மஹா பெரியவா தீபாவளி பத்தி சொன்னதை ஞாபகப்படுத்திண்டா அதைவிட வேறே என்ன தீபாவளி ஸ்வீட்? அந்த மாதிரி ஞான சாகரத்துடைய குரலை இன்னொரு தடவை எப்போ கேட்கப்போறோம்? கேளுங்கோ அவர் சொல்றதை:
”தீபாவளி க்ருஷ்ண பரமாத்மா நரகாஸுரனைக் கொன்றதால் ஏற்பட்ட பண்டிகை. கங்கையோ பரமேச்வர ஸம்பந்தமுள்ளது. யமுனைதான் கிருஷ்ணனுடைய நதி. ‘யமுனா தீர விஹாரி’ என்றே அவரைச் சொல்கி றோம். அதனால் தீபாவளியில் கங்கா ஸ்நானம் என்று ஏன் விசேஷம் னு உனக்கு தோண்றதா?
பெரியவா ஒருவரைக் கேட்டார். அவர் பேசாமல் தலையை அசைத்து கை கட்டி பெரியவாள் மேலே பேச காத்திருந்தார்.
”தீபாவளிக்கு நாம் எல்லோரும் கங்கா ஸ்நானம் பண்ணுகிறோமென்றால் அதற்குக் காரண புருஷரான கிருஷ்ணர் அன்றைக்குக் காவேரி ஸ்நானம் பண்ணினார் என்று நீ கேள்விப் பட்டிருக்கியோ?” .
“இல்லை. பெரியவாள்தான் சொல்லி அநுக்ரஹம் செய்ய வேணும்”
”உங்களில் வேறு எவருக்காவது அந்தக் கதை தெரியுமா?”
யாரும் பதில் சொல்லலை. .
பண்டிதராகத் தோன்றிய ஒருவர்: “ஸ்ரீமத் பாகவதத்தில் நரகாஸுர வதத்தைச் சொல்லியிருக்கும் இடத்தில், அதற்கு தீபாவளி, கங்கை, காவேரி ஆகிய எந்த ஸம்பந்தமுமே சொல்லியிருக்கவில்லை” னு தான் எனக்கு படறது ”என்றார்.
மஹா பெரியவா: “பாகவதத்திலே இல்லாவிட்டாலும் புராணந்தரங்களில் (வேறு புராணங்களில்) இந்த ஸமாசாரங்கள் இருக்கு. ராமாயண, பாரத, பாகவதா திகளில் வால்மீகியும், வியாஸரும், சுகப்ரம்மமும் சொல்லாமல் விட்ட அநேக விஷயங்கள் வேறு புராணங்களிலும், உப புராணங்களிலும், ஸ்தல புராணங்களிலும் வருகிறது. கதைப் போக்கு, கதா பாத்திரங்களுடைய குண விசேஷம், லோகத்துக்கு இதனால் கிடைக்கிற உபதேசம் என்று எப்படிப் பார்த்தாலும் இவை பெரும்பாலும் இதுக்கு எல்லாம் மூலம் ராமாயண, பாரத, பாகவதாதிகள் தான். அதனாலே மூலக்ரந்தத்துக்கு முரணாக இல்லாத வரைக்கும் இப்படிப்பட்ட கூடுதலான ஸமாசாரங் களையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்”
“நரகாஸுரனை பகவான் ஸம்ஹாரம் பண்ணினவுடன் பூமாதேவி வந்து அவரிடம் பிரார்த்தித்துக் கொண்டதாக பாகவதத்தில் வருகிறதோல்லியோ” ?
.பண்டிதர்: “ஆமாம் பெரியவா. வருகிறது, நரகன் அபஹரித்திருந்த இந்திரனுடைய குடையையும், (இந்திரனின் தாயாரான) அதிதியின் குண்டலங் களையும் பூமாதேவிதான் கொண்டு வந்து பகவானிடம் அர்ப்பணித்தாள் என்று வருகிறது. அப்போது அவள் செய்த ஒரு ஸ்தோத்திரமும் இருக்கிறது. ஆனால் இது பொதுப்படையான ஸ்துதியாக இருக்கிறதே தவிர, நரகனின் ஞாபகார்த்தமாகத் தீபாவளி கொண்டாடப்பட வேண்டும் என்று அவள் வரம் கேட்டதாக இல்லை. நரகா ஸுரனுடைய பிள்ளை பகதத்தனை பகவான் தான் ரக்ஷிக் க வேண்டும் என்று பூமாதேவி ஒப்புக் கொடுத்ததாகவும் சொல்லி இருக்கு ”
மஹா பெரியவா: “வாலியை ராமர் ஸம்ஹாரம் பண்ணினவுடன் அவன், பிள்ளை அங்கதனை அவருடைய guardianship லேயே விட்ட மாதிரி”
அது ஸரி; நரகாஸுரனே இப்படி, தான் வதமான தினத்தை லோகமெல்லாம் பண்டிகையாகக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதா கவும் இன்னொரு version (கதாபேதம்) கேள்விப்பட் டிருக்கிறாயோல்லியோ?
