October 28, 2021, 4:02 am
More

  ARTICLE - SECTIONS

  கஸ்தூரி திலகம் லலாட பலகே… லீலாசுகரின் ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம்!

  அளிக்கும் சுலபமான மார்க்கமென்று அனைத்து மக்களுக்கும் உரத்த குரலில் கூறியவர் 15 ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீ சைதன்ய மகாபிரபு

  krishnakarnamrutham
  krishnakarnamrutham

  வில்வமங்கள லீலா சுகர் – ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்:-

  கலியுக மக்களின் பக்திக்கும் முக்திக்கும் மட்டுமின்றி, சகல ச்ரேயஸ் மற்றும் சாதனைகளுக்கும் நிரந்தர ஹரி நாம சங்கீர்த்தனமே க்ஷேமத்தை அளிக்கும் சுலபமான மார்க்கமென்று அனைத்து மக்களுக்கும் உரத்த குரலில் கூறியவர் 15 ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீ சைதன்ய மகாபிரபு. அவருடைய அயராத பிரசாரத்தின் மூலம் “ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்” என்ற காவியம் புகழ் பெற்ற பக்திப் பாடல் (கான) நூலாக பிரசித்தியடைந்துள்ளது.

  ‘ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம்’ எழுதிய கவிராஜ் கோஸ்வாமி இவ்வாறு எழுதுகிறார்:- “சைதன்ய மகாபிரபுவின் யாத்திரையில் ஒரு முறை கிருஷ்ணா நதி தீரத்தில் சில பக்தர்கள் பாடிய ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருத சுலோகங்களைக் கேட்டவுடன் அவர் தன்னை மறந்த ஆனந்தத்தில் மூழ்கினார். உடனே அங்கிருந்த பண்டிதர்களைக் கொண்டு அச் சுலோகங்களை எழுத வைத்து, விருப்பமுடன் அக்கையெழுத்துப் பிரதிகளை தம் மடத்திற்கு எடுத்து வந்தார். அப்பாடல்களை தம் பக்தர்களைக் கொண்டு பாடச் செய்து மகிழ்ந்தார்.

  அவற்றை பக்தர்கள் தம் நித்திய பூஜை அனுஷ்டானத்தின் போது பாட வேண்டும் என்ற சம்பிரதாயத்தை ஏற்படுத்தினார். ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதத்திற்கு சமமான நூல் மூவுலகிலும் இல்லை. இதைப் படிப்பதன் மூலம் கோபால கிருஷ்ண பகவானிடம் சிரத்தையுடன் கூடிய அன்பு, பக்தி, ஞானம் கிடைக்கப் பெறும். இந்நூலைப் படிப்பவர்கள் ஸ்ரீ கிருஷ்ண லீலைகளின் எல்லைகளைக் கண்டுணர முடியும்.”

  சினிமாக்கள் வரத்தொடங்கிய ஆரம்ப கால கட்டத்தில், 20 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் நாடக வடிவில் வந்த “சிந்தாமணி நாடகம்” மூலம் “வில்வ மங்களன்- லீலா சுகர்” என்ற அதன் கதாநாயகன் அனைவருக்கும் அறிமுகமானவரே!

  அந்த நாடகக் கதை வருமாறு:- புகழ் பெற்ற அந்தண குடும்பத்தில் பிறந்த வில்வ மங்களன், அனைத்து சாஸ்திரங்களையும் கற்று கரை தேர்ந்தான். சிவ பஞ்சாக்ஷரி மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தான். ஆனால் இந்திரியங்களை வசப் படுத்தாமல், மன்மதனால் வெற்றி கொள்ளப் பட்டு, ‘சிந்தாமணி” என்னும் வணிக மங்கையின் மேல் மோகம் கொண்டான்.

  அவ்வாறிருக்கையில் பதிவ்ரதையான தன் மனைவியையும், மரணப் படுக்கையில் இருந்த தன் தந்தையையும் கூடப் பொருட்படுத்தாமல், பெரு மழையையும், புயல் காற்றையும் கூட லட்சியம் செய்யாமல் சிந்தாமணியின் வீடு நோக்கி நடந்தான். பொங்கிப் பெருகி ஓடும் நதியின் மேல் மிதந்து வந்த ஒரு சவத்தை ஓடமென்றெண்ணி மேலேறி, காரிருளில் மாடியிலிருந்து தொங்கிய ஒரு சர்ப்பத்தை கயிறென்றெண்ணி பிடித்து மேலேறி தன் பிரிய நாயகியான சிந்தாமணியிடம் சென்றான்.

