கார்த்திகை மாதம் விழாக்கள் விஷேசங்கள் நிறைந்து ஆன்மீக அலைகள் நிரம்பி வழியும் மாதமாகும்.
கார்த்திகை மாதத்தில் வீட்டு வாசலில் தினந்தோறும் தீபம் ஏற்றி வழிபடலாம். திருக்கார்த்திகை தீபம், முடவன் முழுக்கு உள்ளிட்ட பல முக்கிய விரத தினங்கள் உள்ளன. முக்கிய முகூர்த்த தினங்களும் உள்ளன. சபரிமலை ஐயப்பனுக்கும், திருச்செந்தூர் முருகப்பெருமானுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பார்கள்.
கார்த்திகை முடவன் முழுக்கு..
கார்த்திகை மாதம் 1ஆம் தேதி முடவன் முழுக்கு நவம்பர் 17,2022 காவிரியில் நீராட சகல தோஷங்களும் நிவர்த்தியாகும். புராணகாலத்தில் ஒரு மாற்றுத்திறனாளி ஒருவர் எப்படியாவது ஐப்பசி மாதத்தில் துலா காவேரி ஸ்நானம் செய்யவேண்டும் என்று நீண்ட தூரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு நடந்து வந்துக்கொண்டிருந்தார்.
கால் ஊனத்துடன் நடந்து வந்ததால் அவர் மெதுவாக நடந்து மாயவரம் எனும் மயிலாடுதுறையை அடைவதற்குள் ஐப்பசி மாதத்தின் கடைசி நாளான கடைமுகமும் வந்துவிட்டது. அன்று இரவுதான் அவரால் மயிலாடுதுறையை அடைய முடிந்தது. ஐப்பசி மாதம் முழுவதும் காவிரி நதியில் நீராட முடியாதவர்கள் கார்த்திகை மாதம் முதல்நாளில் புனித நதியில் நீராடலாம். ஐப்பசி மாதம் நீராடிய முழு பலனும் கிடைக்கும் எனவேதான் முடவன் முழுக்கு விழா கொண்டாடப்படுகிறது.
ரமா ஏகாதசி
கார்த்திகை 4ஆம் தேதி நவம்பர் 20ஆம் தேதி ரமா ஏகாதசி கடைபிடிக்கப்படுகிறது. பகவான் விஷ்ணுவுக்கு உகந்த திதி ஏகாதசி. ஏகாதசி அன்று விரதமிருந்து, அவரை வழிபடும் பக்தர்களின் துயரைப் போக்குபவர். ரமா ஏகாதசி விரதம் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் இருந்தால் அரசனைப் போல வாழ்வை இறைவன் நமக்கு அளிப்பார் என்கிறது ஏகாதசி மகாத்மியம். ஏகாதசி திதி அன்று, விரதம் இருந்து பெருமாளை வழிபட்டு, துவாதசி அன்று பாரணை செய்து விரதம் முடிப்பது மிகவும் விசேஷமாகும்.
லட்சுமி பிரபோதன தினம்
கார்த்திகை 06, நவம்பர் 22, லட்சுமி பிரபோதன தினம் சர்வ அமாவாசை. திருவிசை நல்லூர் ஐயாவாள் கங்கா ஆகர்ஷண மகோத்ஸவம். கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது திருவிச நல்லூர். இந்த ஊரும் ஊரைச் சொன்னதும் நினைவுக்கு வரும் ஸ்ரீதர ஐயாவாளையும் பக்தர்கள் கொண்டாடுவார்கள். வருடந்தோறும் கார்த்திகை மாதத்தில், அமாவாசை தினத்தில் திருவிசநல்லூர் தலத்தில் உள்ள ஸ்ரீதர ஐயாவாள் வாழ்ந்த வீட்டில், கங்காதேவியானவள் கிணற்றில் ஐக்கியமாகிறாள் என்பது நம்பிக்கை.
வாஸ்து நாள்
கார்த்திகை 08,நவம்பர் 24,வியாழக்கிழமை லட்சுமி விரதம். வாஸ்து நாள். வீடு கட்ட நினைப்பவர்கள் வாஸ்து பூஜை செய்ய ஏற்ற நாள். கார்த்திகை 12, நவம்பர் 28, திங்கட்கிழமை நாகபூஜா பஞ்சமி சிரவண விரதம்.
சுப்ரமணிய சஷ்டி விரதம்.
கார்த்திகை 13, நவம்பர் 29,செவ்வாய்க்கிழமை சஷ்டி சம்பக சஷ்டி சுப்ரமணிய சஷ்டி விரதம். முருகனைத் தியானித்து வழிபடப் பல விரதங்கள் இருக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமான விரதம் குமார சஷ்டி விரதம். ஆனி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும், கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும் குமார சஷ்டி விரதம் ஆகும். வரும் வியாழக்கிழமை குமார சஷ்டி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. சுப்ரமணியரை விரதம் இருந்து வழிபட நாக தோஷம் நீங்கி சுந்தரமாக பிள்ளை பிறக்கும். அன்றைய தினம் சூரிய விரதமான பால சப்தமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
கைசிக ஏகாதசி
கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி கைசிக ஏகாதசியாக கடைபிடிக்கப்படுகிறது. உல்கா துவாதசி, மத்ஸ்ய துவாதசி விரதமும் கடைபிடிக்கப்படுகிறது. கார்த்திகை 19ஆம் தேதி டிசம்பர் 5ஆம் தேதியன்று சோமப்பிரதோஷம் விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
கார்த்திகை தீப திருவிழா
கார்த்திகை 20 ஆம் தேதி டிசம்பர் 06, 2022 காலையில் பரணி தீபம், மாலையில் திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபம். இந்த நாளில் தீபம் ஏற்றி வழிபட வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.இப்படி பல விழாக்கள் விஷேசங்கள் நிறைந்த மாதமாக கார்த்திகை மாதம் உள்ளது.