”“கேட்டிருக்கிறேன் பெரியவா ”
மஹா பெரியவா: “எனக்கென்னவோ நரகாசுரனுடைய அம்மாவான பூமாதேவி இப்படி வரம் கேட்டாள் என்பது தான் ரொம்ப விஸேஷமாக மனஸில் படுகிறது. பகவானு டைய ஹஸ்தத்தால் மரணமடைந்து அவருக்குள்ளேயே ஐக்கியமாகிற ஸ்டேஜில் இருக்கும் ஒருத்தனுக்கு நல்லறிவு உண்டாகி இம்மாதிரி வேண்டிக் கொள்வதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் ஒரு பெற்ற தாய் புத்ர சோகத்தில் வயிறெரியாமல், பரம துக்கமான ஸமயத்தில், நம் பிள்ளை போனாலும் பரவா இல்லை, அவன் போனதற்காகவே, லோகத்தில் ஸமஸ்த ஜனங்களும் ஸந்தோஷமாக விழா கொண்டாட வேண்டும் என்று வேண்டிக் கொண்டாளென்றால் அதுதான் நெஞ்சைத் தொடுகிற மாதிரி இருக்கிறது. பொறுமைக்கு பூமாதேவி என்பது இங்கேதான் நிரூபணமாகிறது. அந்தத் தாயாருடைய தியாக சக்தியினால்தான் தேசம் பூராவிலும் வேறெந்தப் பண்டிகைக்குமில்லாத பிராதான்யம் (முதன்மை) தீபாவளிக்கே ஏற்பட்டிருக்கிறது என்று தான் எனக்கு தோண்றது . அது தான் என் அபிப்ராயம்”
”மஹா பெரியவா கிருஷ்ணன் காவேரி ஸ்நானம் பண்ணிய விஷயம் சொல்லணும்:”
மஹா பெரியவா: “ ஏற்கனவே உங்களில் ஒருத்தர் கங்கா ஸ்நான ஸம்பந்தத்தைச் சொல்லு’னு கேட்டார். நான் காவேரி ஸ்நானத்தைப் பற்றிச் சொல்கிறேனென் றால், “ஸ்வாமிகளுக்கு நாம் கேட்ட விஷ்யம் தெரியாது” என்று நினைச்சுக்க மாட்டாரா? அதனால், கங்கா ஸ்நானம், காவேரி ஸ்நானம் எல்லாவற்றையும் பற்றிச் சொல்கிறேன்”
“இவர் (பண்டிதர்) பாகவதத்திலே வந்தால்தான் ஒப்புக் கொள்வேன்” என்று சொல்வாரே. ஆகவே நான் அதோடு வேறு கதைகளையும் போட்டுப் பிசைந்து அவியலாகத்
தான் சொல்லப் போகிறேன்.
காவேரி மகாத்மியத்தைப் பற்றி ஸ்காந்தம், ஆக்நேய புராணம், பிரம்ம வைவர்த்த புராணம் முதலானதுகளில் இருக்கிறது. அதிலொன்றில் துலா காவேரி மஹிமை யைச் சொல்கிற இடத்தில் தான் தீபாவளிக் கதை வருகிறது. சுகருக்கு பாகவதத்தை உபதேசித்த அதே வியாஸாசாரியாள்தான் இந்த எல்லாப் புராணங்க ளையும் கொடுத்திருக்கிறார்”
ஒரு பக்தை: “நரகாஸுர வதக்கதையைக்கூடப் பெரியவாள் வாயாலே கேட்கணும்”
மஹா பெரியவா: “எல்லாக் கதையும்தான்! ஏதோ இப்போது எனக்கு நினைவு வருகிற வரைக்கும் சொல்கிறேன்”
”கங்கையோடு காவேரிக்கு ஸம்பந்தம் இருக்கு. தீபாவளி அன்னிக்கு ஒரு நாள் மட்டும் எல்லா வெந்நீ ரிலும் அருணோதயதிலிருந்து ஸுர்யோதயம் வரை ஒரு முஹூர்த்தம் – அதாவது இரண்டு நாழிகை – கங்கை இருக்கிறாளென்றால், துலா மாஸம் முழுக்கவே அருணோத யத்தில் ஆரம்பித்து ப்ராதக்காலம் முடிகிறவரை, அதாவது ஸுர்யன் உதித்து ஆறு நாழிகை வரை காவேரியில் கங்கை உள்பட ஸகல தீர்த்தங்களும் இருக்கு.
