Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் விநாயகர் சதுர்த்தி: இலக்கியத்தில் விநாயகர்!

விநாயகர் சதுர்த்தி: இலக்கியத்தில் விநாயகர்!

vinayakar

இலக்கியத்தில் விநாயகர் எவ்வாறு போற்றப்படுகிறார் என்பதனை காணலாம்.

அருணகிரிநாதர் விநாயகரை நினைக்கிற மாத்திரத்திலே சந்தமாக பொழிகிறார்.

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி……

பாடல் பாய்ச்சலிட்டு ஓடி வருகிறது விநாயகரின் உருவம் எளிதில் இருப்பது குழந்தைகளையும் கவர்வது புருவ மத்தியில் மகா கணபதியைத் நிறுத்த நினைப்பவர்கள் முதலில் யானை வடிவத்தைக் கொண்டு வந்து பயிற்சி பெறலாம் என ரிஷிகேச ஞானி கூறியுள்ளார்.

தனது உருவத்தை பூஜித்து வழங்குபவரின் எல்லா துயரங்களையும் நீக்குபவன் விநாயகன் என்று திருஞான சம்பந்தர் பாடுகிறார்.

வடிகொடு தனது அடி வழிபடும் அவர் இடர் கடி கணபதி வர அருளினன்

என்பது அவரது திருவாக்கு. தமிழ் இலக்கியத்தில் இதுதான் விநாயகரை பற்றி முதல் பாடலாக இருக்க வேண்டும். ஏனெனில் மூன்றாம் திருமுறை தான் முதன்முதலில் விநாயகரைப் பற்றிய தகவல் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நந்திக்கலம்பகம் ஒரு அருமையான சம்பவத்தை குறிப்பிடுகிறது. ஒரு முறை கைலாயத்தில் இறைவன் இறைவி இருவரும் ஒரே சமயத்தில் ஞானக் கொழுந்தான விநாயகரை கொஞ்ச வேண்டும் என்று நினைக்கிறார்களாம். இருவரும் வினாயகரை முத்தமிட இருபுறமும் நெருங்குகையில் தலையை பின்னே எடுத்துக்கொள்கிறார் விநாயகர். இதனால் அப்பாவும் அம்மாவும் இணைந்து விட நேரிடுகிறது.

“மும்மை புவனம் முழுதீன்ற முதல்வியோடும் விடைப்பாகன் அம்மை தருக முத்தம் என அழைப்ப, ஆங்கே சிறிதகன்று தம்மின் முத்தம் கொள நோக்கிச் சற்றே நகைக்கும் வேழமுகன்” நந்திக்கலம்பகத்தில் காப்பு செயலாக இருக்கிறது.

என்னைச் சுற்றி அடர்ந்து படர்ந்திருக்கும் பாசம் என்ற கொடிகளை அறுத்தாக வேண்டும். வினையாகிய கடலைக் கலக்கியாக வேண்டும். அதற்கு ஒரு குட்டியானை தேவை அந்த யானையை என் அன்பு எனும் சங்கிலிக்கு கட்டுப்பட வேண்டும் இப்படி ஆசைப்படுகிறார் ஒரு கவி. மலைக்கு பிறந்த ஒரு பெண் யானை அருளிய அந்த சிறிய யானை மட்டும் என் உள்ளத்துக்குள் வந்துவிட்டால் போதும் என்கிறார் அவர். இப்போது பாடலைப் பார்க்கலாம். “பாசத்தளை அறுத்து பாவக்கடல் கலக்கி நேசத்தளை பட்டு நிற்குமே மாசற்ற காரார் வரை என்ற கன்னிப்பிடி அளித்த ஓரானை வந்தென் உள்ளத்து.

மதுரை மீனாட்சியம்மை சிறுமியாக வந்து முத்துமணி அணிவித்த பெருமையைப் பெற்ற குமரகுருபரர் பாடல் இது.

பெரிய புராணம் அருளிய சேக்கிழார் பெருமானும் தடக்கை ஐந்துடைய கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம். என்று யானையை முன்னிறுத்தி பாடியுள்ளார்.

ஆபத்சகாயன் என்றே தணிகைப்புராணம் விநாயகரை வர்ணிக்கிறது.

