“மாமி நீங்க பாட்டி ஆயிட்டங்களாம்”

(அணுக்கத் தொண்டர் ஒரு பெண்மணியிடம்)

(தீர்க்க தரிசனத்தால் அறிந்த பெரியவா)

.

கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம் லைஃப் -11-04-2018(வெளிவந்த)

மகாபெரியவா கும்பகோணத்தில் மடாதிபதியாக கொலுவீற்று அருளிய காலகட்டம் அது.

சூரியன், பாலசூரியனாகத் தோன்றும்போதே அதனுடைய பிரகாசம் ஜொலிஜொலிக்கும். அதே மாதிரி மகாபெரியவா, பால வயதினரா இருந்தபோதே அவரோட திவ்ய திருஷ்டி பிரமாதமா இருந்தது.

தனக்குத்தானே சுயம் ஆசார்யனா இருந்து அவராகவே எல்லா சாஸ்திர தர்மங்களையும் கத்துக் கொண்டார்.

பாலவயதினரா இருந்த மகாபெரியவா,மடத்து நியதிப்படி சந்திரமௌலீஸ்வர பூஜையை எல்லாம் பண்ணி முடிச்சதும்,தீர்த்தம் தர அமர்வார்.

அந்த சமயத்துல ஆசார்யாளுக்கு முன்னால, இரண்டு பெரிய திரைகள் போடப்பட்டிருக்கும். திரைக்கு உள்ளே மறைவிலேதான் மகா பெரியவா உட்கார்ந்திருப்பார். அவர் தீர்த்தம் வழங்கற உத்தரணி, பெரிய கரண்டி மாதிரி இருக்கும். அதுல ஒரு முறை தீர்த்தம் எடுத்தா,மூன்று நான்கு பக்தர்களுக்கு போதுமானதாக இருக்கும்.

திரையை நகர்த்தினாலே தவிர, உள்ளே அமர்ந்துள்ள மகானை பக்தர்கள் பார்ப்பது சாத்தியமில்லை. அது மட்டுமல்ல, தீர்த்தம் வாங்கிக்கொள்ள வரும் பக்தர்கள் யாரையும் மகாபெரியவா பார்க்கறதுக்கான வாய்ப்பே இல்லை.

இப்படி ஒரு சூழல்ல, பால வயதினரா இருந்த மகாபெரியவா தன்னோட ஞானதிருஷ்டியை பலமுறை உணரச் செய்திருக்கார்.திரைக்கு அந்தப் பக்கம் இருக்கிறவாளை,மகான் எப்படிப் பார்த்திருக்கக் கூடும்னு ஆச்சர்யப்படற மாதிரி, மறுபுறம் இருக்கறவரைப் பத்தின முக்கியமான விஷயம், அவர் வந்திருக்கறதுக்கான காரணம் போன்றவற்றையெல்லாம் சொல்லி, திகைக்க வைப்பாராம் மகாபெரியவா.

வரிசையாக வரக்கூடிய பக்தர்கள் ஒவ்வொருத்தரும் அவரவர் முறை வந்ததும், தீர்த்தப் பிரசாதம் வாங்கிக்கறதுக்காக கையை நீட்டும் சமயத்தில் அவரைப் பற்றின விஷயங்கள் எல்லாமும் மகானுக்கு நன்றாகத் தெரிந்துவிடுமாம்.

சில சமயம் அப்படி வரும் பக்தர் அல்லது பக்தையைப் பற்றிய சில குறிப்பான வார்த்தைகளை, தன் பக்கத்தில் நிற்கும் அணுக்கத் தொண்டரிடம் கூறி தீர்த்தப் பிரசாதம் வாங்க வந்திருக்கும் பக்தரை விலகிப் போகுமாறு சொல்வது உண்டாம்

மகாபெரியவாளிடம் தீர்த்தம் வாங்க முடியவில்லையே என்று அப்போது வருத்தப்படும் பக்தருக்கு பின்னர் தெரியவரும் ஏதோ ஒரு விஷயம். தான் அப்போது தீர்த்தம் பெறத் தகுதியற்றுப் போனதிற்குக் காரணம் என்ன என்பதை அந்த பக்தருக்கு புரியவைக்குமாம்.

அந்த மாதிரி ஒரு சமயம் மகாபெரியவாளிடம் தீர்த்தப் பிரசாதம் வாங்குவதற்கான வரிசையில் பிரபலமான செல்வந்தர் ஒருவரது மனைவி நின்றிருந்தார். மகாபெரியவா மீதான பக்தி அதிகம் உள்ள அந்தப் பெண்மணி, பிறருக்குக் கொடுப்பதிலும் தாராள குணம் உள்ளவர்.அதனால், வழக்கமாக அவர் மகாபெரியவாளை தரிசிக்க வந்தால், அவரது குடும்பத்தில் எல்லோரைப் பற்றியும் இரண்டொரு வார்த்தையாவது விசாரித்துவிட்டு ஆசிர்வாதம் செய்வார், ஆசார்யா.