தீபாவளியன்னிக்கி நாம் அருணோதயத்தில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு கங்கா ஸ்மரணத் தோடு வெந்நீர் ஸ்நானம் பண்ணணும். அப்புறம் ஸுர்யோதயமானபின், ஆனால் ஆறு நாழிகைக்குள் (2 hrs 24 mins), பச்சை ஜலத்தில் இன்னொரு ஸ்நானம் பண்ணனும் . இந்த ஸ்நானத்தின் போது துலா காவேரி யை ஸ்மரித்துக்கொண்டு பண்ணணும். முதல் ஸ்நானத்தில் நரகாஸுரன், பூமாதேவி, ஸத்யபாமா, கிருஷ்ணர் எல்லார் நினைவும் வரும். இரண்டாம் ஸ்நானத்தில் பரமேஸ்வரன் நினைவும் வந்துவிடும்.
இந்தப் புண்ய ஸ்மரணம்தான் பெரிய ஸ்நானம். உள்ளே இருக்கிற அழுக்கையெல்லாம் அகற்றி ஜீவனைக் குளிப் பாட்டிப் பரிசுத்தி பண்ணுவது அதுதான். ‘கோவிந்தேதி ஸதா ஸ்நானம்’ என்கிறது இது தான். இப்படிச் சொன்ன தால் வெளியே இருக்கிற கங்கா, காவேரியெல்லாம் அவசியமில்லை, பிரயோஜனமில்லை என்று அர்த்தம் பண்ணிக்கொண்டு விடக்கூடாது.
அந்த கோவிந்தனேதான் நம்மிடம் கருணையோடு நமக்கு கங்கா ஸ்நானத்தைக் கொடுத்து, தானே காவேரி ஸ்நானம் பண்ணிக் காட்டியிருக்கிறான். அவனுடைய ஸ்மரணத்தோடு இப்படி ஸ்நானம் பண்ணினால் அது உள்ளத்துக்கு ஸ்நானம் என்பது மட்டுமில்லை, உள்ளத்துக்குப் புது வஸ்திர அலங்காரம், மதுரமான பக்ஷணம் எல்லாமும் அதுவேதான்!
தீபாவளியன்று யமனுக்குத் தர்ப்பணம் பண்ண வேண்டுமென்று சொல்லியிருக்கிறது. வட தேசத்தில் தீபாவளிக்கு முதல் நாள் ‘யம தீபம்’ என்றே போடுகிறார்கள்.
இது துலா மாஸம். (அதாவது ஐப்பசி). இந்த மாஸம் பூராவும் தினமும் அருணோதயத்திலிருந்து உதயாதி ஆறு நாழிகை (2 மணி 24 நிமிஷம்) வரை அறுபத்தாறு கோடி புண்ய தீர்த்தங்களும் காவேரியில் வாஸம் செய்கின்றன.
தீபாவளி அன்னிக்கி காலம்பற குளிக்கிற வெந்நீரில் லக்ஷ்மியும், கங்கையும் வஸிக்கும்படி செய்துவிட்டால் குளிர் விட்டு போய்டும்.பயமே இல்லை. லக்ஷ்மியும் கங்கையும் வேண்டாம் என்று யாருமே நினைக்க மாட்டார்கள். இதனால் ஸகல ஜனங்களுக்கும், பண்டிகை என்ற ஸந்தோஷத்துடன் புண்ணியம் என்பதும் கிடைக்கும்’ என்று கங்கா தேவி நினைத்தாள். இதனால்தான் அந்த ஸ்நானத்துக்கு கங்கா ஸ்நானம் என்றே பேர் ஏற்பட்டது.
ஒவ்வொருத்தர் அகத்திலேயும் கிணற்றடியில், பாத்ரூமில் மொண்டு விட்டுக் கொண்டு ஸ்நானம் பண்ணுகிறவர்களும் கிழக்குப் பார்க்கவே பண்ண வேண்டும். பொதுவாக எந்தக் கர்மாவுக்குமே எடுத்தது கிழக்கு திசை தான்.
தீபாவளி ஸ்நானம் செய்ய முதலில் தலையில் எண்ணையால் 7 பொட்டு வைத்து பிறகு வலது துடையிலும் 7 பொட்டு வைத்துக்கொண்டு பிறகு அந்த எண்ணையை வழித்து கீழ்கண்ட ஸ்லோகத்துடன் தலையில் வைத்துக்கொண்டு ஸ்நானம் செய்வது வழக்கம்.
