22. ஸ்ரீ மஹாஸ்வாமி
– ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி
Serge Demetrian (The Mountain Path) –
– தமிழில் – ஆர்.வி.எஸ்
தீமைகளை அழிக்கும் சிவபெருமான்: கார்வெட்டிநகர், 12, செப்டெம்பர், 1971 – ஞாயிற்றுக்கிழமை
இன்று காலை சீக்கிரமே விழித்துக்கொண்டேன். எழுந்த உடனேயே ஸ்ரீ பகவத் கீதையின் பதினெட்டாம் அத்யாயத்தைப் படிக்கத் துவங்கினேன். ஸ்ரீ மஹாஸ்வாமிகள் முன்னிலையில் நேற்று கேட்டதன் தாக்கம் என்னை வாசிக்கத் தூண்டியது. காலை 6:30 மணிக்கு குடிலில் இருந்தேன். ஸ்வாமிஜி அதுவரை தரிசனம் தருவதற்கு குடிலிலிருந்து வெளியே வரவில்லை. அவர் அனுஷ்டானத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்டது.
நேற்று அவரோடு ஏழு மணி நேரங்கள் இருந்ததால் எனக்கும் உடல் களைப்பாகி அங்கே நிற்கவில்லை.மதியம் இரண்டு மணிக்கு மேலே ஸ்ரீ மஹாஸ்வாமி வெளியே வந்தார். அற்புதமான மனநிலையில் இருந்தார். அனுஷ்டானம் என்னும் அளவுகாணமுடியாத தேவதா சமுத்திரத்தில் மூழ்கி எழுந்து வரும் நாள்களில் அவரது தேகம் புகைமூட்டம் போல ஒளி ஊடுருவிப் பாயும் ஸ்திதியில் தெள்ளத் தெளிவாக இருக்கும். முகம் பொலிவுடன் தேஜோன்மயமாக ஜொலிக்கும்.இம்முறை அவர் சிவபெருமானாக, தீமைகளை அழிப்பவராக……இந்த பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு மூலையில் நிர்மூலமாக்கப்படவேண்டிய திரள் திரளான பல்வேறு உலகங்கள் சுற்றுவது கருந்துகளாக இருக்கும் அவருக்கு மட்டுமே தெரியும்.
மிகவும் ஆழ்ந்து ஒருவிதமான தீவிர முகத்துடனும் மும்முரத்துடனும் இருந்தாலும், அதில் வெறுப்பும் கோரமும் தொணிக்காமல், பழுப்பான புகைமூட்டம் தனைச் சுழ்ந்திருக்க தனது கடமையை செவ்வனே நிறைவேற்றினார். இப்போது அவரைப் பார்ப்பதற்கு முதியவராக இருந்தார். கால்களில் சுருக்கங்கள் தெரிந்தன. ஒருவிதமான பழுப்பும் வெளிர் ஊதாவும் சேர்ந்த அவரது தோல் மங்கிய தங்கம் போலிருக்கும். அவர் காலத்தைப் போல புராதனமானவர்.
ஆனால் அவர் கண்களுக்கு வயதாகவில்லை. தெய்வத்தின் கண்களாக நிரூபணமாகியிருக்கும் அந்தக் விழிகள் எவ்விதம் மாறும்? தீக்ஷண்யமான கண்கள். திறந்திருக்கும் அந்தக் கண்ணின் கண்மணிகள் என்ற ஜன்னல்களில் ஒருவர் நுழைந்தால் அதன் பின்னே தளும்பும் வெளிர்நீல சமுத்திரத்திற்குள் மூழ்கலாம்.
அவருடையதும் என் கண்களைப் போலத்தான் இருந்தது. ஆனால் அவருடைய தீர்க்கமான கண்கள் பூர்ணத்துவத்தை அடைந்ததினால் ஒளியடைந்ததால் என்னுடைய சாதாரணக் கண்களுடன் ஒப்பிடவே முடியாதது.
என்னுடைய வேதனையைப் புரிந்துகொண்ட அவர் பார்வையாளார்களின் தேங்காய் எண்ணெய் தடவிய தலைகளுக்கு இடையே என்னைத் தேடினார். பலமுறை நான் அவருடைய சட்டென்று இதயத்துடிப்பை அதிகமாக்கும் அற்புதமான பட்டுநூல் தூரிகையான பார்வையின் ஸ்பரிசத்தை உணர்ந்திருக்கிறேன்.
