Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் மலேசிய மொழியில் அபிராமி அந்தாதி

மலேசிய மொழியில் அபிராமி அந்தாதி

 

மலேசிய மொழியில் முதல் அடியை எடுத்துக் கொடுத்த மகா பெரியவா…

மலேசிய மொழி என்ன, மண்ணுலக மொழிகள் அத்தனையுமே பெரியவாளுக்குத் தெரியும்!”- ஒரு அன்பர்(.”விண்ணுலக மொழியும் தெரியும்!” – என்றார் இன்னொருவர்)

தொகுப்பாளர்: டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு: வரகூரான் நாராயணன்

மலேஷியாவில் சூசை என்று ஒரு கவிஞர். பிறப்பால் கிறிஸ்தவர். தமிழ்மொழியின்மேல் ஆராத அன்பும் இந்து சமயத் தத்துவங்களிடம் ஈடுபாடும் உடையவர்.

சென்னை நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு, மகாஸ்வாமிகளைத் தரிசிக்கக் காஞ்சிபுரம் வந்தார்.

அன்றைக்கு என்று ஏராளமான கூட்டம். இவர்கள், பெரியவாளைத் தரிசிக்க முடியுமா? முடிந்தாலும் மடத்துக்கு முன்னரே அனுப்பப்பட்ட மலேஷிய மொழியில் பெயர்க்கப்பட்ட “அபிராமி அந்தாதி, பாஞ்சாலி சபதம்” பற்றிப் பேசமுடியுமா? என்ற தவிப்பு.

ஒரு தொண்டர் வந்தார்.

“இங்கே யாரு சூசை?”

“நான்தான்…”

“உங்க சிநேகிதர் ராமமூர்த்தி?”

“இதோ, இவர்தான்…”

“ரெண்டு பேரையும், உள்ளே அழைத்து வரும்படி உத்திரவாயிருக்கு…”

உள்ளே சென்றார்கள்.

“இவர்தான் சூசையா?”

மெய்சிலிர்த்தது கவிஞருக்கு.

“அபிராமி அந்தாதியை,மொதல்லே,உங்க ஊர் பாஷையிலே சொல்லுங்கோ.அப்புறம், தமிழ்லே சொல்லுங்கோ…”

கவிஞருக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. முதலில் மலேசிய மொழியில்-அவரே மொழிபெயர்த்த அபிராமி அந்தாதியைச் சொன்னார். பின், தமிழிலும் சொல்லும்படி உத்தரவாகியிருக்கிறதே!

முதல் பாட்டின் முதல் அடியே நினைவுக்கு வரவில்லை! தலையில் குட்டிக் கொண்டார். ஊஹூம்!

அவர் சங்கடத்தைப் புரிந்துகொண்ட பெரியவா, தானே முதல் அடியை எடுத்துக் கொடுத்தார்கள்.

கவிஞர், அந்தாதி சொல்லி முடித்ததும், “ரொம்ப நன்றாகச் செய்திருக்கிறீர்கள். உங்கள் மொழிபெயர்ப்பில் ஏழு சம்ஸ்க்ருத வார்த்தைகள் இருக்கின்றன” என்று கூறி அதிர்ச்சியடையச் செய்ததுடன், அவைகள் என்னென்ன என்று பட்டியலிட்டார்கள்.

பின்னர், மலேசியாவில் ஓர் இடத்தைக் குறிப்பிட்டு “அங்கே ஒரு சிவன் கோயில் இருக்குமே?” என்று கேட்டார்கள்.

“ஆமாம்…இருக்கிறது” என்று வியப்புடன் கூறினார் சூசை

சிறிதுநேரம்,மலேசிய நாட்டின் பூகோளம்,ஆலயங்கள் பற்றிப் பேசினார்கள்.

பிரசாதம் கொடுத்தபோது, மலேசிய மொழியில் தான் கேட்ட அபிராமி அந்தாதியின் முதல் வரியைக் கூறி ஆசீர்வதித்தார்கள்.

சூசை திகைத்துப் போய் நின்றார்.

‘மகாஸ்வாமிகளின் மனத்தில்,அயல் மொழியில் ஒரே ஒருமுறை கேட்ட அந்தப் பாடல் வரி,எப்படிப் பதிவாயிற்று?’ என்று வியந்தார்கள்.-கூடியிருந்த அன்பர்கள், “மலேசிய மொழி என்ன, மண்ணுலக மொழிகள் அத்தனையுமே பெரியவாளுக்குத் தெரியும்!” என்றார் ஓர் அன்பர்.

“விண்ணுலக மொழியும் தெரியும்!” – என்றார் இன்னொருவர்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version