இன்னிக்கு உபவாசம் (ஏகாதசி) நமக்கு மட்டும்தானா? வரதனுக்குமா?

“இன்னிக்கு உபவாசம்(ஏகாதசி ) ( நமக்கெல்லாம் மட்டும்தானா? …………………இல்லை வரதனுக்குமா?”

(தானும் பகவானும் ஒண்ணுதான்னு உணர்த்தற மாதிரி இருந்த இடத்துலேர்ந்தே கோயில்ல நித்யப்படி ஆராதனைல நைவேத்யம் தவறிட்டதை சுட்டிக்காட்டின ஆச்சரியம்!) (“பட்டாச்சாரியாரோட கண்ணுக்கு பெருமாளாவே காட்சி தந்த பரமாசார்யா”)

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம் பக்தி (ஒரு பகுதி)

1968-ம் வருஷம்னு ஞாபகம். ஸ்ரீமடத்துல மகாபெரியவர் இருந்த சமயத்துல காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில்ல பிரும்மோற்சவம் நடந்துது.

அந்த சமயத்துல ஒரு நாள் உற்சவர் பெருமாள் ,வேணுகோபால கிருஷ்ண அவதாரத்துல திருவீதி உலா வந்தார். பெருமாள் எழுந்தருளக்கூடிய காலகட்டத்துல, ஸ்ரீமடத்து வாசலுக்கு வர்ற சமயத்துல மடத்து ஆசார்யா வாசலுக்கு வந்து பெருமாளை சேவிக்கறது வழக்கம்.

அந்த வழக்கப்படி அன்னிக்கு வரதராஜபெருமாள் ஸ்ரீமடம் இருந்த திருவீதியில எழுந்தருளி சேவை சாதிக்க மடத்தோட வாசலுக்கு வந்த சமயத்துல மகாபெரியவா வெளியில வந்து பக்திப் பரவசத்தோட பெருமாளோட விக்ரஹத் திருமேனியைப் பார்த்துண்டு இருந்தார்.

அதேசமயத்துல பெருமாளுக்கு ஆராதனை பண்ணறதுக்காக அந்தக் கோயிலோட பிரதான பட்டாச்சாரியாரும் கூடவே வந்திருந்தார்.

மகாபெரியவா பெருமாளை தரிசனம் பண்ணிண்டு இருந்த சமயத்துல, அந்த பட்டாச்சாரியார்கிட்டே திடீர்னு ஒரு மாற்றம் தெரிஞ்சுது. வைச்ச கண்ணைத் திருப்பாம நிலை குத்தினமாதிரி மகாபெரியவாளையே பார்த்துண்டு இருந்தார் அவர்.

யாரோ ஸ்தம்பனம் பண்ணி அவரைக் கட்டிட்ட மாதிரி, ஆசார்யாளையே உத்துப் பார்த்துண்டு இருந்த பட்டாசார்யார் நெய்தீபத்தை ஏத்தி பகவானுக்கு ஆரத்தி காட்டறச்சே ஒரு நிமிஷம் மகா பெரியவாளுக்கு நேரா தீபத்தை நீட்டித் தடுமாறிட்டு – சுதாரிச்சுண்டு பெருமாளுக்குக் காட்டினார்.

பார்த்துண்டு இருந்தவா எல்லாரும் என்ன ஆச்சு பட்டாச்சாரியாருக்குன்னு யோசிக்கறச்சே, ‘ பரமாசார்யா பெருமாளை சேவிக்கறச்சே….சாட்சாத் அந்த வேணுகோபாலனே வாகனத்துலேர்ந்து இறங்கி தன்னைத் தானே சேவிக்கற மாதிரியான காட்சி கிடைச்சுது எனக்கு.பரமாசார்யாளும் வேணுகோபாலனும் ஒரே மாதிரியான அலங்காரத்தோட ஒரே மாதிரி தென்பட்டா என் கண்ணுக்கு!” பரவசத்துல நாக்கு தழுதழுக்க உடம்பு சிலிர்க்கச் சொன்னார் பட்டாச்சாரியார்.

உற்சவத்துல கலந்துண்டு இருந்தவா பலரும் பெரியவாளோட மகிமையை நினைச்சு பரமானந்தப்பட்டா. அதே சமயம் சிலருக்கு  மட்டும் பட்டாச்சாரியார் ஏதோ உணர்ச்சி வசப்பட்டு பேசறாரோ..! அப்படின்னு தோணித்து. அவாளுக்கு பதில் சொல்ற மாதிரி அடுத்த சில நாள்லயே இன்னொரு சம்பவம் நடந்தது.

அன்னிக்கு ஏகாதசிங்கறதால மகாபெரியவா பூரண உபவாசத்துல இருந்தார். வழக்கத்தைவிட நிறையபேர் அன்னிக்கு தரிசனத்துக்கு வந்திருந்தா. அப்போ திடீர்னு ஏதோ நினைச்சுண்டவர் மாதிரி தன் பக்கத்துல இருந்த மடத்து சிப்பந்தியை அழைச்ச பெரியவா, “நீ போய் பெருமாள் கோயில் பட்டாச்சாரியாரை அழைச்சுண்டு வா” அப்படின்னார்.

