“சாமி..இப்போ…ரொம்ப ஆளுங்க திருந்திட்டாங்க. தண்ணி போடறதையே நிறுத்திட்டாங்க”………………..
..(-கிராமப் பிரமுகர்-பெரியவாளிடம்).

மாற்றத்துக்குக் காரணம் வாழைப்பழங்களா? இல்லை பெரியவாளின் வார்த்தைப் பழங்களா? (எதுவாகவோ இருக்கட்டும். இனிமேல் அந்தப் பகுதியில் பழம் + கள் தலைகாட்டாது, தானே)

சொன்னவர்; ராயவரம் பாலு ஸ்ரீமடம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

ரஸ்தாளி வாழைப்பழத்தார்கள். இரண்டு தார்கள். ஒவ்வொன்றிலும் பத்துப் பன்னிரண்டு சீப்புகள் இருக்கும். ஒரு தாரை, இரண்டு பேர்கள் சுமக்க வேண்டியிருந்தது. கனம் என்பதால் மட்டும் இல்லை. பெரியவாள் திருமுன்னிலையில் சமர்ப்பிக்கப்படும் வரையிலாவது பழங்கள் நசுங்காமல் இருக்கவேண்டும்!

சிவாஸ்தானத்தில் பெரியவாள் தங்கியிருந்தபோது காட்டுப்புதூர் செல்வந்தரான ஒரு பக்தர்,மிகவும் ஆர்வத்துடன் கொண்டு வந்த காணிக்கை,அந்த வாழைத்தார்கள். அவருடன் பேசி, பிரசாதம் கொடுத்து அனுப்பியபின்,ஒரு சிஷ்யரைக் கூப்பிட்டார்கள், பெரியவாள்.

“இரண்டு தார்களையும் ஜாக்கிரதையாக எடுத்து உள்ளே வை. பழங்களைப் பாரேன்! – எவ்வளவு மொழு மொழுன்னு இருக்கு!…ஒரு பழம் சாப்பிட்டால் போதும். சாப்பாடே தேவையில்லை!.. நாலு நாளைக்கு உங்களுக்கெல்லாம் கவலையில்லை!”.

இல்லை. இந்த மாதிரி,பெரியவா உத்திரவிடவில்லை!

“….டேய்!..ரெண்டு தாரையும் கொண்டு போய்… வாசல்லே புளியமரம் இருக்கு பாரு? அதன் கிளையிலே,கைக்கு எட்டுகிற மாதிரி தொங்க விடு..”

(அநியாயம்..அக்ரமம்…பெரியவா இப்படியெல்லாம் எங்களுக்கு அநீதி இழைக்கக்கூடாது. நான் இதை பலமாகக் கண்டிக்கிறேன் – என்று வாயைத் திறந்து சொல்லவே முடியாது என்பதிருக்கட்டும், மனத்தால் எண்ணிப் பார்க்கக்கூட முடியாது)

சிவாஸ்தானம் – தேனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மக்கள் மிகவும் வறுமையில் உழல்பவர்கள். பொறுப்பில்லாத பல ஆண்கள், நன்றாகக் குடித்துவிட்டுப் பசியோடு வீட்டுக்குப் போய், அங்குள்ள பெண்டு பிள்ளைகளைப் பயங்கரமாக அடித்து நொறுக்குவார்கள்.

வாழைத் தார் கட்டிய அன்று, அவ்வழியாகப் போனவர்கள் ஒவ்வொரு வாழைப்பழம் பிய்த்துத் தின்றுவிட்டுப் போனார்கள். வயிற்றுப் பசி வெகுவாகக் குறைந்து விட்டதால், வீட்டில் அடி – அமர்க்களம் அளவாகவே இருந்தது.

(இந்த சூட்சுமம் பெரியவாளுக்கு எப்படித் தெரியும்?)

மறுநாள், நிரந்தரமான ஓர் உத்திரவு பிறப்பித்தார்கள், பெரியவாள்;

“அடியார்கள் சமர்ப்பிக்கும் வாழைச் சீப்புகளைப் புளியமரத்துக் கிளையில் தொங்க விட வேண்டும்!”

சுமார் பதினைந்து நாட்களுக்குப் பிறகு. அந்த கிராமப் பிரமுகர் ஒருவர் தரிசனத்துக்கு வந்தார்.

“சாமி..இப்போ…ரொம்ப ஆளுங்க திருந்திட்டாங்க. தண்ணி போடறதையே நிறுத்திட்டாங்க…. குடிசையிலே பொம்பளைங்க சந்தோசமா இருக்காங்க..”

மாற்றத்துக்குக் காரணம் வாழைப்பழங்களா? இல்லை பெரியவாளின் வார்த்தைப் பழங்களா?

எதுவாகவோ இருக்கட்டும். இனிமேல் அந்தப் பகுதியில் பழம் + கள் தலைகாட்டாது, தானே

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...