காங்கிரஸ் எனக்கு கல்லறை தோண்டுக்கொண்டிருக்கிறது என்று பிரதமர் மோடி கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற விழாவில் விமர்சனம் செய்து பேசியுள்ளார்.
இன்று கர்நாடகா சென்றுள்ள பிரதமர் மோடி பெங்களூரு-மைசூரு இடையே அதிவிரைவு சாலையை . கர்நாடக மாநிலம் பெங்களூரு-நிதாகட்டா-மைசூரு தேசிய நெடுஞ்சாலை என்.எச். 275-ன் ஒரு பகுதி ஆறு வழிச்சாலையாக 116 கி.மீட்டர் தூரத்துக்கு ரூ.8 ஆயிரத்து 480 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சாலை பெங்களூரு-மைசூரு இடையேயான பயண நேரத்தை 3 மணி நேரத்தில் இருந்து 75 நிமிடமாக குறைக்கிறது. இந்நிலையில் கர்நாடகாவில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி இன்று மதியம் மாண்டியா வந்தார். அவருக்கு வழி நெடுக சுமார் 2 கி.மீட்டர் தூரத்துக்கு பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது மகிழ்ச்சி அடைந்த பிரதமர் மோடி காரின் கதவை திறந்து நின்றபடி தொண்டர்களை பார்த்து கை அசைத்தார்.
மேலும் காரில் விழுந்த பூக்களை மீண்டும் பா.ஜனதாவினர் மீது வீசி பிரதமர் மோடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து மாண்டியாவில் நடந்த நிகழ்ச்சியில் பெங்களூரு-மைசூரு சாலை திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த சாலையில் பெங்களூருவில் இருந்து குடகு, ஊட்டி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கும் விரைவாக செல்ல முடியும். இந்த சாலை 11 மேம்பாலங்கள், 64 சுரங்கவழி பாதைகள், 5 புறவழிச்சாலைகள், 42 சிறிய பாலங்கள் ஆகிய வற்றை இணைக்கிறது. இதைத்தொடர்ந்து மைசூரு-குசால்நகர் இடையே 92 கி.மீட்டர் நீளத்தில் மேற்கொள்ளப்படும் 4 வழிச்சாலை திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த திட்டம் ரூ.4,130 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உங்களின் அன்பிற்கு இரட்டை எஞ்சின் அரசு மாநில வளர்ச்சியை திருப்பி அளிக்கிறது. கடந்த சில நாட்களாக மக்கள் எக்ஸ்பிரஸ் சாலை குறித்து பேசுகின்றனர். எக்ஸ்பிரஸ் சாலையின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த திட்டத்தால் நாட்டு இளைஞர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மோடிக்கு கல்லறை தோண்டுவேண்டுமென காங்கிரஸ் கனவு காண்கிறது. மோடிக்கும், பாஜகவுக்கும் கல்லறை தோண்டுவதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. ஆனால், பெங்களூரு-மைசூரூ நெடுஞ்சாலை அமைப்பதில் மோடி தீவிரமாக இருந்தேன். மோடி எளிய மக்களின் வாழ்க்கையை உயர்த்திக்கொண்டிருக்கிறேன். மக்களின் நம்பிக்கையே எனது கேடையம். கர்நாடகாவை வளர்ச்சியடையவைப்பதில் நான் தீவிரமாக உள்ளேன். எளிய மக்களுக்கான பணத்தை காங்கிரஸ் கொள்ளையடித்துக்கொண்டிருந்தது’ என்றார்.
பெங்களூருடனான குஷால் நகரில் இணைக்கும் இத்திட்டத்தால் பயண நேரம் 5 மணியில் இருந்து 2.30 மணி நேரமாக குறைக்கும்.
இந்த விழாவை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி விமானம் மூலம் தார்வாடாவுக்கு சென்றார். அங்கு நடைபெறும் விழாவில் தார்வாடா ஐ.ஐ.டி. நிறுவன கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் ஹூப்பளி ஸ்ரீ சித்தரூத சுவாமிஜி ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் நீளமான ரெயில்வே நடைமேடையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது 1,507 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்ட நடைமேடை ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டது.
இதையடுத்து ஹொசப் பேட்டை-ஹூப்ளிதினை கட் ரெயில்வே வழித்தடத்தில் மின் மயமாக்கப்பட்ட தடத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பதுடன் மேம்படுத்தப்பட்ட ஹொசப்பேட்டை ரெயில் நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இது அப்பகுதியில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும். ரூ.530 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மின் மயமாக்கல் பணி தடையற்ற விரைந்த ரெயில் போக்குவரத்தை ஏற்படுத்தும்.
இதே போல் ஹூப்பளி-தார்வாடாவில் ரூ.520 கோடியில் மேற்கொள்ளப்பட்டு உள்ள பல்வேறு நகரத் திட்டப் பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்து ஜெயதேவ மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
ரூ.250 கோடி மதிப்பில் இது கட்டப்பட உள்ளது. அப்பகுதியின் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.1,040 கோடியில் செயல்படுத்தப் பட உள்ள கிராமங்களுக்கான குடிநீர் விநியோகத் திட்டம். ரூ.150 கோடியில் துப்பரி ஹல்லா வெள்ளச் சேதக் கட்டுப்பாட்டு திட்டத்திற்கும் மோடி அடிக்கல் நாட்டினார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் ஆட்சியை தக்க வைக்க பா.ஜனதா தீவிர முயற்சியில் இறங்கி உள்ளது. ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி பலமாக உள்ள மாண்டியா மாவட்டத்தில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ கட்சி தொண்டர்கள் இடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 மாதத்தில் தென் மாநிலத்தில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம் செய்வது இது 6-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.