian (The Mountain Path)
தமிழில் – ஆர்.வி.எஸ்

கொஞ்சமேனும் உயர்ந்த நிலையில் இருந்த எண்ணங்களோடு சிறிது நேரம் ஓய்வெடுத்தேன். சத்திரத்திலிருந்து யாரோ ஒருவர் அங்கே வருவது வரையில் நான் என் சுயநிலைக்கு வரவில்லை. ஸ்ரீ மஹாஸ்வாமி திரு. செட்டியை கூப்பிட்டு அனுப்பியிருந்தார். என் கையில் அவரின் திருவடி மணலை எடுத்து சேமித்து வைத்திருந்த சிறு பை பத்திரமாக இருந்தது.

நான் சந்தோஷத்துடன் அப்பையுடன் அங்கேயே காத்திருந்தேன். அமைதியான எண்ணங்கள் பிறந்தன. ஸ்ரீ மஹாஸ்வாமியின் அருகாமையில் இரவும் பகலும் இருக்கப் பிறந்தவர்களின் மகிழ்ச்சி எப்படியிருக்கும்! பிறத்தியார் என்று சொல்வதை விட ஒருத்தரை எனக்கு நன்றாகத் தெரியும்,  அவரது பெயரைச் சொல்ல விருப்பமில்லை, எங்கிருந்தோ தூரத்திலிருந்து பாராசூட்டில் வந்து குதித்தது போல அவர் ஸ்வாமிஜியை மிகுந்த சிரமத்துடன் அடிக்கடி தரிசனம் செய்வார். இருந்தாலும் என்னுடைய அந்த நண்பரும் அவரது குடும்பத்தாரும் விதி இம்மட்டிலாவது தரிசன அனுமதி அளித்திருக்கிறதே என்று சந்தோஷப்படுவார்கள்.

சிறிது நேரத்தில் திரு. செட்டி இரு உதவியாளர்களுடன் திரும்பி வந்தார். ஸ்ரீ மஹாஸ்வாமி நான் பார்த்து மாயமான இடமான அந்த முற்றத்தில் காத்திருக்கிறாராம். என்னுடைய நோக்கம் என்ன என்று அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார் என்ற செய்தி வந்தது.

“உங்களை அவர் நிறைய முறை பார்த்திருக்கார். உங்களோட தேவைகள் என்ன, நீங்க எப்படி இங்கே பிழைக்கறேள், இன்னும் எவ்வளவு நாள் இந்தியாவுல இருப்பேள்ங்கிற விவரங்களை தெரிஞ்சுக்க ஆசைப்படறார்”

நான் சொல்வதைக் குறித்துக்கொள்ள எனது நண்பர் ஒரு பேப்பரைக் கையில் எடுத்தார். ஒரு கணநேர தயக்கத்துக்குப் பிறகு என்னுடைய பதினேழு வயதிலிருந்து சுய சரித்திரத்தைப் பற்றிய சிறுகுறிப்பு ஒன்றை நான் தரவேண்டும் என்று புரிந்துகொண்டேன். அவரை இரண்டு வருஷங்களுக்கு முன்னால் முதன்முதலில் செகந்திராபாத்தில் தரிசித்த போது இதைச் செய்திருக்கிறேன். ஒரு பள்ளி மாணவனைப் போல திரு. செட்டி எல்லாவற்றையும் எழுதிக்கொண்டார். புருஷார்த்தங்களில் நான்காவதான மோக்ஷத்தைத் தவிர எனக்கு எதிலும் ஆர்வமில்லை என்று முடித்தேன். இந்தியாவின் வெப்பமான சீதோஷ்ணத்தைப் பற்றியோ, தேகநலன் பற்றியோ, பொருளாதர பிரச்சனைகள் பற்றியோ நான் எதையும் குறிப்பிடவில்லை.

இவையெல்லாம் அவருக்கே தெரியாதா? அவரது விருப்பப்படி எனது இருதயத்தினுள்ளும் மனசுக்குள்ளும் நடை போட்டு அவரால் இவையெல்லாம் பார்க்கத் தெரியாதா? இவற்றோடு என்னுடைய எல்லா வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் அவரையே சாட்சியாக வைத்திருக்கிறேன்.

