
தென்னிந்தியாவில் வேதபாராயண முறைப்படி கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஆயுத பூஜை, இந்த ஆன்மீக விழா முக்கியமாக கர்நாடகாவில் தசரதா பண்டிகை, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளாவில் ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை மஹாநவமி என கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பண்டிகைகளையும் மக்கள் பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தென்னிந்தியாவில் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தான் ஆயுத பூஜை, இது முக்கியமாக கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளாவில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் திருவிழா தசராவின் ஒரு பகுதியாகக் கொண்டாடப்படுகிறது, இந்த ஆண்டு மகா நவமி அக்டோபர் 4-ம் தேதி வருகிறது, அதைத் தொடர்ந்து தசரா அக்டோபர் 5-ம் தேதி புதன்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் நம் தொழிலுக்கு பயன்படுத்தும் உபகரணங்கள், வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள் போன்ற அத்தியாவசியமான பொருட்களை வைத்து வணங்குவார்கள், இது சாஸ்திர பூஜை அல்லது அஸ்திர பூஜை என்றும் அழைக்கப்படுகிறது.
இதுவரை நமக்கு உதவிய உயிரற்ற பொருட்களை போற்றும் விதமாகவும் அதற்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் கொண்டாடப்படுவது தான் ஆயுதபூஜை. பொதுவாக இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகள் பெரும்பாலும் நமக்கு நாள்தோறும் உதவும் உயிருள்ள அல்லது உயிரற்றவற்றை போற்ற வேண்டும் என்பதற்காகவே கொண்டாடப்படுகிறது. நமக்கு போக்குவரத்து பயன்படும் வாகனங்களையும் இந்த தினத்தில் மக்கள் வழிபடுகின்றனர், வாகனங்களை கழுவி அதற்கு பூக்கள், சந்தனம், குங்குமம், மாலை போன்றவற்றை போட்டு அலங்கரிக்கின்றனர். அதேபோல வீடுகளை சுத்தம் செய்து மாவிலை தோரணங்கள் கட்டி, வீட்டின் கதவுகளுக்கு சந்தனம், குங்குமம் போன்றவற்றை வைத்து வீட்டை அலங்கரிக்கின்றனர்.
சிலர் திருஷ்டி கழிக்கும் விதமாக வெள்ளைப் பூசணிக்காயை மஞ்சளால் அலங்கரித்து வாகனத்தின் முன் உடைத்து அனைத்து விதமான தோஷங்களையும் நீக்குகின்றனர். சிறிய ஊசி தொடங்கி கத்தி, அரிவாள், சமயலறை கருவிகள், கத்தரிக்கோல், ஸ்பேனர்கள், கணினி, வேறு இயந்திரங்கள், புத்தகங்கள் போன்ற அனைத்து வகையான கருவிகளையும் வைத்து வழிபடுகின்றனர். இந்த பண்டிகையை வடகிழக்கு மாநிலங்களில் மகா நவமி என்றும், ஒடிசாவில், அஸ்திர பூஜை என்றும் கொண்டாடுகின்றனர்.