  ஆனால், சிந்தாமணி அவனெதிரில் அருவெறுக்கத்தக்க வேஷத்துடன் தோன்றி, துச்சமான உடலாசையில் அவனுக்கு தீவிர விரக்தியை மூளச் செய்தாள். அத்துடன், ” இந்த உன் தீவிர பிரேமையை அழியக் கூடிய மனித உடலின் மேல் காட்டாமல், நித்திய சுந்தர ரூபமுடையவனான ஜகத்பதி, ஜகன் மோகனன், ஸ்ரீ கிருஷ்ண பகவானின் மேல் குவியச் செய்து பிரம்மானந்தத்தை அடைந்து, கிடைத்துள்ள இந்த அபூர்வமான மானுடப் பிறவியை பயனுள்ளதாக்கிக் கொள்” என்று ஞான போதனையும் செய்தாள்.

  அச்சொற்களால் மனமாற்றமடைந்த வில்வ மங்களன், ‘சோமகிரி’ என்ற குருவிடம் சென்று சேர்ந்து ‘கோபால மந்திரம்’ உபதேசம் பெற்று, சிரத்தையுடன் ஜபித்து வருகையில் ஞான வைராக்கியம் கைவரப் பெற்று, ஸ்ரீ கிருஷ்ண பகவானின் சாக்ஷாத்காரதைப் பெற்று, ஸ்ரீ கிருஷ்ண கர்ணாமிருதம் என்ற புனித நூலை எழுதியதால், இவர் லீலா சுகர் என்று அழைக்கப் பெற்றார்.

  லீலா சுகர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்று சிலரும், கேரளாவைச் சேர்ந்தவர் என்று சிலரும் உரிமை கொண்டாடுவது காணப் படுகிறது. இவர் 13 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று கூறப் படுகிறது.

  ஜெய தேவரின் கீத கோவிந்தம், நாராயண தீர்த்தரின் கிருஷ்ண லீலா தரங்கிணி போன்றவற்றிக்குச் சமமாக நாட்டிய மேடைகளில் ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருத ஸ்லோகங்கள் அழகான ராகமாலிகைகளாக கலைஞர்களால் பாடப் பட்டு வருகின்றன. குச்சுப்புடி, பரத நாட்டிய மேடைகளில், நாட்டிய அபிநயங்களுக்குத் தோதான நல்ல ‘சொகுசை’ இப்பாடல்கள் அளிப்பதுடன், மிருதங்கம் போன்ற வாத்தியங்களுக்கு தேவையான தாளக்கட்டிலும் சோபிக்கும் விதமாக அமைந்துள்ளன.

  krishnakarnamrutha
  krishnakarnamrutha

  ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்: காவிய அமைப்பு:-

  அற்புதமான சௌந்தர்யத்துடன் மூவுலகையும் மோகத்தில் மூழ்கவைக்கும் மனோகர சுந்தரனான ஸ்ரீ கிருஷ்ண பகவானை மாதுர்ய பக்தியோடு வர்ணிக்கும் 332 ஸ்லோகங்களோடு கூடிய இந்த காவியம் மூன்று அத்தியாயங்களாக அமைக்கப் பட்டுள்ளது. ஸ்ரீ கிருஷ்ணரின் நளினமான லீலைகள் கேட்போரின் செவிகளில் இனிமையான சப்த அலைகளாகச் சென்று சேர்கின்றன.

  மதுரானந்தத் துளிகள் தொடர்ந்து தெளிக்கப் பட்டு, ஒரு வித திவ்ய அனுபூதியை அளிப்பதால் இக்காவியத்திற்கு ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் என்ற பெயர் மிகப் பொருத்தமானதே!