அன்றைய தினம்,வழக்கம்போல தீர்த்தம் பெறும் பக்தர்கள் வரிசை மெதுவாக நகர்ந்து, அந்தப் பெண்மணி தீர்த்தம் பெற வேண்டிய முறை வந்தது.எப்போதும் எதுவும் சொல்லாமல் அவருக்கு தீர்த்தம் தரும் மகாபெரியவா, அன்றைய தினம் தீர்த்தம் பெறும் ஆவலோடு கைநீட்டிய அவர் கையில் தீர்த்தத்தை விடாமல், அப்பெண்மணியை வரிசையில் இருந்து விலகிப்போய்விடச் சொல்லும்படி, பக்கத்திலிருந்த அணுக்கத் தொண்டருக்கு சமிக்ஞை செய்ய,அவரும் அந்தப் பெண்மணியை நகர்ந்து போங்கள் என்று சொல்லிவிட்டார்.

வழக்கமாகத் தனக்கு தீர்த்தப் பிரசாதம் தரும் மகான் இன்றைக்கு ஏன் இப்படிச் சொன்னார்? ஒருவேளை ஏதாவது ஏடாகூடமான விஷயம் நடந்திருக்குமோ ..வருத்தம் தரும் விஷயமாக இருக்குமோ..! அல்லது தான் ஏதாவது தவறு செய்திருப்போமோ.. என்றெல்லாம் மனதுக்குள் மருகி, வருத்தப்பட்டு கண்கலங்கியவாறே அங்கிருந்து நகர்ந்தார்.

திரைக்குப் பின்னால் இருந்த மகானுக்கு, தன் பக்தை படும் மனத்துயர் தெரியாதா? உடனே ஒரு அணுக்கத் தொண்டரை அழைத்து, ” நீ வேகமாகப் போய் அந்த மாமியிடம் அவ பாட்டி ஆயிட்டாள்னு சொல்லிட்டு வா!” என்றார்.

அந்தத் தொண்டரும் உடனே ஓடிச் சென்று அந்த மாமியிடம், “மாமி நீங்க பாட்டி ஆயிட்டங்களாம், இதை பெரியவா உங்ககிட்டே சொல்லச் சொன்னார்!” என்று சொல்லிவிட்டு திரும்பச் சென்றுவிட்டார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மற்ற பக்தர்கள், மடத்துத் தொண்டர்,அந்தப் பெண்மணியை கேலி செய்துவிட்டுப் போவதாக நினைத்துச் சிரித்தார்கள்.

வீட்டுக்குச் சென்றதும் அந்தப் பெண்மணிக்குத் தெரிய வந்த விஷயம், கொல்கத்தாவில் இருந்த அந்தப் பெண்மணியின் மகனுக்கு, அன்று மதியம் சுமார் ஒரு மணிக்கு குழந்தை பிறந்திருந்தது அதாவது அந்தப் பெண்மணிக்கு பேரன் பிறந்து இருந்தான்.

அதை தீர்த்தம் வழங்கிக் கொண்டிருந்த காருண்ய தெய்வம்,தமது தீர்க்க தரிசனத்தால் அறிந்துவிட்டிருந்ததால், அந்தப் பெண்மணிக்கு ‘விருத்தி’ என்னும் ஆசாரக் குறைவு,அதாவது குழந்தை பிறந்ததால் ஏற்படும் தீட்டு ஏற்பட்டு இருந்ததை அறிந்து தீர்த்தம் தராமல் தவிர்த்திருக்கிறார். அதைத்தான் அவர் பாட்டி ஆகிவிட்டதாகச் சொல்லுமாறும் கூறியிருக்கிறார்.

மகனுக்குக் குழந்தை பிறந்த விஷயம்,அந்தப் பெண்மணிக்கு அன்று இரவுதான் தந்தி மூலம் வந்து சேர்ந்தது. அதன் பிறகு இன்னொரு சமயம் அவர் மகாபெரியவாளை தரிசிக்க வந்தபோது இந்த சம்பவத்தைச் சொல்லிவிட்டு, சர்வவியாபியாக எல்லாம் அறிந்தவராகத் திகழ்ந்த மகாபெரியவாளை மனப்பூர்வமாக நமஸ்காரம் செய்து ஆசிபெற்றுச் சென்றார்

 

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...