
சுபாஷிதம்! வசுதைவ குடும்பகம்!
சுபாஷிதம்… ஸ்பூர்த்தி பதம் – வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!
- வசுதைவ குடும்பகம்!
ஸ்லோகம்:
அயம் நிஜ: பரோ வேதி கணனா லகுசேதசாம் !
உதாரசரிதானாம் து வசுதைவ குடும்பகம் !!
பொருள்:
இவன் என்னுடையவன், அவன் பிறருடையவன் என்ற சிந்தனை சுயநலமுடையவனின் மன ஓட்டம். உதார குணம் உள்ளவனுக்கு உலகமெல்லாம் ஒரே குடும்பமாகத் தோற்றமளிக்கும்.
விளக்கம்:
குறுகிய கண்ணோட்டம் தீமை பயக்கும். சனாதன தர்மம் மட்டுமே அனைத்து ஜீவன்களின் நலனையும் கோருகிறது. ‘சர்வே பவந்து சுகின:’ என்று விரும்புகிறது. வழிபாட்டு முறைகளையும், சமூக, மொழி வேறுபாடுகளையும் பொருட்படுத்தாமல் அனைவரையும் அரவணைத்துக்
கொள்கிறது.
தன்-பிற வேற்றுமைகள் இன்றி உலகனைத்தும் ஒரே குடும்பமாக அமைதியோடும் நலமோடும் விளங்க வேண்டும் என்று இந்த ஸ்லோகம் எடுத்துரைக்கிறது.
உலகில் குறுகிய கண்ணோட்டம் பலவிதங்களில் வெளிப்படுகிறது.
குலம், மொழி, இடம் காரணமாகவோ, வழிபாடு, ஆன்மீக சாதனை போன்ற பெருமைகள் காரணமாகவோ சிலர் தம்மைச் சுற்றி ஒரு வட்டத்தை ஏற்பாடு செய்து கொள்வார்கள். அந்த வட்டத்திற்குள் வேறு யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். அதோடு பிறரை வெறுப்போடு நோக்குவார்கள். இந்த குறுகிய கண்ணோட்டத்தால்தான் உலகில் போராட்டங்கள் நடக்கின்றன.
‘நீ ஒரு சிறிய வட்டம் வரைந்து என்னை வெளியே தள்ளி விட்டாய். அதனால் நான் ஒரு பெரிய வட்டம் வரைந்து உன்னையும் என்னோடு சேர்த்துக் கொள்வேன்’ என்றான் ஒரு கவிஞன்.
சனாதன தர்மத்திலும் பாரத கலாச்சாரத்திலும் உள்ள தனித்தன்மை இது.
‘என் தெய்வம் மட்டுமே உண்மை!’ என்ற எண்ணமே உலகின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கிறது. ‘தெய்வம் ஒன்றே! அதுவே உண்மை!’ என்று கூறினால் அனைத்து வழிபாட்டு முறைகளும் அந்த ஒரே பரமாத்மாவின் அருகாமைக்கு நம்மைக் கொண்டு சேர்க்கும். இந்த கோட்பாடே அமைதிக்கு அடித்தளம். இது பாரத தேசத்தின் சிந்தனை.
இந்த விசாலமான எண்ணமே ‘லோகா சமஸ்தா சுகினோ பவந்து!’, யாதும் ஊரே யாவரும் கேளிர்!’ என்ற வாக்கியங்களின் மூலம் வெளிப்படுகிறது. பிரபஞ்ச அமைதிக்கு இதுவே மூலாதாரம்!
தெலுங்கில்: பிஎஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்