
ஆசியாவின் மிகப் பெரும் ஹெலிகாப்டர் தயாரிப்பு ஆலையை கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் அங்கமாக இந்தத் தொழிற்சாலை செயல்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராணுவ துறையில் தற்சார்பை எட்டும் நோக்கில், 2016-ம் ஆண்டு துமகூருவில் பசுமை ஹெலிகாப்டர் தயாரிப்பு ஆலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.இந்நிலையில், கட்டமைப்புப்பணிகள் முடிந்து, 7 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த தொழிற்சாலை செயல்பாட்டுக்கு வருகிறது.
இந்தியாவுக்குத் தேவையான ஹெலிகாப்டர்கள் இந்த ஆலை யிலே தயாரிக்கப்படும்.இந்தத் தொழிற்சாலை, தொடக்கத்தில், இந்தியாவிலே வடிவமைக்கப்படும் இலகுரக பயன்பாட்டுக்கான ஹெலிகாப்டர்கள் மற்றும் பல்நோக்கு ஒற்றை இன்ஜின் ஹெலிகாப்டர் கள் ஆகியவற்றை தயாரிக்கும்.
ஆரம்ப கட்டத்தில், இந்த ஆலையில் ஆண்டுக்கு 30 ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படும். பிற்பாடு, அது 60, 90 என்று அதிகரிக்கப்படும்.அதேபோல், எதிர்காலத்தில் இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் மற்றும் வான்வழித் தாக்குதல், முக்கிய பிரமுகர்களை அழைத்துச் செல்லும் வசதிகொண்ட இந்திய மல்டி ரோல் ஹெலிகாப்டர்களும் தயாரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.அடுத்த 20 ஆண்டுகளில், ரூ.4 லட்சம் கோடி மதிப்பீட்டில், 3 டன் முதல் 15 டன் வரையில் வெவ்வேறு ரகங்களில் 1000 ஹெலிகாப்டர்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பிப்.6 – பிப்.8 வரையில் கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, மேலும் சில தொழிற்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். துமகூரு தொழில் நகரத் திட்டம் மற்றும் 2 தூய்மை குடிநீர் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்ட இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரி வித்துள்ளது.