Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் நவராத்திரி ஸ்பெஷல்: லலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே! அது என்ன?

நவராத்திரி ஸ்பெஷல்: லலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே! அது என்ன?

lalithambal
lalithambal

நவராத்திரி ஸ்பெஷல் …ஆன்மீக கேள்வி பதில்!

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

கேள்வி: லலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே… மணித்வீபம் என்பது அம்பாளின் நிவாசமா?

பதில்: லோகம் என்பது புராணங்கள் அளிக்கும் அற்புதமான விஞ்ஞானம். தேவதைகளை வழிபடும் போது கபடம் இல்லாமல் கோரிக்கைகள் இல்லாமல் அன்போடு பக்தியோடு பூஜிப்பவர்கள் மரணமடைந்த பின் அந்தந்த தேவதையின் லோகத்தை அடைவார்கள். அம்பிகையின் பக்தர்கள் சென்று சேரும் லோகம் மணித்வீபம்.

மணித்வீபம் பிரம்மாண்டங்களுக்கு அப்பால் உள்ளது என்று வர்ணிக்கப்படுகிறது. அது 25 ஆவரணங்களைக் கொண்டது. இவை அம்பிகையின் முழுமையான விபூதிகள். அதாவது சொரூபங்கள், ஐஸ்வர்யம்… அனைத்தும் வியாபித்திருக்கும் திவ்யமான தாமம்.

இது ஸ்வயம்பிரகாசமான பரந்தாமம். அப்படிப்பட்ட திவ்ய தாமம் முழுமையையும் ஞானதிருஷ்டியால் பரிசீலித்தால், நம் சரீரத்தில் இருக்கும் மொத்தம் இருபத்தைந்து ஆவரணங்களில் வியாபித்துள்ள பரம சைதன்யத்தையே காட்டுகிறது என்பது விளங்கும்.

அதனால்  ஞானதிருஷ்டியால் பார்த்தால்இங்கே இருக்கும் ஆத்ம சைதன்யம். உபாசனை திருஷ்டியால் பார்த்தால் பிரம்மாண்டங்களுக்கு அப்பாலுள்ள மணித்வீபம். 

உபாசகர் கள்ளம் கபடமில்லாமல் கோரிக்கைகள் இல்லாமல் அசையாத பக்தி உள்ளவரானால், அப்படிப்பட்டவர் இந்த லோகத்திலேயே ஜகன்மாதாவின் அனுகிரகத்தால் சர்வ வியாபகமான பரஞ்சோதியாகிய பரமாத்மாவிடம் ஐக்கியம் பெற்று ஜீவன்முக்தர் ஆவார். அவ்வாறு ஆகாமலேயே மரணித்தால் அப்படிப்பட்டவர் மணித்வீபத்தைச் சென்றடைவார். அங்கே ஜகதாம்பாளின் அனுக்ரஹத்தால் திவ்யலோகானுபவம் பெற்ற பின் ஞானம் பெற்று மோட்சத்தை அடைவார் என்று தேவி பாகவதம் விவரிக்கிறது.

மணி என்றால் சுயம் பிரகாசம் என்று பொருள். ‘பிரகாசம், ப்ரசோதம்’ என்று இரண்டு இயல்புகள் கொண்டவற்றை மணி என்பார்கள்.அவ்விதம் அது சுயம்பிரகாச தத்துவம்.

ந தத் பாசயதே சூர்யோ ந சசாங்கோ ந பாவக: !யத்கத்வா ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம !!  – (15-6) என்று  கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில்கூறுகிறார்.

சூரியன் சந்திரன் அக்னி மூன்றின் ஒளியும் தேவையில்லாதது எதுவோ, சூரியன் சந்திரன் அக்னி இவற்றைக் கூட பிரகாசிக்கச் செய்வது எதுவோ அந்த பரந்தாமமே மணித்வீபம்.

ஞானதிருஷ்டியால் பார்த்தால் சமஸ்த ஜகத்தையும் பிரகாசிக்கச் செய்யும் ஆத்ம சைதன்யமே மணித்வீபம். இது ஞானரூப தாதாத்மியம். அது உபாசனா ரூப தாதாத்மியம். 

இந்த மணித்வீபம் பிரம்மாண்டங்களுக்கு அப்பால் உள்ள அம்பிகையின் நிவாசம்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version