
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரில் கோயில் திருவிழாவை முன்னிட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம்,
காரியாபட்டி அருகே ஆவியூரில் அழகிய பெருமாள் சாமி மற்றும் பெரிய கருப்பண்ணசாமி கோவில் மாசித் களரி திருவிழாவை முன்னிட்டு நல பெருமாள் வகையறா சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.
கொரோனா தொற்று காரணங்களால் 2 ஆண்டுகளாக ஆவியூரில் நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் ஊர் மக்களின் முயற்சியால் சிறப்பாக நடைபெற்றது.
காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க வந்த காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவபரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் களத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
முதலில் கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து மற்ற காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கினர். பல காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் சென்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 690 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் வெள்ளி நாணயம், சைக்கிள், குக்கர், மிக்சி, மின் விசிறி, கட்டில், அயன்பாக்ஸ், சில்வர்பாத்திரம், பணம், வேட்டி, அண்டா போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் அருப்புக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் கரூண் காரட் உத்தராவ் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.