spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்ஜூலை 1 இன்று: சயன ஏகாதசி, தக்ஷிணாயன ஏகாதசி!

ஜூலை 1 இன்று: சயன ஏகாதசி, தக்ஷிணாயன ஏகாதசி!

- Advertisement -
ekadasi
ekadasi

ஜூலை 1 இன்று ஏகாதசி: சயன ஏகாதசி, தக்ஷிணாயன ஏகாதசி என்று அழைக்கப்படும் இன்றைய ஆஷாட மாத சுக்லபக்ஷ ஏகாதசி மிக பத்திரமான ஏகாதசி தினங்களில் ஒன்று.

இதன் பிறகு தட்சிணாயனம் தொடங்கப் போவதால் இது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

மேலும் ஒவ்வொரு ஏகாதசிக்கும் மகா விஷ்ணுவின் ஒவ்வொரு நாமம் கூறப்படுகிறது. ஏகாதசி விரத நியமங்களைப் பொறுத்து மாகசீர்ஷ சுத்த ஏகாதசி யிலிருந்து கேசவா முதலான நாமங்களால் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க வேண்டும். அந்த வரிசையில் ஆஷாட மாதத்தில் இன்றைய ஏகாதசி வாமன நாமத்தோடு கூடியது. அதனால் இன்று வாமன நாமத்தால் வாமன ரூப நாராயணனை வழிபட வேண்டும்.

இது ‘தொலி’ ஏகாதசி அல்லது முதல் ஏகாதசி என்றழைக்கப்படுகிறது.

ஏகாதசி விரதம் எப்போது செய்தாலும் நியமங்களை ‘த்ரிராத்ரிவிரதம்’ என்ற புரிதலோடு கடைபிடிக்க வேண்டும்.

அதிலும் பிரத்யேகமாக இந்த ஏகாதசிக்கும் வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படும் மார்கசீர்ஷ ஏகாதசிக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாக மாத சுக்ல ஏகாதசிக்கும் வைகாச மாத ஏகாதசிக்கும் கூட முக்கியத்துவம் உள்ளது.

ஆஷாட மாதத்தின் சிறப்பு என்னவென்றால் இப்போதிலிருந்து சாதுர்மாஸ்ய தீட்சை எடுக்கும் பழக்கம் உள்ளது.

ekadasi
ekadasi

கிருஹஸ்தர்கள் அதாவது இல்லறத்தார் ஏகாதசி பண்டிகையிலிருந்து சாதுர்மாஸ்ய விரதம் தொடங்கு வார்கள். யதீஸ்வரர்கள் அதாவது சன்யாசிகள் பூர்ணிமையிலிருந்து தீட்சை தொடங்குவார்கள். அவரவர் நியமங்கள் அவரவருக்கு உண்டு.

க்ருஹஸ்தர்கள் இந்த நான்கு மாதங்களும் ஆகார நியமம் கடைபிடித்தபடியே தெய்வ வழிபாடு செய்து அந்தர்முக தியானம், ஜபம் முதலான ஆன்மிக சாதனைகளை செய்து வருவார்கள்.

யதீஸ்வரர்கள் ஒரே இடத்தில் நிவாசம் செய்து பிரம்ம வித்தையை போதித்து, அந்தர்முக சாதனையை தாம் செய்வதோடு பிறருக்கும் எடுத்துக்கூறி சாதகர்களிடம் விழிப்பு ஏற்படுத்துவார்கள். இது சாதுர்மாஸ்ய விரத நியமங்களில் முதன்மையானது.

அதற்கு ஆரம்பமாக வரும் ஏகாதசி ஆதலால் இதனை முதல் ஏகாதசி என்று கூறுவர்.

சாதுர்மாஸ்ய தீட்சை செய்யாதவர்களும் கூட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது சிறப்பளிக்கும். அனைத்து ஏகாதசி விரதங்களுக்கும் இருக்கும் த்ரிராத்ரிவிரத நியமம் இதற்கும் உண்டு.