”அஸ்வத்தாமா பலிர் வ்யாஸ, ஹனுமான்ச விபீஷண ஸுகன்ச பரசுராமஸ்ச ஸப்தைதே சிரஞ்சீவிந: தைலே லக்ஷ்மி ஜலே கங்கா|தீபாவளி தினே வசேது|அலக்ஷ்மி பரிகாரார்த்தம்|அப்யஞ்கணம் ஆசரேது”
யம தர்ப்பணம்பண்ணும்போது சொல்லல்வேண்டிய மந்திரம்;
1 யமம் தர்ப்பயாமி
2 தர்மராஜம் தர்ப்பயாமி
3 ம்ருத்யும் தர்ப்பயாமி
4 அந்தகம் தர்ப்பயாமி
5 வைவஸ்வதம் தர்ப்பயாமி
6 காலம் தர்ப்பயாமி
7 ஸர்வ பூத க்ஷயம் தர்ப்பயாமி
8 ஔதும்பரம் தர்ப்பயாமி
9 தத்னம் தர்ப்பயாமி
10 நீலம் தர்ப்பயாமி
11 பரமேஷ்டிம் தர்ப்பயாமி
12 வ்ருகோதரம் தர்ப்பயாமி
13 சித்ரம் தர்ப்பயாமி
14 சித்ரகுப்தம் தர்ப்பயாமி
தீபாவளி அன்னிக்கு இதை ஞாபகம் வைச்சுக் கோங்கோ:
பகவான், பரம்பொருளை பற்றிய நினைவு ஒன்றுதான் எல்லோரையும் சேர்ந்து வாழ வைக்க கூடியது …மதமும், பக்தியும் எல்லோரும் ஒன்றாக வாழ்ந்து சந்தோஷமாக இருபதற்காக மட்டுமே ஏற்பட்டவை .ஒருவரை ஒருவர் அடித்து கொண்டு துன்பப்பட அல்ல. பக்திதான் நம் எல்லோரையும் இணைத்து வைக்கும் பெரிய சக்தி.. வடக்கே காசியில் இருந்து தெற்கே உள்ள ராமேஸ் வரத்துக்கும்,தெற்கேயிருந்து வடக்கே உள்ள ஷேத்தி ரங்களுக்கும் ஜனங்கள் தரிசனம் செய்ய போய்க் கொண்டே இருக்கிறார்கள். இன்றுவரை எத்தனை மாறுதல்கள் ஏற்பட்டும் அப்பழக்கம் மாத்திரம் விட்டு போகவில்லை ..பாஷை ராஜ்ய எல்லைகள் இதர பழக்க வழக்கங்கள் மாறினாலும் இந்த அடிப்படையில்தான் சகலவித ஜனங்களும் மற்ற எல்லாவற்றையும் மறந்து ஒன்று சேருகிறார்கள் .அழிவற்ற ஒரே வஸ்துவால் ஏற்படும் இந்த உண்மையான ஒற்றுமை அழியவே அழியாது.
பக்திக்கு ஆதாரம் அன்பு. ஆண்டவன் கருணைக் கடல்.அந்த அன்புக்கு கட்டுப்படாத ஜீவராசியே கிடையாது .அது போல் பக்தனின் அன்புக்கு கட்டுப்படாத ஆண்டவன் இல்லை.அன்பின் சக்தி மகத்தானது.அன்பு அன்பை வளர்க்கும் . நமது பாரத தேச மக்கள் அனைவருமே அன்பு என்னும் வெள்ளத்தில் மூழ்க வேண்டும்.அதற்கு உள்ளங்கள் தூய்மையாக இருக்கவேண்டும் .தர்மம் செழித்தால் உள்ளம் சுத்தி பெற்றுவிடும் ..நமது வேதம்தான் தர்மத்தின் இருப்பிடம் .அது அநாதியானது.உலகத்துக்கே பொதுவான பொக்கி ஷம்.அது நாடு பூராவும் முழங்க வேண்டும்.தர்ம சிந்தை யும்,தெய்வ வழிபாடும் கருணை உள்ளமும் நம் பாரத நாட்டின் சிறப்பான அம்சங்கள்.ஒற்றுமையை வளர்க்க வேண்டுமானால் இவற்றை வளர்க்க வேண்டும்.
இது உலகம் பூராவுக்கும் பொருந்தும் .அன்பில் விளைவது தான் உண்மையான சாந்தி. ஒவ்வொருவருக் கும் மனசாந்தி ஏற்பட்டு விட்டால் உலகில் அமைதி தானாக நிலைத்து விடும்.முதலில் வேற்றுமை உண்டு என்ற அறியாமை விலக வேண்டும். இந்த இருள் நீங்கி ஒளி பிறக்க வேண்டும் என்று பிரார்த்தித்து கொண்டு இந்த தீபாவளி அன்று மங்கள ஸ்நானம் செய்வோமாக”
++++
உங்கள் எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.