  அ. 113 சுலோகங்களைக் கொண்ட முதல் அத்தியாயத்தில் திரிபுவன மோகன சுந்தரனான பரமாத்மாவின் தேஜஸ், பாலக்ரிஷ்ணனின் வடிவில் புன்னகை பூக்கிறது. அம்முகத்தின் திவ்யமான ஒளியில் மின்னுன் சௌந்தர்யம், அந்த விசாலமான கண்களில் பெருகும் கருணாரசத்தோடு கூடிய அன்புப் பார்வை, அழகிய பிரகாசத்தோடு கூடிய உதடுகளில் இருந்து வெளிப்படும் வேணு கானாம்ருதம் …. ….. ஸ்ரீ கிருஷ்ண சாக்ஷாத்காரத்தை வர்ணிக்கும் பாடல்கள். (68 முதல் 72 வரையிலான ஸ்லோகங்கள்)

  ஆ. 111 சுலோகங்களைக் கொண்ட இரண்டாவது அத்தியாயத்தில் உள்ள முக்கிய அம்சங்கள்:- இளம் துளசி தளங்களால் தொடுக்கப் பட்ட மாலைகளை அணிந்த நீல மேக சியாமளனை லீலா சுகர் கனவில் தரிசித்து, அந்த அனுபவத்தை ‘வேணி மூலே…’ என்று 7 வது ஸ்லோகத்தில் வர்ணிக்கிறார்.

  வேணு கானம், கோபிகைகள், ராதா கிருஷ்ணர், யசோதா, பால கிருஷ்ணர், ருக்மிணியின் கல்யாண காட்சிகள் – இவற்றை வர்ணித்து, பின் கிருஷ்ண தியான மகிமையால் பவரோக பயம், மரண பயம் கூட விலகும் என்று கூறுகிறார் லீலா சுகர்.

  இ. 108 சுலோகங்களைக் கொண்ட 3 வது அத்தியாயத்தில், நவ யௌவன கிருஷ்ணர், கோபீ கிருஷ்னர், கிருஷ்ணரின் தேஜஸ், கிருஷ்ணரின் மந்தஹாசம், வக்ஷஸ்தலம், கிருஷ்ண பகவானின் திவ்ய பாதங்கள், ஸ்ரீ கிருஷ்ணரின் த்ரிலோக தெய்வீகத் தன்மை இவற்றோடு கிருஷ்ண பகவானின் நக, சிக பர்யந்தம் வர்ணித்து, விடிகாலை, மத்யான, சாயங்கால சமயங்களில் தியானம் செய்ய வேண்டிய ஸ்ரீ கிருஷ்ண ரூபங்களை கவிஞர் அற்புதமாக வர்ணிக்கிறார்.

  கர்ணாம்ருதத்தில் திவ்ய சிருங்காரம் : மதுர பக்தி:-

  ‘நாட்டிய சாஸ்திரம்’ என்னும் நூலில் பரத முனிவர் ‘காமம்’ என்பது நான்கு நிலைகளைக் கொண்டது என்று கூறுகிறார். 1. தர்மத்தோடு கூடிய காமம். 2. அர்த்தத்தோடு கூடிய காமம். 3. ஸ்திரீ புருஷ ஆகர்ஷணத்தால் ஏற்ப்படும் காமம். 4. மோக்ஷம் சம்பந்தப்பட்ட காமம். ‘காமம்’ என்னும் சொல்லிற்கு ‘ஆசை, அடைய வேண்டும் என்ற கோரிக்கை’ என்று பொருள்.

  மோக்ஷத்தை அடைய வேண்டும் என்ற கோரிக்கையே பரத முனிவர் கூறிய ‘மோக்ஷ காமம்’. இந்த மோக்ஷம் சம்பந்தப் பட்ட சிருங்காரமே ‘பக்தி சிருங்காரம் அல்லது மதுர பக்தி’. ஸ்ரீ மத் பாகவதம் – தசம ஸ்கந்தத்தில் வர்ணிக்கப் படும் கோபீ கிருஷ்ணர் சிருங்காரம் இதைப் போன்ற தெய்வீக சிருங்காரமே! அது ஸ்திரீ புருஷ சம்யோகத்திற்குச் சம்பந்தப் பட்ட லௌகீக சிருங்காரம் கிடையாது.

  ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதத்தில் லீலா சுகர் இப்படிப்பட்ட சிருங்காரத்தையே வர்ணிக்கிறார். இங்கு உலகியல் சம்பந்தப் பட்ட ஆண் பெண் சிருங்காரம் உண்டாவதற்கு ஹேது இல்லை.

  அவர்களிடையே ஜீவாத்மா பரமாத்மாவிடம் ஐக்கியம் ஆவதற்காகப் படும் வேதனையே காணப் படுகிறது. கோபிகைகள் அனைவரும் ஸ்ரீ கிருஷ்ணரை காதலித்தார்கள். அவர்களைவருக்கும் ஸ்ரீ கிருஷ்ணர் ஆனந்தத்தை அளித்தார். ஆனால் அவர் தன் மனதை மட்டும் யாருக்கும் அளிக்க வில்லை. ஸ்ரீ கிருஷ்ணர் என்றுமே பிரம்மச்சாரிதான். இந்த ‘பா’வங்கள் எல்லாமே கர்ணாம்ருததில் ஆழமாக நோக்கினால் காணக் கிடைக்கிறது.

  ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதத்தை சத் பக்தியுடன் படிப்பவரும், கான சபைகளில் இவற்றின் உள்ளர்த்தத்தை தரிசிப்பவரும், சந்தேகமின்றி உண்மையான பக்தியோடு, சதுர்வித புருஷார்த்தங்களில் மோக்ஷ ‘பா’வத்தையும் மிஞ்சிய ஐந்தாவது ‘பா’வமான ‘பஞ்சம ‘பா’வத்தைப் பெறும் யோக்யதைக்கும் பாத்திரமாவார்கள்.

