― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்மகா பெரியவர் மகிமைஸ்ரீமஹாஸ்வாமி - ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 13)

ஸ்ரீமஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 13)

- Advertisement -
mahaswamigal series

13. ஸ்ரீ மஹாஸ்வாமி –
ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி
– Serge Demetrian (The Mountain Path)
– தமிழில்: ஆர்.வி.எஸ் –

இரவில் மஹாஸ்வாமியின் திருவடிபற்றி….: கார்வெட்டிநகர், ஜுன், 1971

சாதுர்மாஸ்ய விரதம் இன்னும் துவங்கவில்லை. ஸ்ரீ மஹாஸ்வாமி எந்நேரமும் இங்கிருந்து புறப்படலாம். அவர் முகாமிட்டிருந்த ஆஸ்ரமத்து நண்பர்கள், அவரது உதவியாளர்கள், நமஸ்கரிக்க வந்த பக்தர்கள், நான் என்று எல்லோருமே அவருடைய நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து அடுத்தது என்ன நடக்கும் என்பதை யூகிக்க முயன்றோம்.

எப்போது தனது கமண்டலத்தை ஒரு கையில் எடுத்துக்கொண்டு தண்டத்தைச் சார்த்திக்கொண்டு லேசாக முன்னால் சாய்ந்தபடி அருகிலிருக்கும் சாலையைப் பார்த்து நடக்கத் துவங்குவார் என்பதை கணிப்பது மிகவும் கஷ்டம். முதலில் குறுக்கே வரும் சாலை சந்திப்பில் எந்தப் பக்கம் நடக்கத் தலைப்படுவார் என்பதும் நாங்கள் அறியமுடியாதது.

ஒரு அழகான பின் மதிய நேரத்தில் நாங்கள் பயந்தபடியே அது நிகழ்ந்தது. நான் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த குடிசையின் உரிமையாளர் ஓடிவந்தார்.

“ஸ்ரீ மஹாஸ்வாமி புறப்பட்டுவிட்டார்” என்று சத்தமிட்டார்.

“எங்கே? எங்கே?” என்று நான் கேட்டேன்.

”ஒரு மணி நேரம் முன்னாடி, நாலு மணி இருக்கும். பள்ளிப்பட்டு கிராமத்துக்குப் போயிக்கிட்டிருக்காங்க” ஓடிவந்ததால்  புஸ்புஸ்ஸென்று மூச்சிரைக்கப் பேசினார்.

“ஒரு மணி நேரம்” என்று எனக்குள் சொல்லிக்கொண்டு “நடந்து சென்று அவரைப் பிடிப்பது கஷ்டம்” என்று நினைத்தேன். ஊராரிடம் விஜாரித்ததில் இன்னும் அரை மணி நேரத்தில் ஸ்ரீ மஹாஸ்வாமி செல்லும் தென் திசை நோக்கி ஒரு பேருந்து வரும் என்ற விவரத்தை சேகரித்தேன். அதிர்ஷ்டவசமாக அந்தப் பேருந்து நான் தங்கியிருந்த காந்தி ஆஸ்ரமத்தைத் கடந்துதான் செல்லவேண்டும். நான் என்னுடைய உடைமைகளையெல்லாம் வாரிச் சுருட்டிக்கொண்டு அந்த பேருந்து என்னைக் கடக்கும் போது பெட்டியோடு தாவி உள்ளே குதித்தேன்.

ஒரு முக்கியமான சாலைச் சந்திப்பைக் கடந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் ஸ்ரீ மஹாஸ்வாமியைப் பார்த்துவிட்டேன். சாலை ஓரத்தில் இருந்த தென்னந்தோப்பில் அவரது குழுவினர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். அவர் மும்முரமாக ஏதோ செய்துகொண்டிருந்ததால் கொஞ்ச தூரத்திலிருந்து தரையில் நமஸ்கரித்து எழுந்தேன்.