‘அண்ணலைத் தணிக்கை வரை வளர் ஆபத்சகாயனை அகந்தழீ களிப்பாம்’. என்பது அப்பாடல் வரி மேலோட்டமாக இன்றி அகம் தழுவுமாறு பக்தி கொள்ள வேண்டும் என்பதை இக்கருத்து உறுதிப்படுத்துகிறது. வள்ளியை மணக்க முருகனுக்கு ஆபத்சகாயனாக வந்து அருளியவன் விநாயகன் தானே.

யானை என்றால் மதநீர் ஒழுகும் மதம் பிடித்தால் அடக்குவது கடினம் சங்கிலியை அறுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டால் என்ன நடக்கும் எனச் சொல்ல முடியாது. ஆனால் பரஞ்சோதி முனிவர் ஒரு அதிசய யானையை படம் பிடிக்கிறார். இந்த யானை தமது உள்ளமாகிய கூடத்தில் அன்புச் சங்கிலியால் கட்டி வைக்க வேண்டும். நமது வினைகளையே கவளமாக அர்ப்பணிக்க வேண்டும். இந்த யானைக்கு மதநீர் சுரக்கும் ஆனால் அதற்குப் பெயர் கருணை என்கிறார்.

‘உள்ளமெனும் கூடத்துள் ஊக்கமெனும் தறிநிறுவி உறுதியாகத் தள்ளரிய அன்பெனும் தொடர்பூட்டி தறுகட் பாசக் கள்ள வினைப் பசுபோதக் கவளம் இட களித்துண்டு கருணை என்னும் வெள்ள மதம் பொழி சித்தி வேழத்தை நினைத்து வருவினைகள் தீர்ப்பாம்”

சித்திவேழம் என அருமையாக சித்தரிக்கப்படும் இந்த யானையை என அருமையாக திருவிளையாடற் புராணத்தில் தரிசிக்கலாம்

“விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்” என்று கபிலதேவர் கட்டியம் கூற நந்தி மகன் ஞானக்கொழுந்து என திருமூலர் பாராட்ட ‘அரசு மகிழ் அத்தி முகத்தான்’ என நம்பியாண்டார் நம்பி அறிமுகப்படுத்துகிறார்.

பாரதம் பாடிய பெருந்தேவனார் விநாயகரை காட்டுகிற அழகு வித்தியாசமானது. ஒரு போர் நடக்கும் காட்சியை களத்தில் நின்று வர்ணித்தால் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வர்ணிக்க முடியும். உயரத்திலிருந்து பார்த்தால் ஒட்டு மொத்த காட்சியையும் பார்க்க முடியும். உயரமான பனி மலையில் உட்கார்ந்துகொண்டு பாரதப்போர் காட்சியினை விநாயகர் படமாக்குகிறார்.

“சீதம் பனிக்கோட்டு மால்வரை மேல் பாரதப்போர் தீட்டும் தனிக்கோட்டு வாரணத்தின் தாள்.”

ஔவை பிராட்டி விநாயகரின் பரிபூரண அருளைப் பெற்றவர். “பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்’ என்று எளிமையாகவும் அவரால் பாட முடியும்

“மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி” என்று முழுவதும் தத்துவமாகவும் அவரால் பாட முடியும். உலக வாழ்வு காலம் நிறைவு பேறு முதலில் புறப்பட்டுப் போன சேரமான் ஆச்சரியப்படும்படி சொர்க்க வாசலில் காத்திருந்தாள் ஔவை. தனது துதிக்கையால் மேலேற்றி விட்டான் விநாயகன்.

பாரதியார் விநாயகர் நான்மணி மாலையில்

இறைவி இறைவன் இரண்டும் ஒன்றாகி தாயாய் தந்தையாய் சக்தியும் சிவனும் உள்ளொளி யாகி உலகெலாம் திகழும் பரம் பொருளையோ பரம்பொருளையோ நோவு வேண்டேன் நூற்றாண்டு வேண்டேன் உடைமை வேண்டேன் உன் துணை வேண்டினேன் என்று உருகுகிறார் இலக்கியம் மக்களை செம்மைப் படுத்துவது உள்ளத்தில் உற்சாகத்தை உண்டாக்குவது நம்மோடு ஒன்றிவிடுவது விநாயகரும் அப்படித்தான் எனவே அவரே ஒரு இலக்கியம். விநாயகரை வணங்கி வினைகளை வேரறுப்போம்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version