  தன்னை மறந்த பக்தியில் திளைக்க வைக்கும் சுலோகங்களில் சில:-

  1. “கஸ்தூரி திலகம் லலாட பலகே வக்ஷஸ்தலே கௌஸ்துபம்…” – (2-108)
   இந்த ஸ்லோகத்தைப் படித்துப் பார்த்தால்….. “கஸ்தூரி திலகத்துடன் ஒளிரும் நெற்றி, மூக்கில் முத்துப் புல்லாக்கு, கரங்களை அலங்கரிக்கும் புல்லாங்குழல், மார்பில் கௌஸ்துப மணி, தங்க கங்கணங்களை அணிந்த கைகள், உடல் முழுவதும் ஹரி சந்தனம் பூசிய அழகு, கழுத்தில் மின்னும் முத்து மாலை – இவற்றோடு கோபிகைகளால் சூழப்பட்ட ஸ்ரீ கிருஷ்ண பகவான் சர்வ கம்பீரமாக பிரகாசிக்கிறான்” என்ற காட்சியை பக்தர்கள் தம் மனோ நேத்திரங்களால் சித்திரத்தைப் போல் கண்டு தியான முத்திரையில் நிலைத்து விடுவர். இந்த சுலோகம் கோபால மந்திர பிரபாவத்தால் தவத்தில் ஸித்தி பெற்று, ரிஷியாகிப் போன லீலா சுகர், காவிய வடிவில் நமக்களித்த ஸ்ரீ கிருஷ்ண பவகானின் ‘வர்ண சித்திரம்’.
  2. “பாலேயமாலோல விலோசனேன………….” -(1-69)
   “தன் இளம்கன்று கண்ணில் பட்ட வுடனே, வாத்சல்யம் மிகுந்து தாய்ப் பசு தன் நிறைந்த மடியிலிருந்து சொரியும் பால் தரைபோல், அற்புதமான சௌந்தர்யம் மிகுந்தவன், அலங்காரம் மிகுந்தவன் ஆன கோபீ கிருஷ்ணனின் அலைபாயும் கண்களின் மன்மத தேஜசால் எங்களின் பக்தி தாரை வெகுவாக ஆகர்ஷிக்கப் படுகிறது”. உண்மையான பக்தர்களின் மனதை முழுமையாக தன்னிடம் வசீகரிக்கும் தெய்வீக காந்த சக்திக்கு நிகரானது வேறெதுவுமில்லை. சம்பூர்ண பகவத் ஸ்வரூபனான ஸ்ரீ கிருஷ்ணனின் ஆஹ்லாத (ஹ்லாதினீ சக்தி) சக்திக்கு இந்த சுலோகம் ஒரு எடுத்துக் காட்டு.
  3. “மாலா பர்ஹ மனோக்ய …..
   லீலா வேணு ரவாம்ருதை
   பாலம் பால தமால….” – (3-66)
   இது ஸ்ரீ கிருஷ்ணரை பெண் தெய்வமாக வர்ணிக்கும் கான சித்திரம். “பூமாலைகள், மயில் தோகை இவற்றால் அலங்கரிக்கப் பட்ட கொண்டையை உடையவள், சுகந்த திரவியங்களால் பூசப் பட்டவள், மனத்தைக் கொள்ளை கொள்பவள், மநோஹரமான வேணு கானத்திற்கு மனதை பறி கொடுத்தவள், பால ரூபத்துடன் கூடியவள், நீல மேக சரீரம் கொண்டவளான பரதேவதையை வாங்குகிறேன்”.
  4. ஸ்ரீ கிருஷ்ணரை பெண் வடிவில் பர தேவதையான பாலா திரிபுர சுந்தரி தேவியாக வர்ணிப்பதில் இந்த சுலோகம் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. ஆண்- பெண் இரு வடிவங்களும் இறைவனுடையதே. இச் சுலோகத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் லாவண்ய லக்ஷ்மியை பர தேவதையான பாலா திரிபுர சுந்தரியாக கவிஞர் வர்ணிக்கிறார். இதை கவனிக்கும் போது, ‘பாலாஜி’ என்று பக்தர்களால் அழைக்கப் படும் ‘திருமலை ஸ்ரீ வேங்கடேஸ்வர சுவாமி’யை லீலா சுகர் தரிசித்து, தேவி தத்துவ அனுபூதியை பெற்றிருப்பார் என்பது புலனாகிறது.
  1. ஸ்ரீ கிருஷ்ணரை கனவில் தரிசித்த லீலா சுகரின் வர்ணனை:-
   “வேணீமாலே விரசித கனஷ்யாமம்…..
   ….துளசீ பூஷணோ நீலமேக…………” -(2-7)
   “தலைக் கொண்டையில் மயில் தொகையை சொருகிக் கொண்டு, தோள்களை இந்திர நீலக் கற்களால் அலங்கரித்துக் கொண்டு, இளம் துளசி இலைகளால் ஆன மாலை கழுத்தில் மணம் வீச, மஞ்சள் பட்டாடை உடுத்திய நீல மேக ஷ்யாமளனை லக்ஷ்மி தேவி ஆலிங்கனம் செய்து கொள்ளும் காட்சியை கனவில் தரிசித்தார் லீலா சுகர்”.

  ஸ்வப்ன தரிசன பாக்கியம் பெற்ற லீலா சுகர், தன் கவிதைக்கு ஆதாரம் ஸ்ரீ கிருஷ்ணரே என்றும், நிரந்தர கீர்த்தனத்தாலேயே தன் சாதாரண வார்த்தைகள் கூட மநோஹரமான மகாவாக்கியங்களாக மாறியுள்ளன என்றும் கூறியுள்ளார். “கிருஷ்ணா! உன்னை வந்தடைந்ததால் தான் உன் வேணுகானம் என்னும் தேனோடு சேர்ந்து என் சொற்கள் சொல்லால் விளக்க இயலாக கவிதை இனிமையை பெற்றன. கிருஷ்ணா! உன் நாம கீர்த்தனையின் மகிமை இத்தகையது!” என்று பகவானிடம் நன்றி தெரிவிக்கிறார் கவிஞர்.

  1. “சந்தியா வந்தனம் பத்ரமஸ்து……..” -(2-107)
   வில்வ மங்கள லீலா சுகர் சிறு வயதிலேயே சிவார்ச்சனை செய்து வேத பாடம் படித்து பாண்டித்தியம் பெற்ற அந்தணர். அப்படிப் பட்டவர், ” ஓ! சந்தியா வந்தனமே! நில்!” என்று கூறுவது அதனை மறுக்கும் விதத்திலா? அல்ல.

