அல்சரையும் காணோம்;வலியையும் காணோம்

வேறு ஒரு சங்கரமடம் பக்தரின் வயிற்று வலியை தன் வயிற்றின் மேல் உருட்டின சாத்துக்குடியால் வலி தீர்த்த சம்பவம் – பெரியவா கருணையால்!

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆஸ்திகர்கள், ஒரு பேருந்தில் ஸ்தல யாத்திரை செய்யப்
புறப்பட்டார்கள். கன்னியாகுமரி ,திருச்செந்தூர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர்,  கும்பகோணம்  போய் விட்டு காஞ்சிபுரம் வந்தார்கள்.

காமாட்சி கோயிலில் அபிஷேக நேரம் ஒரு மணி நேரம்போல் காத்திருக்கவேண்டும் என்று தெரிய வந்தது. “நடை திறப்பதற்குள் சங்கராச்சார்யாரைத் தரிசித்து விட்டு வரலாமே?” என்று எல்லோரும் புறப்பட்டார்கள். – ஒரு தம்பதியைத் தவிர.

அவர்கள் வேறு ஒரு சங்கரமடம்(பீடாதிபதி) பக்தர்கள். அதனால் ஸ்ரீ காஞ்சிப் பெரியவாளைத் தரிசனம் செய்யப் பிரியப்பட வில்லை. ஆகவே காமாட்சி கோயிலிலேயே தங்கிவிட்டார்கள். ஆனால், வெகு நேரமாகியும் ஸ்ரீமடத்துக்கு சென்றவர்கள் திரும்பி வராததால், வேறு வழியின்றி அவர்களைத் தேடிக்கொண்டு ஸ்ரீமடத்துக்கே வந்து விட்டார்கள்.

அவர்கள் வந்த நேரத்தில், ஸ்ரீ பெரியவாள் பூஜை முடிந்து, தீபாராதனை செய்து கொண்டிருந்தார்கள். உத்தராங்க உபசாரங்கள் முடிந்து,பூஜையை நிறைவு செய்து, ஸ்ரீ பெரியவாள் கீழே இறங்கி வந்து தீர்த்தப் பிரஸாதம் கொடுக்கத் தொடங்கினார்கள்.

கடைசியாக அந்த திருவனந்தபுரம் அன்பர் முறை வந்தது.அவருடைய பெயரைக் கூறி,அவருடைய தகப்பனார் கோத்திரம், அவர்கள் வீட்டின் அமைப்பு,தோட்டம் உட்பட சகல விஷயங்களையும் பெரியவாளே கூறினார்கள்.

இவ்வளவையும் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஒரு சாத்துக்குடியைத் தன் வயிற்றின் மேல் உருட்டிக் கொண்டே இருந்தார்கள் பெரியவாள்.

திருவனந்தபுரத்துக்காரருடன் சுமார் ஒரு மணி நேரம் பேசி விட்டு, பிரஸாதமாக அந்த சாத்துக்குடியைக் கொடுத்தார்கள். வந்தவருக்கு,வயிற்றுப்புண்(பெப்டிக் அல்சர்) மருத்துவர் ஆலோசனைப்படி அவர் இருபது நிமிஷங்களுக்கு ஒருமுறை ஏதாவது சாப்பிட்டு விட்டுத் தண்ணீர் குடிக்க வேண்டும். பெரியவாளிடம் பேசிக் கொண்டிருந்ததால் ஒரு மணி நேரம் எதுவும் சாப்பிடவில்லை.

பிரஸாதம் பெற்றுக் கொண்டு வெளியே வந்ததும் அவசரம் அவசரமாக சாத்துக்குடியை உரித்துச் சாப்பிட்டார்.

அதன் பிறகு, அல்சரையும் காணோம்; வலியையும் காணோம்.பின்னர் ஸ்ரீமடத்தின் அத்யந்த பக்தர் ஆனார் திருவனந்தபுரத்துக்காரர்.

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு | தட்டச்சு – வரகூரான் நாராயணன் | புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்