என்னுடைய பழக்கங்களைப் பார்த்த உள்ளூர் நண்பர்கள் சிலரின் உந்துதலால் ஒரு நல்ல திறமையான உள்ளூர் ஜோசியரைச் சமீபத்தில் பார்த்ததாகவும் அவர் என்னுடைய வாழ்நாள் முழுக்க ஆன்மிக ஆராய்ச்சியில்தான் ஈடுபடுவேன் என்று ஆரூடம் சொன்னதாகவும் இறுதியில் குறிப்பிட்டேன். இவைகளை தட்டச்சுச் செய்து ஸ்ரீ மஹாஸ்வாமிகளிடம் காட்டுவதற்கு திரு செட்டி அவர்கள் சாயந்திரம் என்னை வரச்சொன்னார்கள்.

periyava dakshinamurthi

இதற்காக நாங்கள் பிரிவதற்கு முன்பு திரு செட்டி ஒரு செய்தி சொன்னார்கள். இன்று காலை 7.10 மணிக்கு திரு செட்டி என்னுடைய சந்திப்பு பற்றிச் சொல்வதற்கு ஸ்ரீ மஹாஸ்வாமியிடம் சென்றிருந்தபோது…

“அவர்தான் அரை மணி நேரமா எனக்காக காத்திண்டிருக்காரோனோ?” என்று கேட்டாராம்.

அந்த அரைமணி நேரமாகத்தான், அதாவது காலை 6.40 மணியிலிருந்து எனது விடுதியின் அறையில் அந்த அடர்த்தியான மாயப் பிரகாசம் என்னை வசீகரித்துச் சூழ்ந்திருந்தது!

குருவுக்கு காணிக்கை — காஞ்சீபுரம், நவம்பர், 1970


சென்ற மூன்று மாதங்களாக ஒரு ஆணித்தரமான கேள்வி என் இருதயத்தை அரிக்கிறது. அது என்னவென்றால், ஸ்ரீ மஹாஸ்வாமியைக் குருவாக வரித்துக்கொள்ள எனக்கு யோக்கியதை இருக்கிறதா? இதை அவரிடம் நான் பொதுவில் கேட்கமுடியாது. என்னுடைய நண்பர்களிடமும் இதைச் சந்தேகமாகக் கேட்கமுடியாது. என் வாழ்வில் இந்தக் கேள்வியை இரகசியமாக என்னுள்ளேயே புதைத்து வைத்திருந்தேன். முதிர்ந்த சிந்தனைக்குப் பிறகு ஒரு தந்திரத்தில் இறங்கினேன். புராதன காலத்தில் குருவானவர் தனக்கு வேண்டிய சிஷ்யனைத் தாமாகவே முன்வந்து தேர்ந்தெடுக்கும் போது….

அக்னிக்காக கட்டைகளைக் கொண்டு வா! நான் உன்னை உண்மையைவிட்டு விலகாத பிரம்மச்சரிய தர்மத்தில் நிலைநிறுத்தி தீக்ஷை அளிக்கிறேன்” என்பார்கள் என்று படித்திருக்கிறேன்.

குருவின் ஆஸ்ரம வீட்டிலோ அல்லது அருகிலோ வசிக்கும் சிஷ்யர்கள் நம்பிக்கைக்கு உரிய ஒரு இயக்கமாக, ஹோமங்கள் யாகங்கள் மூலமாக தெய்வங்களை வழிபடும் புனித அக்னியைப் பாதுகாத்தார்கள். ஸ்ரீ மஹாஸ்வாமி முகாமிட்டிருக்கும் இடங்களில் அக்னி கட்டைகள் மூட்டப்படுவதை நான் ஏற்கனவே கவனித்திருக்கிறேன். இந்த விறகுகள் சுள்ளிகள் எங்கிருந்து வருகின்றன? என்னுடைய நண்பரும் காஞ்சிபுரத்தில் பொதுஜனத் தொடர்பு மற்றும் செய்தி அதிகாரியாக இருக்கும் திரு. கண்ணையா செட்டி இதற்கு பதில் சொன்னார்.