  கோபால மந்திரோபதேசத்தால் ஸ்ரீ கிருஷ்ண சாக்ஷாத்காரம் பெற்ற லீலா சுகர், ‘இந்த ஜகமெல்லாம் கிருஷ்ண மயமே!’ என்பதான நிரந்தர ஸ்ரீக்ருஷ்ண நாம உன்மத்தத்தில் திளைத்தவர். அவருடைய ஆராதனைக்குரிய ஸ்ரீ கிருஷ்ண பகவானின் உருவமே அவருக்கு பல வித தேவ தேவி உருவங்களின் ஒருமித்த வடிவாகும். எனவே தான்,”சந்தியா வந்தனம் பத்ரமஸ்து..”என்னும் ஸ்லோகத்தின் உட்பொருள், “ஸ்நான, சந்தியா -கடமைகளுக்கு விடை கொடுத்து விடு” என்பதல்ல. நிரந்தர கிருஷ்ண நாம, ரூப தியானமே பவித்ர ஸ்நானம்; சிருஷ்டியில் உள்ள அனைத்தையும் கிருஷ்ண ரூபமாக தரிசிப்பதே ‘சர்வ தேவதைகளின் ஸ்வரூப தரிசனம்’. அப்படியிருக்க, இனி தூய்மை பெறுவதற்கு சந்தியா வந்தனம் வேறு எதற்கு? அந்த வேலையை விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்மரணமே செய்து விடுமே! ‘ஹரி’ என்னும் இரண்டக்ஷரங்களை ஸ்மரித்தாலே சர்வ பாவங்களும் நீங்கி சுத்தமாகி விடுமே! ‘அனைத்தையும் பவித்திரப் படுத்துவது, மங்கள கரமாகச் செய்வது, விஷ்ணுவின் நாமமே’ என்று விஷ்ணு சஹஸ்ரநாமம் ‘பவித்ரம் மங்களம் பரம்’ என்று கூறுகிறதே!

  நாட்டிய கான சபைகளில் புகழ் பெற்ற சில பாடல் வரிகள்:-

  சங்கீத கான சபைகளிலும், குச்சுபுடி, பரத நாட்டிய மேடைகளிலும் ஜெய தேவரின் அஷ்டபதிகளைப் போலவே, மிக அழகாக பாடப் படுகிறது. மேலும் ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருத சுலோகங்களின் ‘பா’வ அர்த்தங்களை நாட்டிய சாஸ்திர நிபுணர்கள் தங்கள் நாட்டிய ந்ருத்திய நிகழ்சிகளில் ‘சிற்பங்களைப் போல் அபிநயிப்பதற்கு ஏற்றாற்போல் இயைபாக இருப்பதால்’ ஏற்றுக் கொண்டு புகழாரம் சூட்டுகிறார்கள்.

  1. “கரார விந்தேன பாதார விந்தம்…….
   ……….பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி ……….” -(2-58)
   “கரம் என்னும் தாமரைப் பூவினால், பாதமாகிய தாமரையை முகம் என்னும் பத்மத்தில் கொண்டு சேர்த்து, க்ஷீர சாகரத்தில் வட பத்திரத்தில் படுத்துக் கொண்டுள்ள பால கிருஷ்ணனை யசோதை தன் கரங்களால் ஆலிங்கனம் செய்து கொஞ்சி, அவனை உறங்கச் செய்வதற்கு தாலாட்டு பாடுகிறாள். அந்த யசோதையின் புண்ணிய பயனால் பிறந்த பால கிருஷ்ணனை வணங்குகிறேன்.”

  இந்த ஸ்லோகத்தில், கரங்கள் – படைப்புக்கு சங்கேதமாக நாட்டிய மேடையில் காட்டும் ஹாவ, பாவ, லய, வின்யாச -அபிநயங்கள் ( அதற்குத் தகுந்த தாள வாத்ய ஸ்வர கூட்டுக்களை தவிர) ரசிகர்களையும் வித்வான்களையும் பீடாதிபதிகளையும் கூட அலௌகிக ஆனந்தத்தில் திளைக்க வைத்து தத்துவ அனுபூதியில் தம்மை மறக்கச் செய்வதுண்டு.