அந்த சிப்பந்தியும் வேகமாப்போய் பட்டாச்சாரியாரை கூட்டிண்டு வந்தார்.

பெரியவா முன்னால வந்து பவ்யமா நின்னார் பட்டாச்சாரியார். அவர்கிட்டே, “இன்னிக்கு என்ன திதி?”ன்னு கேட்டார் பரமாசார்யா.

அன்னிக்கு ஏகாதசி திதின்னுட்டு பூரண உபவாசம் இருக்கிற பெரியவா, இப்போ எதுக்கு இப்படி ஒரு கேள்வியை அவர்கிட்டே கேட்கறார்னு எல்லாருக்கும் ஆச்சரியம்.

“ஏகாதசி திதி” மெதுவான குரல்ல சொன்னார் பட்டாச்சாரியார்.

“இன்னிக்கு உபவாசம் நமக்கெல்லாம் மட்டும்தானா? இல்லை வரதனுக்குமா?” மகாபெரியவா இந்தக் கேள்வியைக் கேட்டதுதான் தாமதம், அப்படியே நடுங்கிப் போய்ட்டார் பட்டாச்சாரியார்.

“பெரியவா…அது..!” பேசமுடியாம சங்கடம் தொண்டையை அடைக்க திணறினார்.

“என்ன வார்த்தை வரலையா? நித்ய ஆராதனை ப்ரகாரம் இத்தனைநேரம் பெருமாளுக்கு திருவமுது படைச்சிருக்கணுமே இன்னிக்கு ஏன் இன்னும் அதைப் பண்ணலை?”

“பெருமாளே..!” வாய்விட்டு அலறவே செய்துட்டார் பட்டாச்சாரியார்.

பெருமாளுக்கு நித்ய ஆராதனை செய்ய இன்னிக்கு நான் போகலை…வேற ஒரு பட்டர்தான் போயிருக்கார். அதனால, என்ன நடந்ததுதுன்னு எனக்குத் தெரியலை. இதோ ஒடனே போய் விசாரிச்சுட்டு வரேன்….!” பெரியவா உத்தரவுக்குக் கூட, காத்துண்டு இருக்காம ஓட்டமும் நடையுமாகோயிலுக்குப் போனார் பட்டாச்சாரியார்.

கொஞ்சநேரம் கழிச்சு திரும்பி வந்து பெரியவா முன்னால பவ்யமா நின்னார் பட்டாச்சாரியார்.

“பெரியவா க்ஷமிக்கணும்.இன்னிக்கு கோயில் உள்கட்டுல கவனக்குறைவால ஏதோ தப்பு நடந்திருக்கு. அதனால பெருமாளுக்கு திருவமுது படைக்கறது தடைப்பட்டிருக்கு. இதோ நான் போய்ப்பார்த்து அதை சரி பண்ணி,ப்ராயச்சித்தம் பண்ணிட்டு, பெருமாளுக்கு திருவமுது படைச்சுட்டு வந்துட்டேன். பெரியவா இந்த பிரசாதத்தை ஏத்துக்கணும்.”

வரதராஜ பெருமாள் பிரசாதமா கொஞ்சம் துளசியை மகாபெரியவாகிட்டே சமர்ப்பிச்சார், பட்டாச்சாரியார்.

“பெருமாளோட திருவடியிலேர்ந்து எடுத்துண்டு வந்தியா?” அப்படினு கேட்டுண்டே அந்த துளசிப் பிரசாதத்தை எடுத்து தன்னோட சிரசுல வைச்சுண்டார் மகாபெரியவா.

இப்பவும் பட்டாச்சாரியாரோட கண்ணுக்கு பெருமாளாவே காட்சி தந்தார் மகாபெரியவா. அந்த திருக்காட்சியைப் பார்த்த அவர் அப்படியே உடம்பு நடுங்க..கண்ணுலேர்ந்து ஜலம் பெருக பெருமாளே …பெருமாளே..! சொல்லிண்டே பெரியவா திருவடியில சாஷ்டாங்கமா விழுந்து சேவிச்சுட்டுப் புறப்பட்டார் பட்டாச்சாரியார்.

எல்லாத்தையும் பார்த்துண்டு இருந்தவாளுக்கு என்ன தோணித்து தெரியுமா? தினமும் பெருமாளைத் தொட்டு ஆராதனை செய்யற பட்டாச்சாரியாருக்கு அந்தப் பெருமாளே பிரியப்பட்டு நேரடி தரிசனம் குடுத்த மாதிரி,பரமாசார்யா சாட்சாத் பெருமாளாகவே அவருக்குக் காட்சி குடுத்தது அதிசயம்! தானும் பகவானும் ஒண்ணுதான்னு உணர்த்தற மாதிரி இருந்த இடத்துலேர்ந்தே கோயில்ல நித்யப்படி ஆராதனைல நைவேத்யம் தவறிட்டதை சுட்டிக்காட்டினது ஆச்சரியம்!

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...