“யாரும் கைங்கர்யம் செய்யவில்லை என்றால் மடத்திலிருந்துதான் கட்டைகள் வாங்கி வழங்கப்படுகின்றன”

“அப்போ விறகு காணிக்கை வழக்கத்தில் இருக்கிறதா?”

“நிச்சயமா. கொடுத்தால் சந்தோஷமா வாங்கிக்கொள்வார்கள்” என்றார் என் நண்பர்.

திரு கண்ணையா செட்டி விவேகி. நாசூக்குத் தெரிந்தவர். ஸ்ரீ ம்ஹாஸ்வாமியின் பரிவாரங்களிடம் விறகு காணிக்கை ஏற்றுக்கொள்வார்களா என்று மெதுவாக விஜாரித்தார். ”ஆம்” என்று பதில் வந்தது. விறகுக்கடை அருகில் இருந்தது. குளிர் காலம் துவங்கிவிட்டது. ஆகையால் இது போல காணிக்கை அளிப்பதற்கு இதுவே உரிய காலம். காதி கிராஃப்ட்டிலிருந்து ஸ்ரீ மஹாஸ்வாமிக்கு நல்ல தரமானக் கம்பளி சால்வை ஒன்றை வாங்கிக்கொண்டேன். தரிசனத்திற்கு தயாரானேன்.

அனுமதி கிடைத்த நாளில் தரிசனம் காலை பத்து மணிக்கு குறிக்கப்பட்டிருந்தது. நல்ல உயர்ந்த ரக விறகுகளை என் நண்பரின் உதவியோடு வாங்கினேன். கையால் தள்ளியோ அல்லது இழுத்தோ வரப்படும் இரண்டு சக்கர வண்டியில் அதை ஏற்றிக்கொண்டு இரண்டு பசங்கள் இந்தப் புனித கைங்கரியத்திற்காகச் சந்தோஷமாகத் தள்ளிக்கொண்டு வந்தார்கள். யாத்ரீகர்கள் மண்டபத்தில் தென்கிழக்கு வாசலருகே இருந்த ஒரு சின்ன முற்றத்தில் ஸ்ரீ மஹாஸ்வாகள் தரிசனம் தருவார் என்று சொன்னார்கள். யாத்ரீகர்கள் மண்டபம் அருகில் நான் வண்டியை நிறுத்தினேன். திரு செட்டி ஸ்ரீ மஹாஸ்வாமிகளிடம் நான் வந்திருப்பதைத் தெரிவித்தார்.

ஸ்ரீ மஹாஸ்வாமி கிட்டத்தட்ட உடனே வந்துவிட்டார்.

குளிர்காலமாக இருந்தும் அவர் ஒரு மெல்லிய காவி வஸ்திரம் மட்டுமே அணிந்திருந்தார். என் கையில் இருந்த பிரம்புக் கூடையில் மடித்து வைக்கப்பட்டிருந்த கம்பளி சால்வையையோ அல்லது தெருவை அடைத்து நின்றிருந்த ரதத்தில் ஏற்றிவைத்திருந்த விறகுகளையோ அவர் பார்க்கவில்லை. இருந்தாலும் அவரது இதழ்களில் விரிந்த புன்னகையில் இவ்விரண்டும் அவருக்கு தெரிந்துதான் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

அப்படியே அவர் நின்றுகொண்டிருந்த படியின் முன்னால் நமஸ்கரித்தேன். அவர் அறைக்குள் இருந்தால் வழக்கமாக என்னுடைய காணிக்கைகளை ஆரம்பப் படியில் வைத்துவிடுவேன். இப்போது எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

அவர் தான் வெளியே வரப்போவதாக சைகை காட்டினார். படியை விட்டு இறங்கி இரண்டு மீட்டருக்கு மூன்று மீட்டர் இருந்த அந்த சின்னத் தோட்டம் போன்ற பிரதேசத்துக்கு வந்தார். சத்திரத்திலிருந்து வெளியே வந்து தென்மேற்கைப் பார்த்து உட்கார்ந்தார். ஒரு பாயை எனக்காகக் கொண்டு வரச்சொல்லி அவருக்கு நேரே அமரச் சொன்னார்.