  1. “காளிந்தீ புலினோதரேஷு முஸலீ யாவத்கீத: கேலிதும்
   ……பாயன்ன: ஸ்வசிகாம் ஸ்ப்ருசன் பிரமுதித: க்ஷேத்ரேர்த பீதேஹரி:” -(2-61)
   “யமுனை ஆற்றுமணலில் விளையாடச் சென்ற பலராமன் திரும்பி வருவதற்குள் நீ இந்த பாலைக் குடித்து விட்டால், உன் தலை முடி நீண்டு வளரும்” என்று யசோதை கூறவே, பாதி பாலைக் குடித்து விட்டு தன் தலை முடி வளர்ந்து விட்டதா, இல்லையா? என்று தொட்டுப் பார்த்துக் கொண்ட பால கிருஷ்ணன் என்னை ரக்ஷிப்பானாக!”

  நாடக பாணியில் அமைந்த இக்காட்சி நாட்டிய நிகழ்சிகளில் அபிநயிப்பதற்கு மிகவும் ஏற்புடையதாக அமைந்து ஹாஸ்ய ரச ஆனந்தத்தை அளிக்கும் கட்டமாகும்.

  1. “சாயங்காலே வனாந்தே குஸுமித சமயே
   வந்தேஹம் ராஸ கேளீ ரத மதி ஸுபகம் வச்ய கோபால க்ருஷ்ணம்” – (3-99)
   “மாலை வேளையில் பிருந்தாவன மணல் வெளியில் நில வொளியில் புவன மோகனனாக, ஆயிரக் கணக்கான கோபிகைகள் ஸ்ருங்கார ‘பா’வத்துடன் சேவித்திருக்க, ராசக் கேளியில் ஈடுபட்ட வச்ய கோபால கிருஷ்ணனுக்கு நமஸ்காரம்.”

  ஆகாயத்தில் இருக்கும் அனைத்து தேவதைகளும் புண்ணியத்தை அள்ளித் தரகூடிய, ஜீவாத்மாக்கள் பரமாத்மாவுடன் ஐக்கியமாகும் இக்காட்சியைக் கண்டு களித்தனர். இதைப் போன்ற அற்புத காட்சியை நாட்டிய மேடையில் காணும் ரசிகர்களுக்கு ‘கோலோக ராதா ‘பா’வம், மற்றும் பஞ்சம புருஷார்த்த மகா ‘பா’வத்தை பெறும் அனுபூதியும் பாக்கியமும் கிட்டுகிறது.

  1. “கோதூலி தூஸரித கோமல குந்தலாக்ரம்……
   கோவிந்த மிந்து வதனம் சரணம் பஜாமா………..” – (2-26)
   “கோதூளியால் நிறைந்து காணப் படும் தலை முடியை யுடையவன், கோவர்தன பர்வதத்தை தூக்கியதால் களைப்படைந்தவன், கோபிகைகளின் மார்பில் அணியும் குங்கும சாந்தால் அடையாளமிடப் பட்ட உடலைக் கொண்ட ஸ்ரீ கிருஷ்ணன் என்னை என்றும் ரக்ஷிப்பாராக!”

  பக்தி, சௌந்தர்யம், ரசாம்ருததுடன் கிருஷ்ண லீலைகளை வர்ணிக்கும் இந்த காவியம், அனேக புகழ் பெற்ற சுலோகங்களுடன் ஜொலித்தபடி, ‘ந்ருத்ய லீலா க்ரிஷ்ணாம்ருதமாக’ – பக்தி, சங்கீதம், நாட்டியம் – இவற்றின் கூட்டாக தற்காலத்தில் மற்றுமின்றி, வருங்காலத்திலும் ஒளிர்ந்து கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

  • Source:- “பில்வமங்கள லீலா சுகுடு- ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் “
  • தெலுங்கில் எழுதியர் – ரெ.வெ.ராஜேஸ்வர ராவ்.
  • ருஷிபீடம் விசிஷ்ட சஞ்சிகா -2009
  • தமிழில்: ராஜி ரகுநாதன்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  368FollowersFollow
  40FollowersFollow
  74FollowersFollow
  1,589FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-