
கணபதி கணாதிபதி கணேசன் என்றால் தேவர்களுக்கெல்லாம் தலைவன் என்று பொருள். க என்ற எழுத்து ஞானத்தை குறிக்கிறது. ண என்ற எழுத்து மோக்ஷத்தை குறிக்கிறது. பதி என்ற வார்த்தை தலைவன் என்ற பொருளை குறிப்பிடுகிறது. கணபதி என்றால் ஞானத்திற்கும் மோட்சத்திற்கு தலைவனாக பரப்பிரம்ம சொரூபம் ஆக இருப்பவர் என்று விளக்கம் கூறுவார்கள்.
கணபதி முழுமுதற்கடவுள். எந்தவித பேதமும் இன்றி இந்துக்கள் அனைவராலும் விரும்பி வணங்கப்படுபவர். சிவபூஜை, அம்பாள் பூஜைக்கு சிலசமயம் கடினமான நியமங்கள் உண்டு. கணபதி பூஜைக்கு அப்படி ஏதும் கிடையாது. அரசமரத்தடியில், தெருமுனையில் என்று திரும்பிப் பார்க்கும் இடமெல்லாம் பிள்ளையார் கோவிலை பார்க்கலாம். களிமண்ணையும் மஞ்சள் பொடியையும் கூட பிள்ளையாராக பிடித்து வைத்து வணங்கலாம். பூவுக்காக காசு செலவழிக்க வேண்டிய அவசியமில்லை அருகம்புல்லை பிய்த்துப் போட்டாலும் எருக்கம் பூவை பறித்து போட்டாலும் ஆனந்தமாக ஏற்றுக்கொள்வார். கொய்யாப்பழம் பிரப்பம்பழம் வாழைப்பழம் அவல் பொறி என்று எளிதாக கிடைப்பதை நைவேத்யம் செய்யலாம் ஏற்றுக்கொள்வார். தேங்காயை உடைத்து நார் பிய்த்து நீரூற்றி நெய்வேத்தியம் செய்ய வேண்டாம் சதிர்க்காய் உடைத்தால் போதும். முடிந்தால் மோதகம் நைவேத்யம் செய்யலாம் இப்படி ஏழைக்கும் எளியவர். குழந்தைகளாலும் கொண்டாடப்படுபவர் ஸ்ரீ மகாகணபதி.
விநாயகரை முதலில் வழிபடாமல் எந்த பூஜையும் எந்த செயலும் செய்யப்படுவதில்லை இது நமது மரபு செய்யும் தொழில் இடையூறு இல்லாமல் முடிவதற்கு முதலில் மகா கணபதியை வழிபட வேண்டும் காவியங்கள் எழுதுவதாக இருந்தாலும் இதர தெய்வங்கள் மீது பாடல்கள் எழுதுவதாக இருந்தாலும் காப்பு பாடல் விநாயகர் வணக்கம் ஆகத்தான் இருக்கும் ஆதிசங்கரர் எழுதிய சுப்ரமணிய புஜங்கத்தின் காப்பு பாட்டு கணேச ஸ்தோத்திரம்
சதாபாலரூபாபி விக்னாத்ரி ஹந்த்நி மஹாதந்தி வக்த்ராபிபஞ்சாஸ்யமான்யா விதிந்தராதி ம்ருக்ய கணேசாபிதான விதத்தாம்ஸ்ரியம்காபிகல்யாணமூர்த்தே
எப்போதும் குழந்தை வடிவத்தோடும் இடையூறு என்ற மலையை தகர்த்து விடக்கூடிய வலிமை உடையவரும் ஈசனுக்கு விருப்பமானவரும் இந்திராதி தேவர்களால் வணங்கப்படுபவருமான மகா கணபதியை வணங்கி வழிபடுபவர்கள் இல்லங்களில் செல்வத்தையும் மகாலட்சுமி விரும்பி வாசம் செய்வாள் என்பது இதன் பொருள்
மகா கணபதி மீது ஆதிசங்கரர் இயற்றிய கணேச புஜங்கத்தில் எங்கும் நிறைந்த ஸ்ரீ மஹா கணபதியை மனம் மகிழச் செய்தால் நாம் எதைத்தான் அடைய முடியாது? எல்லாவற்றையும் பெறலாம் என்கிறார்.
ஒரு நல்ல கச்சேரி முடிந்த பிறகும் அந்த நாதம் நம் மனதில் லயித்து விடுகிறது. அதை போல் பிரகாசமான நம்மை ஈர்க்கும் விநாயகப் பெருமானின் திரு உருவம் நம் மனதில் லயித்து விடுகிறது. சிவந்து பிரகாசிக்கும் செம்பருத்தி மலர் சிகப்பு ரத்தினம் செம்பவளம் அருணோதயத்தில் தோன்றும் இளம் சூரியன் பிரகாசம் இவற்றைப் போல பிரகாசிப்பவர் பருத்த வயிறு ஒற்றைத் தந்தம் வளைந்த துதிக்கை உடைய ஸ்ரீ கணபதியை வணங்குகிறேன் .
குழந்தை கடவுளான கணபதியிடம் குறும்பும் உண்டு. வாய் மூடி மௌனியாக குறும்பு கண்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கும். தம்மை வணங்காமல் அலட்சியமாக போய்விட்டால் விக்னத்தை உண்டாக்கி விடுவார். கண்களில் குறும்பு பிரகாசிப்பதை, வளைந்து கம்பீரமாக சஞ்சலம் அற்றதாகவும் சிவந்த தாகவும் புருவங்களின் விகாஸங்களால் சோதிப்பதாகவும் கருணை நிரம்பியதுமான அழகான கண்கள் என்று ஆதிசங்கரர் வர்ணிக்கிறார். மகான்களுக்கு மகானாகவும் அழிவற்றவராகவும் மாசற்றவராகவும் பேதமற்ற குணங்களுக்கு அப்பாற் பட்வராகவும் ஆனந்த ஸ்வரூபராகவும், ஓம்கார மூர்த்தியாகவும் வேதங்களின் உட்பொருளை எளிதில் அறியமுடியாத மூலமுதற் பொருளாகவும் உள்ள ஸ்ரீ கணேசரை வணங்குகிறேன்.
முதாகராத்த மோதகம் என்று தொடங்கும் ஆதிசங்கரரின் கணேச பஞ்சரத்னம் மிகவும் பிரபலமானது. கையில் மோதகத்தை மகிழ்ச்சியோடு வைத்துக் கொண்டு இருப்பவரும் தலையில் சந்திரகலை சூடியவரும் தம்மைப் பாதுகாக்கும் பக்தர்களை காத்து ரக்ஷிப்பவரும் திக்கற்றவர்களுக்கு ஆபத்து நேரத்தில் தாமே முன்வந்து காப்பாற்றுபவரும் கஜமுகாசுரனை வென்றவரும் தம்மை வணங்கும் பக்தர்களின் பாவங்களை எல்லாம் போக்கும் ஸ்ரீ மகா கணபதியை வணங்குகிறேன் என்று துவங்குகிறது இந்த ஸ்தோத்திரம். தம்மை வணங்காதவர்களுக்கு விக்னத்தை உண்டாக்கி விளையாடுபவர். ‘நதே தராதி பீகரம்’ என்றாலும் தம்மை வணங்குவர் எந்த அபராதம் செய்திருந்தாலும் அதைப் பொறுத்துக் கொண்டு அவர்கள் மனதை நல்வழியில் திருப்பி அவர்களுக்கு இன்பத்தையும் நற்பெயரையும் கொடுப்பவர். ‘கிருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம் மநஸ்கரம் நமஸ்கிருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம் என்று கூறியதோடு அல்லாமல் ‘அகிஞ்சநார்த்தி மார்ஜநம் சிரந்தநோக்தி பாஜனம்’ அதாவது தம்மை வணங்கி வழிபடுவர்களின் வறுமை கொடுமையை நாசம் செய்பவர் என்று குறிப்பிடுகிறார்.
மகா கணபதியின் இந்த பஞ்சரத்ன ஸ்தோத்திரத்தை தினம்தோறும் விடியற்காலை நேரத்தில் மகா கணபதியை மனதில் தியானித்துக் பாராயணம் செய்து வருபவர்கள் எல்லாவிதமான நோய்களிலிருந்தும் குணமடைவார்கள். சகல பாவங்கள் தோஷங்கள் இருந்தும் விடுபடுவார்கள். நல்ல கவிதா சக்தியும், உத்தம புத்திரர்களையும், நீண்ட ஆயுளையும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும், பெறுவார்கள்.