
உறவுகளை வலுப்படுத்தும் பெரிய கும்பிடு திருவிழா உடுமலை அருகே புதுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீபூமிநீளா சமேத ஒவுல்ராயப் பெருமாள் திருக்கோவிலில் வெகு விமரிசையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீபூமிநீளா சமேத ஒவுல்ராயப் பெருமாள் திருக்கோவில். பிரசித்தி பெற்ற இக்கோவிலில் குறிப்பிட்ட வருட இடைவெளிக்கு ஒருமுறை சுள்ளார் குலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடும் பெரிய கும்பிடு திருவிழா விமர்சையாக நடைபெறும்.
வழக்கம் போல் இந்த வருடமும் பெரியகும்பிடு திருவிழா புதுப்பாளையம் பகுதியில் களைகட்டியது. தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஸ்ரீ பூமிநீளா சமேத ஒவுல்ராயப் பெருமாள் கோவில் பகுதியில் ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான சுள்ளார்குல மக்கள் பாரம்பரிய வழக்கப்படி உறவுகளை வலுப்படுத்தும் வகையில் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று தேர்ந்தெடுக்கபட்ட மைதானத்தில் ஒன்று கூடினர்.
பின்னர் பூமியில் முகம்பதித்து படுக்க மூத்த பூசாரிகள் சிறப்பு பூஜை செய்யபட்ட புனித நீரை தெளித்தும் பிரம்பால் மேலே தொட்டு ஆசிர்வாதம் வழங்கியும் வழிபாடு செய்தனர். மைதானத்திலிருந்து கைகளை பிரியாமல் கோவிலை வந்தடைந்தவர்களுக்கு பாலில் கைகளை நனைத்து பூசாரிகள் பிரித்துவிட்டனர். தொடர்ந்து தொன்று தொட்டு நடத்தபடும் பாரம்பரிய வழிபாடுகள் நடத்தப்பட்டது.
இது பற்றி சுள்ளார் குல மக்கள் கூறுகையில், உறவுகளுக்குள் புரிதல்கள் இல்லாமல் பல்வேறு மன கசப்புகள் அதிகமாகும் இக்காலத்தில் உறவுகளுக்குள் பிணைப்பை ஏற்படுத்தி வலுப்படுத்த இத்திருவிழா நடத்தபடுகிறது.பெரிய கும்பிடு விழாவிற்கு அழைக்கசெல்லும் போது என்ன சண்டை சச்சரவுகள் இருந்தாலும் மனதில் வைக்காது கட்டாயம் உறவுகளுக்கு அழைப்பு விடுப்பதும், அவர்களும் மறுக்காமல் சீர் வரிசைகளோடு விழாவிற்கு வந்து விடுவதால் ஒற்றுமை ஏற்படுகிறது. மேலும் சில குடும்பத்தினருடன் தொடங்கிய குலம் இன்று பல ஆயிரம் பேர்களுடன் பரவியிருப்பதால் அனைவரையும் அறிந்து கொள்ள இந்த பெரியகும்பிடு திருவிழா உதவுகிறது என்றனர்.
உறவுகளை ஒன்றிணைக்கவும், புதிய உறவுகளை அறிந்து கொள்ளவும் ஏற்படுத்தபட்ட பெரிய கும்பிடு விழா திருப்பூர் மாவட்ட மக்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.