October 16, 2021, 2:50 pm
More

  ARTICLE - SECTIONS

  “பெருமாளே வந்து சொன்ன மாதிரி இருக்கு”

  “பெருமாளே வந்து சொன்ன மாதிரி இருக்கு”.

  “என்னமோ நினைச்சு குழம்பிண்டிருந்தேன்… ராமேஸ்வரம் போகத்தான் வேணும்னு சொல்லுவேளோன்னு… பெரியவா மனசு ஸ்படிகம் மாதிரி பரம சுத்தம்!… சம்பிரதாய விரோதமில்லாதபடி ஒரு நல்ல வழி காட்டியிருக்கேள் .-“-வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த ஓர் அம்மையார் (பெரியவாளின் சர்வப் பிராயச்சித்தம் )

  சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
  தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
  தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

  வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த ஓர் அம்மையார் தரிசனத்துக்கு வந்தாள். அவர்கள் மரபுப்படி சேவித்து விட்டு நின்றாள்.

  அதிகக் கூட்டமில்லாத நேரம்.

  அம்மாளின் கண்களில் ஓர் ஏக்கம்,ஆவல் ,எதிர்பார்ப்பு, நம்பிக்கை – எல்லாம் தெரிந்தன.

  குடும்பத்தில் பலவிதமான கஷ்டங்கள், வியாதி வெக்கை. ஒரு பெண்ணுக்குக் கல்யாணமாகி ஏழெட்டு வருஷமாகியும் குழந்தைகள் இல்லை. இன்னொரு பெண்ணுக்கு வயது எகிறிக் கொண்டே போகிறது .சரியான வரன் கிடைக்கவில்லை!பையனுக்கு படிப்பு வரவில்லை. பணக்கஷ்டம் , இன்னும் என்னென்னவோ…..

  கேரளா சென்று நம்பூதிரியிடம் பிரச்னம் பார்த்தாள். பித்ரு தோஷமாம். முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய கர்மாக்களை ஒழுங்காகச் செய்ய வில்லையாம். ராமேஸ்வரம் போய் பரிகாரம் பண்ணணுமாம்.

  வைஷ்ணவ மரபுப் பிரகாரம், ராமேஸ்வர யாத்திரை, பரிகாரச் சடங்குகள் செய்வது வழக்கமில்லை.

  “என்ன செய்யறதுன்னே தெரியல்லே. சம்பிரதாயத்தை மீற முடியல்லே, கஷ்டமோ தீரணும். பெரியவா தான் வழி காட்டணும்” என்று பவ்யமாகச் சொன்னாள் அம்மாள்.

  “நீங்கள் தென்கலையா?” என்று பெரியவா கேட்டார்கள்.

  “ஆமாம்”

  “உப்புச்சாறு, சாணிச்சாறு, சடைச்சாறு என்ற மூன்றும் தென்கலையார்களுக்குக் கிடையாது…”

  “உப்புச்சார்,சாணிச்சார்,சடைச்சார்-னு எங்க அம்மா சொல்லுவா..”

  “அதே தான்!

  ராமேஸ்வர சமுத்ர ஸ்நானம் -உப்புச்சார், பஞ்சகவ்ய ப்ராசனம்- சாணிச்சார், கங்கா ஸ்நானம் – சடைச்சார்.(பரமசிவனின் சடையிலிருந்து வெளிப்பட்டதால்); அதனாலே, சம்பிரதாய விரோதமாக ராமேஸ்வரம் போக வேண்டாம்.

  1.நித்தியம் சாளக்ராமம் (பெருமாள்) திருவாராதனம் செய்து, திருமஞ்சன தீர்த்தம் சாப்பிடணும்.

  2. ஏகாதசியன்று உபவாசம். பால்,பழம், கிழங்கு சாப்பிடலாம். அன்னிக்கு உங்கள் வீட்டுக்காரர் பன்னிரண்டு திருமண் இட்டுக்கொண்டு திருவாராதனம் செய்யணும். மறுநாள் துவாதசியன்னிக்கு சீக்கிரமாகவே திருவாராதனம் செய்து, துளசி தீர்த்தம் சாப்பிட்டுவிட்டுப் பாரணை செய்யணும்.

  3. தினமும் ஒரு பசுமாட்டுக்காவது ஒரு கைப்பிடி அளவு புல் தரணும்.

  இப்படியெல்லாம் செய்தால், சர்வப் பிராயச்சித்தம் செய்ததாகும்”

  பெரியவா மெள்ள மெள்ள வார்த்தைகளைக் கூறி உபதேசத்தை முடித்தபோது, அந்த அம்மாள் உதடுகளை மடித்து,அழுகையை அடக்கிக் கொண்டு கண்கள் பனிக்க நின்றாள்.

  “பெருமாளே வந்து சொன்ன மாதிரி இருக்கு. என்னமோ நினைச்சு குழம்பிண்டிருந்தேன்… ராமேஸ்வரம் போகத்தான் வேணும்னு சொல்லுவேளோன்னு… பெரியவா மனசு ஸ்படிகம் மாதிரி பரம சுத்தம்!… சம்பிரதாய விரோதமில்லாதபடி ஒரு நல்ல வழி காட்டியிருக்கேள்….”

  பிரசாதம் பெற்றுக்கொண்டு அந்த அம்மாள் சென்றபோது, அவர் முகம் ஸ்படிகம் போல் இருந்தது.

  தெளிவாக, மிகத் தெளிவாக.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,141FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,559FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-