வழக்கமாக காணிக்கை செலுத்தும்போது அவர் இப்படியெல்லாம் நடந்துகொண்டதில்லை. இம்முறை ஸ்ரீ மஹாஸ்வாமிக்கு என்னுடைய காணிக்கை என்னவென்று தெரிந்து அந்த இடத்தில் ஒரு புனித தென்றலை வீசச்செய்கிறார். திரு. கண்ணையா செட்டி  எங்களுக்குத் துபாஷாக இருந்தார்.

”ஸ்ரீ மஹாஸ்வாமிக்கு டிமிட்ரியன் அந்த வண்டி நிறைய விறகு காணிக்கை செலுத்தறார்” என்று என் நண்பர் அந்த வண்டியைக் காட்டித் தெரியப்படுத்தினார். ஸ்ரீ மஹாஸ்வாமி அந்த வண்டியைப் பார்த்து கையை நீட்டிவிட்டு தனது நெஞ்சில் தொட்டுக்கொண்டார். அதே போல என்னைப் பார்த்தும் கையை நீட்டி தனது நெஞ்சில் தொட்டுக்கொண்டு “உன்னுடைய காணிக்கையையும் உன்னையும் நான் ஏற்கிறேன்” என்று சொல்வதைப் போன்ற சைகையாக அது இருந்தது.

மூங்கில் தட்டை அவரது எதிரில் சமர்ப்பித்தேன்.

“குளிர்காலமா இருக்குன்னு டிமிட்ரியன் இந்த கம்பளி சால்வையை காணிக்கையா செலுத்தறார்” என்றார் திரு செட்டி.

ஸ்ரீ மஹாஸ்வாமி பக்கத்திலிருந்த கமண்டலத்தைச் சாய்த்து சிறிது நீரைக் கையிலெடுத்து சால்வையின் மீது தெளித்து புனிதப்படுத்தினார். அவருகாகக் காணிக்கையளிக்கப்படும் எல்லா துணிகளின் மீதும் அவர் இப்படி நீர் தெளித்து புனிதப்படுத்துவது வழக்கம். பின்னர் அந்த சால்வையை எடுத்து தனது இடது தோளில் போட்டுக்கொண்டு அதை அவர் ஏற்றுக்கொள்வதாகக் காட்டினார்.

அவரது வலது கையை என்னை நோக்கிப் பிரித்து ஆசீர்வதித்து நெஞ்சைத் தொட்டுக்கொண்டார்.  ஸ்ரீ மஹாஸ்வாமி வெகுநேரம் கண்கள் மூடி அமர்ந்திருந்தார். ஒரு பெருமூச்சு விட்டவுடன் அவரது உதடுகள் எதையோ முணுமுணுத்தன.

நீராவியை விட கொஞ்சம் கெட்டியான சாம்பல் நிற மேகம் போல அவரது தேகம் அங்கே சில கணங்கள் தோன்றியது. மிகவும் மென்மையான லேசான வெளிச்சத்துடன் ஒரு மின்சாரம் அவரிடமிருந்து உற்பத்தி ஆகி என்னுடைய தலையை லேசாகத் தொட்டு நிறைவைத் தந்தது. நான் நிம்மதி பெருமூச்சுவிட்டேன்.

அவர் மீண்டும் தனது சாதாரண உருவை எடுத்துக்கொண்டார். அன்பான அவரது சைகைகள் மூலம் என்னை ஏற்றுக்கொண்டதாக காட்டினார். நான் புறப்படுவதற்கு முன்பு செய்யும் நமஸ்காரத்திற்காக காத்திருந்தார். பின்னர் மெதுவாக எழுந்து கிளம்பி வந்த அந்த இருளடைந்த அறைக்குள் சென்றுவிட்டார். அவர் செல்லும் போது எனக்கு மிக அருகில் வந்தார். பிரகாசமான, மிகவும் தூய்மையான, வாசனையோடு இருந்த ரூபத்தை நான் உணர்ந்தேன். அந்த இருளில் அவர் கரைவதற்கு முன்னால் ஒரு விநாடி திரும்பி தன் ஒளிவீசும் கண்களால் என்னைப் பார்த்தார்!

#ஸ்ரீ_மஹாஸ்வாமி_ஒளிவீசும்_கண்கள்_கொண்ட_மாமுனி
#மஹாஸ்வாமி_ஆர்விஎஸ்_பகுதி9

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version