நான் வந்த பேருந்தில் கணிசமான அளவில் கார்வெட்டிநகர் ஜனங்களும் என்னுடன் வந்திருந்தார்கள். ஸ்ரீ மஹாஸ்வாமியை மீண்டும் தங்கள் கிராமத்திற்கு வரும்படி கைகளைக் கூப்பி வேண்டிக்கொண்டிருந்தார்கள். இன்னும் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் பள்ளிப்பட்டுவாசிகளும் அங்கே அப்போது இருந்தார்கள். அவர்கள்  ஸ்ரீ மஹாஸ்வாமியை மீண்டும் அழைக்கும் கார்வெட்டிநகர்காரர்களைப் பார்த்து சத்தம் போட்டார்கள்.

mahaperiyava

ஸ்ரீ மஹாஸ்வாமி ஒரு இடத்தை விட்டு அடுத்த இடம் செல்லும்போது இது வழக்கமாக நடப்பதுதான். ஸ்ரீ மஹாஸ்வாமிகள் சண்டையிடும் அவர்களை சாந்தப்படுத்துவதுபோல கைகளைக் காட்டிக்கொண்டிருந்தார். பல நாள்களாக அவர் மௌன விரதத்தில் இருப்பதால் அவ்வப்போது ஒரு சிரிப்பை மட்டும் உதிர்த்து கண்களை மூடிக்கொள்வார்.

சூரியன் தொடுவானத்தில் இறங்கிவிட்டான். ஸ்ரீ மஹாஸ்வாமியின் உதவியாளர்களும் நானும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்வதில் தீவிரமாக இருந்தோம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வீடுகள் எதுவுமில்லை. அந்த வயற்காட்டில் இரவு தங்குவதற்கு யாரும் தயாராகவும் இல்லை. திடீரென்று ஸ்வாமிஜி எழுந்து நின்றார்.

நாங்கள் எல்லோரும் துள்ளி எழுந்தோம். அவர்  விறுவிறுவென்றுச் சாலைச் சந்திப்புக்குச் சென்றார். அருகிலிருக்கும் ஊர்கள் எத்தனை தூரத்தில் இருக்கிறது என்பதைக் கேட்டறிந்தார். சித்தூர் 40 கி.மீ. பள்ளிப்பட்டு 2 கி.மீ. கார்வெட்டிநகர் 6. கி.மீ. மிகவும் ஆழ்ந்து யோசித்தார். பின்னர் ஒவ்வொரு திசையாகத் திரும்பினார். தீர்மானமாக முடிவு செய்துகொண்டு கார்வெட்டிநகரை நோக்கி நிதானமாக நடக்கத் துவங்கினார்.

ஸ்வாமிகள் மீண்டும் தங்கள் கிராமத்திற்கு வருகிறார் என்பதில் கார்வெட்டிநகர்வாசிகளுக்கு சந்தோஷமான சந்தோஷம். பள்ளிப்பட்டு ஊர்க்காரர்கள் மனதுடைந்து போனார்கள். ஆனாலும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. சிலர் கார்வெட்டிநகருக்குச் செல்லும் கடைசிப் பேருந்து ஏறினார்கள். சிலர் அருகிலிருக்கும் தங்கள் வீடுகளுக்கு நடை போட்டார்கள். அவரவர்கள் விருப்பம்.

ஸ்ரீ மஹாஸ்வாமியைச் சுற்றி இப்போது ஐந்தே பேர்கள்தான். நான்கு உதவியாளர்கள் மற்றும் நான். ஸ்வாமிஜி வெறும் காலில் சுறுசுறுப்பாக சீரான வேகத்தில் தார்ரோட்டின் இடதுபுறம் நடக்க ஆரம்பித்தார். மொத்த நடையின் போதும் அவர் தனது நடையின் ஸ்ருதியை விட்டு விலகவில்லை. எங்கும் நிற்கவுமில்லை.

எனக்கு ஆறு கிலோமீட்டர் ஷூக்கள் இன்றி நடந்தால் அடுத்த நாள் பாதங்களில் கொப்பளங்கள் ஏற்பட்டு வீங்கிவிடும் என்பது உண்மை. ஆனால் மிகவும் சின்னக் குழுவாக வந்திருக்கிறோம் என்ற இந்த சந்தர்ப்பத்தைத் தவறவிடக்கூடாது என்று நான் நடப்பதற்குத் தயங்கவில்லை. திரும்பவும் எடுத்து அணியும் ஆசை வரக்கூடாது என்பதற்காக என்னுடைய ஷூக்களைக் கழற்றி என் பையின் அடியில் போட்டுக்கொண்டேன். 

இடுப்பு உடைகளை ஒருமுறை மேலே ஏற்றிச் சரியாக இறுக்கிக்கொண்டேன். கையிருப்பில் இருக்கும் தண்ணீர் அளவை சரிபார்த்துக்கொண்டேன். நானும் தயார்.

நான் அவரை பின் தொடர்கிறேன். இது ஒரு சாதாரண பாதயாத்திரை அல்ல என்பது சீக்கிரத்தில் தெளிவாகப்போகிறது. பொதுவாக ஒருவருக்கொருவர் பொறாமைப்படும்படி போட்டி போட்டுக்கொண்டுப் பாதுகாக்கும் நான்கு உதவியாளர்களும் சாலையில் இப்போது அங்கொருவர் இங்கொருவராகச் சிதறியிருக்கிறார்கள்.

அவர்கள் சாலையின் வலதுபுறத்தில் வருகிறார்கள். யாரும் ஸ்ரீ மஹாஸ்வாமியைப் பார்க்கவில்லை. அமைதியாக சீரான வேகத்தில் அவர் வருவதைக் கண்ட அவர்கள் தைரியமாக தனித்து வந்தார்கள். இன்னும் நன்றாக இருட்டியதும் சாலையோர தோட்டம் எதிலாவது பழங்களைத் தேடி பிரயர்த்தனப்படுவார்கள். இந்த சந்தர்ப்பத்தை எனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட நான் ஸ்வாமிஜிக்கு நேர்ப் பின்னால் கச்சிதமாகத் தொடர்ந்தேன். இந்தப் பயணம் முடியும்வரை அவரை விட்டு நான் விலகவேயில்லை.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம், தனியாக, இரவில், ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் திருவடிபற்றி நடந்து வருவது எப்பேர்ப்பட்ட பாக்கியம் எனக்குக் கிடைத்தது!!

நான் என்னுடைய வீசி நடக்கும் நடையை அவரது காலடித் தடத்திற்குத் தக்கவாறு அடக்கிக்கொண்டேன். தார் மீது அந்த காலடிச் சுவடுகளை என்னால் பார்க்கமுடியவில்லை ஆனாலும் அந்தத் தடங்களை என்னால் உணரமுடிந்தது. எப்படி? நம் கால்கள் அந்த இடத்தில் படும்போது நுண்ணுர்வோடு கவனித்துப் பார்த்தால் மிதமான ஒரு சூட்டை உணரலாம். என் கையை நீட்டினால் அவரைத் தொட்டுவிடும் அருகில் நடந்துகொண்டிருந்தேன்.

mahaswamigal

இருந்தாலும் இவையெல்லாம் இப்போது அவசியமில்லை. முன்னால் சென்றுகொண்டிருக்கும் அவரிடமிருந்து அற்புதமான ஒளிரும் பாதச்சுவடுகள் தரையில் உருவாகி அப்படியே என்னை ஒரு கூடு போல எனக்கு உறை போடுகிறது. நேரம் செல்லச் செல்ல சாவி கொடுத்து முடுக்கப்பட்டது போல நான் தன்னால் அதைப்பற்றி நடப்பதை உணர்ந்தேன்.

இதற்கு மேலும் ஒன்று நடந்தது. “நான்” என்ற என் அகந்தை அழிந்தது. வெளியேவும் அகத்தினுள்ளும் இரு இடங்களில் நடந்து கொண்டிருந்த ஸ்ரீ மஹாஸ்வாமி பின்னர் என்னுடைய இருதயத்தில் மட்டும் நடந்தார். அவர் நிஜமாகவே நடக்கிறாரா? வழக்கமான நகர்வுகள் அசைவுகள் தென்பட்டாலும் எதுவும் எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.