முதல் நாளான தசமி அன்று இரவு பலகாரம் ஏற்பதோ உபவாசமோ செய்யவேண்டும். ஏகாதசியன்று முழு உபவாசம் இருக்க வேண்டும். அடுத்து துவாதசியன்று பாரணை எனப்படும் உணவு ஏற்கவேண்டும். திரயோதசி அன்று கீதம், நிருத்தியம், வாத்தியம் போன்றவற்றை பகவானுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கு சயன ஏகாதசி என்ற ஒரு பெயரும் உள்ளது. நாராயணன் இன்றிலிருந்து தட்சிணாயனம் முழுவதும் சயனித்தில் இருப்பார். இந்த ஏகாதசிக்கு தட்சிணாயன ஏகாதசி என்றும் பெயர் உண்டு. உத்தராயண ஏகாதசி தனுர் மாதத்தில் வருகிறது. இந்த இரண்டு ஏகாதசிகளுக்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது.

நாராயணன் சயனத்தில் இருப்பார் என்று கூறப்படுவது யோக நித்திரையை குறிப்பதாகும். உடலை மறக்கச்செய்யும் உறக்கம் அல்ல. தியானத்திலிருந்து சிதறாமல் இருப்பது யோகநித்திரை. இன்று நாராயணன் யோக நித்திரையில் ஆழும் நாள்.

இதனை கவனித்தால் சூரிய சக்தியின் மூலம் நாம் பெறும் விஷ்ணு சக்தியோடு தொடர்பு உடைய செயல் இது என்பது புரியும்.

சூரிய சக்தியில் உள்ள நாராயண சக்தியை பூமியும் சாதகர்களும் எவ்வாறு பெறுகிறார்கள் என்பதை அறிவதற்காகவே இத்தகைய பண்டிகைகளை ஏற்படுத்தியுள்ளார்கள்.

பாரதிய இந்து மதம் ஜோதி விஞ்ஞானத்தில் உள்ள தெய்வீக சக்தியை எவ்வாறு பெறுவது என்பதை குறிப்பதற்காகவே பண்டிகைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்து மதம் திவ்யமான விஞ்ஞான மதம். அதனால் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. அவற்றில் கடைப்பிடிக்கும் நியமங்கள் கூட மனிதனை விஸ்வ சக்தி நிறைந்தவனாக செய்யக் கூடியவை. அத்தகைய அற்புதமான சக்தியை நம்மில் ஒளிரச் செய்து மனிதனை தெய்வீகத்தை நோக்கி பரிணாமம் செய்வதற்காக ஏற்பட்டவையே நம் பண்டிகைகள் அனைத்தும்.

அப்படிப்பட்ட பண்டிகைகளில் முக்கியமானது இந்த முதல் ஏகாதசி.

நாராயணன் யோக நித்திரையில் செல்கிறான் என்றால் தட்சிணாயன காலத்தின் சிறப்பை எடுத்துக் கூறுகிறான் என்று பொருள். அந்தர்முக தியான பிரக்ஞையே யோகநித்திரை என்பது.

யோகப் பார்வையால் அந்தர்முகத்தில் உள்ள பரமாத்மாவை தரிசிப்பதற்காக சாதனை செய்வதற்கு ஏற்ற காலம் சாதுர்மாஸ்யம். இந்த நேரத்தில் ஆன்மீக சாதனை செய்பவர்கள் பல மடங்கு உயர்வான அற்புதமான பலன்களைப் பெறுவர் என்பது சாஸ்திர வசனம்.

இதற்கு விஷ்ணு சயனோத்சவ விரதம் என்ற பெயரும் உண்டு.

ஆஷாட மாதம் முழுவதும் ஏகபுக்த விரதம் இருக்க வேண்டும். அதாவது ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். அவர்களுக்கு உலகியல் செல்வங்கள் விருத்தியாவதோடு பரமார்த்திகமான உயர்வும் கிடைக்கும். எனவே இந்த விரதம் பரமார்த்த ஞானத்திற்கு மட்டுமே அன்றி இவ்வுலக செல்வச் செழிப்புக்கும் ஏதுவானது.