அவர் எப்படித் தொடர்ந்து உதடுகளை மந்திரமாய் அசைத்துக்கொண்டிருக்கிறார் என்பதைக் கவனித்திருக்கிறேன். நமஸ்கரிக்க ஆசைப்பட்டேன். ஆனால் பாரம்பரிய சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதற்குரிய நேரமோ இடமோ அங்கே இல்லை. இதை உணர்ந்த அவர் உடனே நேரே தனது குடிலுக்குள் நுழைந்துவிட்டார். இதன் மூலம் யாரும் தவறாக எடுத்துக்கொள்ள முடியாதபடி பார்வையாளர்களை கலையும்படி செய்துவிடலாம்.
அவருடைய பழக்கம் என்னவென்பது எனக்கு தெரியுமாதலால் பொறுமையாக குடில் வாயிலில் காத்திருந்தேன். திரும்பவும் வெளியே வந்தார். என்னுடைய கஷ்டங்களை அவரது காலடியில் போடும் தருணம் வாய்த்ததாக எண்ணி அப்படியே சாஷ்டாங்கமாக பொற்பாதங்களில் விழுந்தேன்.
எழுந்த பிறகு அப்படியே முட்டிக்கால் போட்டபடியே சில நிமிஷங்கள் கைக்கூப்பி இருந்தேன். அவரது சரணங்களில் விழுந்து எழுந்த பிறகு எனக்கு மட்டும்தான் இப்படி முட்டியில் நிற்பது வழக்கமாக இருந்தது. என்னை வெகுநேரம் தலைமுதல் முட்டிக்கால் வரை பார்த்தபடி நின்றிருந்தார்.
என்னுடைய மனதை கருப்பாக்கி இச்சரீரத்தில் இருக்கும் வாழ்வைத் தொல்லைப்படுத்தியவைகளை சாம்பல் மேகங்களாக்கி விரட்டியடித்து என் இருதயத்தில் ஒளி ஏற்படும் வரை ஸ்ரீ மஹாஸ்வாமிகள் என்னைப் பார்த்தவண்ணம் அங்கே நின்றிருந்தார்.
என்னுடைய சந்தேகங்கள் மற்றும் பயங்கள் என்னும் நச்சுகள் மூச்சுத்திணற அடிக்காதபடி என் இருதயத்தில் அற்புத எண்ணங்களை விதைத்துவிட்டோம் என்று அவர் உறுதிசெய்து கொண்ட பின்புதான் என்னை எழுந்து நிற்க அனுமதித்தார்.இப்படி அவரை ஏற்கனவே சில காலத்துக்கு முன்னால் பார்த்திருக்கிறேன். இப்போது இங்கே கார்வெட்டிநகரிலும் காண்கிறேன்.
அன்று சாயந்திர வேளையில் அவரது குடிலைச் சுற்றி மூச்சுத்திணறடிக்கும் நாற்றத்துடன் கருப்பாக கடும் பனிமூட்டம் சூழ்ந்திருந்தது. நொடிகளுக்குள் நுண்ணிய பின்னங்களில் அதிக வெப்பத்தினால் வெடித்த மண் துகள்கள் சாதாரண கண்களுக்குப் புலப்படாத சின்னச் சின்ன தழல்களை அங்கே மூட்டியிருந்தன. தழல் என்பதில் உண்மையில்லாமலில்லை.
அந்தத் துளைக்கமுடியாத புழுதிப்புயலின் பின்னால் ஸ்ரீ மஹாஸ்வாமியை பார்க்கமுடியாவிட்டாலும் அங்கே அசையாமல் நின்றிருந்தார். யாராலும் அவரது முகத்தைக் கூடக் காண முடியவில்லை. அவர் யாரிடமும் எதுவும் பேசவில்லை. நமஸ்கரிப்பவர்களை ஆசீர்வதிக்கும் ஸ்திதியிலும் இல்லை. அவரையும் குடிலையும் சுற்றி மங்கலாகவும் பயமுறுத்தும் வகையிலும் புகைமூட்டம் போட்டிருந்தது.
அதீத வெப்பத்தினால் காற்று சூடாகி தீய்ந்துபோன மண் வாசனை அடித்தது. ஏதோ ஆபத்து வந்துவிட்டதைப் போல சூரியனும் மறைந்துகொண்டான். ஆனால் தாமரைக்குளத்தின் அருகே இன்னமும் மங்கிய பொன்னொளி வீசியது. அந்த வெளிச்சத்தில் குடிலானது வெட்டிய மரக்கிளைகளினால் செதுக்கியது போல் எழிலாகக் காணப்பட்டது.வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமாகவே இருட்டத் துவங்கியது.
தகிக்கும் பூமியினால் தொடுவானம் செக்கச்செவேல் என்று கண்களை அடிக்கும் நிறத்தில் காட்சியளித்தது. அவரது உதவியாளர்களும் பக்தர்களும் பாதி இருட்டில் கரும் உருவங்களாக அவரை நமஸ்கரிக்க முயன்றார்கள். வேறென்ன அவர்களால் செய்ய முடியும்? தீமைகளை அழிக்கும் ஈஸ்வரனே இந்த மாறும் மாய உலகின் சங்கிலித் தளைகளை அறுத்தெறிய முடியும் என்ற நம்பிக்கையான விளக்கம் என் நெஞ்சினில் பிறக்க பின்னர் நானும் நமஸ்கரித்தேன்.இரண்டாம் நாள்.
சாயந்திர வேளைகளில் “சிவ-சிவ”, “சிவ-சிவ” என்று ஈச்வரனின் திருநாமங்களை இரண்டு மூன்று மணி நேரங்கள் தொடர்ந்து ஜெபிப்பார் ஸ்ரீ மஹாஸ்வாமி. அவரது நாமமே இவரது பணியை செய்கிறது. ஒன்றுமில்லாத சூனியத்திலிருந்து ஒன்றை உருவாக்கும் சக்தி படைத்தவருக்குதான் இந்தப் பிரபஞ்சத்தின் மூலையில் அழிப்பதற்காக, சிதறப்படுவதற்காக, உலர்வதற்கான நக்ஷத்திரங்கள் எங்கிருந்தது என்பது பற்றித் தெரியும்.யாருமே கவனிக்காத வகையில் எல்லாம் ஆரம்பித்தபடியே நிறைவுக்கு வந்தது. மனுஷ்ய ரூபமெடுத்து வந்த ஈஸ்வரன் தனது பயங்கரமான ஸ்வரூபத்தை யாரும் யூகிப்பதற்குள் கைவிட்டார்.
ஸ்ரீ மஹாஸ்வாமியைச் சுற்றியிருந்த உதவியாளர்களும் பார்வையாளர்களும் அவர் காட்டிய அந்தத் தீவிரமான முகத்தைக் கவனிக்கவில்லை. நான் பயப்படமாட்டேன் என்று தெரிந்துதான் எனக்கு அதைக் காட்டினார்.
நான் எதற்கு பயப்படவேண்டும்? பாதுகாக்கும்படியோ பயமுறுத்தும்படியோ ரூபங்கள் ஒரே ஈஸ்வரனிடமிருந்தானே உண்டாகிறது? ரூபங்கள்தான் அப்படி நடந்துகொள்கிறன. அதை உண்டாக்கியவன் எந்தவிதமான வித்தியாசமில்லாமல் அப்படியே இருக்கிறான்.எப்போதும் தன்னுடைய படைப்புகளின் பல்வேறு குணாதிசயங்களிலிருந்து வேறுபட்டவனாகவே படைத்தவன் இருக்கிறான்.
இந்தப் பாடத்திலிருந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய சாரம் என்னவெனில் உண்டாக்கும் ஈஸ்வரனின் அமரத்துவமான பிரகிருதி என்னவென்றால் பிரம்மம். அங்கே பயங்கரத்திற்கு இடமேது?அவர் எனக்குத் தேவையான பார்வையை தாற்காலிகமாக இரவல் கொடுத்தார். இந்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்திக்கொள்வேன் என்பது அவருக்குத் தெரியும்.
ஸ்ரீ மஹாஸ்வாமி இப்படித்தான் அந்த சமயத்தில் எனக்குத் தோன்றினார். இதற்குதான் “இது” நிஜமாகவே முயற்சி செய்தது. அவரிடம் காட்டிய சின்னத் துகளைக் கூட அவர் மனமார ஏற்றுக்கொண்டார்.
இதில் திருப்தியடைந்த ஸ்ரீ மஹாஸ்வாமி அவரின் பக்தனான இவனின் வழியிலிருக்கும் சில தடைகளை அழிப்பதற்காக அப்படியொரு பயங்கர அம்சத்தை அப்போது எடுத்தார்.தொடரும்…
#ஸ்ரீ_மஹாஸ்வாமி_ஒளிவீசும்_கண்கள்_கொண்ட_மாமுனி
#மஹாஸ்வாமி_ஆர்விஎஸ்_பகுதி22