ஆனால் இவையெல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை. ஏனென்றால் என்னுடைய தேகத்தினை ஸ்ரீ மஹாஸ்வாமி கட்டுக்குள் எடுத்துக்கொண்டுவிட்டது போன்ற உணர்வினால் நான் அவருடன் கட்டிப்போட்டது போல சுய உணர்வின்றி அப்படியே நடந்துகொண்டிருந்தேன்.

இப்போது எனக்கு இது தெளிவாகப் புரிந்தது. அவர் என்னை வழிநடத்துக்கிறார். நான் இந்த உடம்பென்னும் உணர்வை உதறிவிட்டு என்னுடைய இருதயத்தினுள் இருக்கிறேன். முதலில் கொஞ்சம் கொஞ்சமாக இப்படி தோன்ற ஆரம்பித்தது. ஒவ்வொரு முறையும் என்னுடைய மேனியைப் பற்றிய பிரக்ஞை வரும் போது முன்னால் ஸ்வாமிஜி நடந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன்.

என்னுடைய உடம்பு ஒட்டுமொத்தமாக அவருடன் இணைந்து சென்றுகொண்டிருப்பது என்ற உண்மையை அறிந்த போது ஏனோ எனக்கு உதறியது. என்னுடைய மனமானது உடம்பு என்ற ஒன்றைப் பற்றிய கவலையில்லாமல் இருதயத்தில் நிலைத்துக் குடிகொண்டிருந்தது. அங்கே எண்ணங்களெல்லாம் அழிந்து போய் ஒரு பரிசுத்த ஜோதி நிலைத்திருந்தது.

பின்னர் அந்த ஜோதியானது ஆடாமல் அசையாமல் நின்றொளிரும் சுடர்மிகு பிராகாசத்தினால் சூழப்பட்டது. அந்த வெளிச்சமானது என் இந்த பழைய உடம்பினுள் கசிந்து இவ்வுடம்பானது உள்ளிருப்பதை வெளிக்காட்டும் ஒளிஊடுருவிப் பாயும் மெழுகுக் காகிதமாக உணர்ந்தேன்!!

வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத உணர்வும் எக்காலத்திலும் நீர்த்துப்போகாத ஆனந்தமும் அங்கே நிலவியது. சுயமானது அப்படியே அங்கேயே எல்லைகளற்று விரிந்துகிடந்தது. ஒரு உறுதியான கணத்தில், ஆடாது எரிந்த ஜோதி,  இது வரை நீடித்திருந்த சொல்லமுடியாத சந்தோஷம், எனக்குள் திரையிடப்பட்டிருந்த “நான்”, வித்தியாசமின்றிருந்த தனித்துவம், என்று எல்லாமே சுவடுகளே இல்லாமல் சுத்தமாகத் துடைத்துவிட்டது போல அழிந்ததுபோயிற்று.

கார்வெட்டிநகர் அருகில் நான் விழித்துக்கொண்டேன். உலகத்தைப் பற்றிய பிரக்ஞையை உடனே அடைந்தேன். எப்படி எனது இருதயத்தினுள் மூழ்கினேன்? ஸ்ரீ மஹாஸ்வாமியைக் கடந்து வந்த பரிசுத்தமான காற்றானது அவர் பின்னால் வந்துகொண்டிருந்த என் மீது மோதியதினால் வந்த விளைவு என்பது சந்தேகத்திற்கு இடமின்றி விளங்கியது.

மின்சார பாய்ச்சலிலிருந்து எடுக்கப்பட்ட இரண்டு கம்பிகள் என் முதுகுத் தண்டுவடத்தில் பாய்ந்து என்னை அவரோடு இணைத்துக் கட்டிப்போட்டிருக்கலாம். நான் ஒரு ரோபோ போல அவர் பின்னால் நடந்துகொண்டிருந்தேன். எங்கள் இருவருக்கும் இடையில் யாருமில்லை.

தொடரும்

#ஸ்ரீ_மஹாஸ்வாமி_ஒளிவீசும்_கண்கள்_கொண்ட_மாமுனி
#மஹாஸ்வாமி_ஆர்விஎஸ்_பகுதி13

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version