நாராயணனை இன்றைய தினம் பிரத்தியேகமாக நாக சயனத்தில் சயனித்திருக்கும் முத்திரையில் வழிபடவேண்டும். லட்சுமிதேவியும் பிற தேவதைகளும் வணங்கியிருக்க யோகநித்திரையில் இருக்கும் அனந்த சயன நாராயணனை வழிபடவேண்டும். திருவனந்தபுரம் போன்ற தெய்வீக தலங்களில் அனந்தபத்மநாபன் ஆக அனந்தசயன மூர்த்தியாக தரிசனம் அளிக்கிறார். தெய்வீக சர்ப்பங்களின் மீது நாராயணன் பிரகாசிக்கிறார்.

ஆஷாடம் என்றால் பிரம்மச்சரிய விரதத்தின் போது கையில் பிடித்திருக்கும் மோதுக குச்சி என்று பொருள். இதனை பாலாச தண்டம் என்பர். பிரம்மச்சரிய விரதத்தில் மோதுக கிளையால் ஒரு தண்டம், கழி செய்து செய்து அதனை கையில் பிடித்து இருப்பார்கள். பிரம்மச்சரிய விரத தீட்சைக்கும் நியமத்தை கடைபிடிக்கும் சாதனைக்கும் ஆஷாடம் என்று பெயர். தெய்வீக தேஜஸூக்காக சாதனை செய்யும் காலம் ஆதலால் இதற்கு ஆஷாடம் என்று பெயர் என்பர். அதுமட்டுமின்றி பூர்வாஷாடா, உத்திராஷாடா நட்சத்திரங்களில் மீது பௌர்ணமி வருவதால் ஆஷாட மாதம் என்ற பெயர் ஜோதிட கணிதத்தின் படி பழக்கத்தில் உள்ளது. அந்த நட்சத்திரங்களுக்கு கூட அந்தப் பெயர் ஏற்பட்டதில் ஒரு சிறப்பு உள்ளது. இது யக்ஞத்தோடும் ஆன்மீக தீட்சைசையோடும் தொடர்புடைய மாதம் அதனால் இன்று கடைபிடிக்கும் ஏகாதசி சாதனைக்கு மிகச் சிறப்பு உள்ளது.

மேலும் இன்று வாமன மூர்த்தியாக பகவானை வழிபட வேண்டும் என்பது மற்றுமொரு சிறப்பு.

வாமனன் என்றாலே பிரம்மச்சரிய விரதத்தில் இருப்பவர். பலி சக்கரவர்த்தியை அடக்கி அருளிய வடிவம் அது. வாமனன், ‘ஆஷாடம்’ எனப்படும் பாலாச தண்டத்தை கையில் பிடித்து உள்ளார். ‘பாலாச தண்டோ ஆஷாடஹ”‘ என்பது விளக்கம்.

யக்ஞ ரட்சணைக்கும் தர்ம ரக்ஷணைக்கும் வடிவெடுத்த பிரம்மச்சர்ய வாமன மூர்த்தியான நாராயணனை இன்று ஏகாதசி வழிபாடு செய்ய வேண்டும். இன்று தியானம் செய்பவர்களுக்கு ஞானம் அருளுகிறார் பகவான்.

அணோரணீயான் மஹதோமஹீயான் என்று கூறுவது போல் மிக மிக சூட்சுமமானவனும் மிகமிக ஸ்தூலமானவனும் பகவானே! அதனால்தான் வாமனன் என்ற உடனே திருவிக்கிரமன் என்று உடனுக்குடன் பொருள்படுகிறான். வாமனனாக வந்து த்ரிவிக்ரமனாக வளர்ந்தான் பகவான். வாமன, திருவிக்ரம தத்துவத்தை தியானம் செய்ய வேண்டிய நாள் இது. வாமனனாக அவதரித்தது பாத்ரபத மாதம் துவாதசியன்று. ஆனால் இன்று வாமன மூர்த்தியாக நாராயணனை பூஜை செய்ய வேண்டும் என்பதே இன்றைய தினத்தின் பிரத்தியேக சிறப்பு.

நாராயணனின் கிருபையை பிரார்த்திப்போம். சர்வம் வாமன ரூப ஶ்ரீநாராயணமஸ்து!

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe