Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் விநாயக சதுர்த்தி: யானைத் தலை அமர்த்தப் பட்டதன் உட்பொருள் என்ன?

விநாயக சதுர்த்தி: யானைத் தலை அமர்த்தப் பட்டதன் உட்பொருள் என்ன?

கேள்வி: விநாயகருக்கு சிரச்சேதம் நடந்து யானைத் தலையை அமர்த்தியதன் உட்பொருள் என்ன?

adhivinayakar sithalapathi
adhivinayakar sithalapathi

விநாயக சதுர்த்தி ஸ்பெஷல்: ஆன்மீக கேள்வி பதில்!

கேள்வி: விநாயகருக்கு சிரச்சேதம் நடந்து யானைத் தலையை அமர்த்தியதன் உட்பொருள் என்ன?

பதில்: புராணக்கதைகள் குறியீடாக கூறப்பட்டவை என்பதை எப்போதும் நினைவில் நிறுத்த வேண்டும். புராணக் கதைகள் நம் கதைகள் போல் நடந்தவை அல்ல. சிவன், பார்வதி என்றால் நம்மைப் போல் ஆண், பெண் அல்ல. அதே போல் கணபதி என்றவுடன் நம்மைப் போல ஒரு சந்தானம் என்று எண்ணுவதற்கு இடமில்லை.

அவற்றின் பின்னால் உள்ள உட்பொருளை அறிய வேண்டும். இந்த குறியீடுகளை நமக்கு புரியக் கூடிய மொழியில் புராணங்கள் விவரிக்கின்றன. கணபதி அவதாரம் தொடர்பாக பல கதைகள் புராணங்களில் காணப்படுகின்றன.

விரத விதானங்களிலும், விரத கல்பகளிலும் இந்த கதைகள் கூறப்பட்டுள்ளன. பார்வதி தயார் செய்த ஒரு உருவமான கணபதி காவலாக இருக்கும் போது சிவன் வந்து கணபதியுடன் போர்புரிந்து தலையை வெட்டினார் என்று காணப்படுகிறது.

இதனை பார்க்கும் சிலர் ஹிந்து மதத்தின் ஆழம் தெரியாமல் விமர்சனம் செய்ய முற்படுகிறார்கள்.

இதில் தத்துவார்த்தமான குறியீடு உள்ளது. இங்கு உபநிஷத்து நமக்கு உதவி புரிகிறது. நமக்குத் தோன்றிய பொருளை இங்கு கூறுவதற்கு இல்லை. சாஸ்திரத்திற்கு ஏற்றதான அர்த்தம் இங்கு கூறப்படுகிறது.

இறைவனின் ரூபங்கள் நம்மை போன்றவை அல்ல என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். நம்மைப் போன்ற மாமிசம் ரத்தம் போன்றவை நிரம்பிய சரீரங்கள் அல்ல. அவை ஒளிமயமானவை. உண்மையில் அவர்களுக்கு உடலே கிடையாது. அவர்கள் சக்தி ஸ்வரூபங்கள்.

ஒவ்வொரு பாவனைக்கும் ஏற்ப அந்த சக்தி ஒவ்வொரு விதமாக ரூபம் எடுக்கிறது. அந்த ரூபங்கள் கூட ஒளிமயமானவையே. அதாவது ஸச்சிதானந்த தேஜோ மய விக்ரஹம் என்பார்கள். அதேபோல் திவ்ய மங்கள விக்கிரகம் என்ற சொல்கூட உலக வழக்கில் உள்ளது.

ashtavinayak1 Copy
ashtavinayak1 Copy

இந்தக் கதையில் பொதிந்துள்ள சங்கேதம் என்னவென்றால்… முக்கியமாக… பார்வதி என்பது இயற்கை, ப்ரக்ருதி. சிவன் என்பது புருஷன்.

கணபதியின் கழுத்தில் இருந்து பாதம் வரை இருக்கும் வடிவம் பார்வதி உண்டாக்கியது. அதாவது ப்ரக்ருதி தத்துவம். சுவாமி தலையை வைத்தார். அது புருஷ தத்துவம். இவ்விரண்டையும் ஆராய்ந்தால் கணபதி ப்ரக்ருதி, புருஷ தத்துவங்கள் இணைந்த வடிவம் என்பதை அறியலாம். இது உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.

ஞானத்தை பிரதானமாகக் கொண்டது சிரம். சிரசின் உந்துதலால் தான் சரீரம் பணிபுரிகிறது. புருஷனான பரமேஸ்வரனின் உந்துதலால் தான் ப்ரக்ருதி நடைபெறுகிறது. இதனையே எனர்ஜி அண்ட் மேட்டர் என்கிறோம். இந்த தத்துவமே கணபதியின் வடிவத்தில் தென்படுகிறது.

கழுத்திற்கு கீழே உள்ள வடிவம் ஜகம். மேலே உள்ள கஜம்.

ஜகம், கஜம் இவ்விரண்டு தத்துவங்களையும் பொருத்திப் பார்க்க முடிந்தால் ப்ரக்ருதி, புருஷ தத்துவங்களை விளக்குவதற்கு இந்தக் கதை குறியீடாக கூறப்பட்டுள்ளது என்பதை அறிய முடியும்.

இன்னும் ஒரு கதையில் கணபதி பார்வதியின் கர்ப்பத்தில் இருந்தபோது ஒரு ராட்சசன் அந்த சிசுவின் தலையைத் துண்டாக்கினான் என்றும் தலை இன்றி புதல்வன் பிறந்ததால் பார்வதி மனம் வருந்தினாள் என்றும் அப்போது நாராயணன் யானையின் தலையை கொணர்ந்து ஒட்டி வைத்தார் என்றும் கூறப்படுகிறது.

இவை அனைத்தும் கூட நாம் குறிப்பாக அறிய வேண்டிய அம்சங்களே தவிர கதைகளாக அப்படியே ஏற்கக் கூடாது.

இப்படிப்பட்ட பல்வேறுபட்ட கணபதி தோற்றங்கள் தென்படுகின்றன. தத்துவமாகவே அவற்றை ஏற்க வேண்டும். மொத்தத்தில் சாராம்சம் என்னவென்றால் பிரகிருதி புருஷன் இணைந்த தத்துவமே கணபதி என்று விவரிப்பதற்கே சிவபார்வதி கதையை புராணங்கள் கூறுகின்றன.

அடுத்து, யானைத் தலையை ஏன் தேர்ந்தெடுத்தார் என்ற கேள்வி எழுகிறது.

பிரம்ம தேவருக்கு முதன்முதலில் யானைத் தலையோடுதான் கணேசமூர்த்தி தரிசனம் அளித்தார். இதுகுறித்து கணேச புராணம், பிரம்ம வைவர்த்த புராணத்தில் காணப்படுகின்றது. பிரம்மா தியானித்தது ஓம்காரத்தை. அங்கே எந்த தெய்வ வடிவமுமும் இல்லை. பிரணவ சொரூபமான ஓங்காரத்தையே தியானித்தார். அந்த பிரணவம் ஒரு வடிவமெடுத்து தோற்றமளித்தது.

நாம் பொதுவாக ஓம் என்று எழுதும்போது அது எந்த ஒரு தனிப்பட்ட மொழிக்கும் சேராது. 3 என்ற எண்ணைப் போன்று இருக்கும். அதிலிருந்து ஒரு வால் தோன்றும். மேலே ஒரு அரைச்சந்திர வடிவம் இருக்கும். இது ஓம்காரத்தின் சொரூபம். அதுவே ஒரு ஒளி வடிவமாக தரிசனமளித்து கஜவதனமாகத் தோன்றியது.

நாம் பார்க்கும் ஓங்காரத்தின் சங்கேதக் குறியீடுகள் பல உள்ளன. அது மட்டுமல்ல. யானை வடிவம் சிலவற்றை குறிப்பால் உணர்த்துகிறது. வலிமை, ஐஸ்வர்யம் இரண்டையும் யானை உருவம் உணர்த்துகிறது.

கஜலட்சுமி வடிவத்திலும் ஐஸ்வர்ய தத்துவம் உள்ளது.

கணபதி முக்கியமாக வலிமைக்கு அதிதேவதை. இது ஹேரம்ப உபனிஷத்தில் விளக்கப்படுகிறது.

வலிமை, ஐஸ்வர்யம், ஓம்காரம் மூன்றுக்கும் குறியீடாக விநாயகரை வழிபடுகிறோம்.

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Translate »