ஏப்ரல் 23, 2021, 8:21 காலை வெள்ளிக்கிழமை
More

  பரங்குன்றில் வாழும் பனிமலைப் பிள்ளை!

  பனிமலையில் பிறந்த பரமனின் குமரனாம் முருகப் பெருமான் உவந்து வீற்றிருக்கும் பரங்குன்றத்தின் புகழ் வாழ்க! வளர்க!

  thirupparankundram murugan
  thirupparankundram murugan

  கட்டுரை: பத்மன்

  பக்தர்களையும் நல்லோர்களையும் காப்பாற்றுவதற்காக, சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த தினம், சூரசம்ஹார விழாவாகக் கொண்டாடப்படுகிறது. 6 நாள் கந்த சஷ்டிப் பெருவிழாவின் நிறைவு நாளன்று கொண்டாடப்படும் சூரசம்ஹாரத்துக்கு, தமிழகத்தின் திருச்செந்தூர் புகழ் பெற்றது.

  அதேவேளையில் மதுரையில் உள்ள திருப்பரங்குன்றமும் சூரசம்ஹாரத் தலமாகும். இந்தத் திருப்பரங்குன்றத்தில்தான் சூரபத்மனுக்கு முன்பாக அவனது சகோதரன் தாரகாசுரனை முருகப் பெருமான் சம்ஹாரம் செய்ததாகச் சில புராணங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தேவர்களின் தலைவனான இந்திரனின் மகளாக வர்ணிக்கப்படும் தேவசேனையை இந்தத் தலத்தில்தான் குமரப் பெருமான் திருமணம் புரிந்ததாகவும் ஸ்தல புராணமும் வேறு சில புராணங்களும் கூறுகின்றன. அதனால் தேவசேனாபதி என்றும் முருகன் பெயர் பெற்றான்.

  அதேவேளையில் முருகனுக்கு வள்ளி மட்டுமே இல்லக் கிழத்தி என்றும் தேவசேனைக்குத் தலைமை தாங்கியதால், தேவசேனைக்குத் தலைவன் என்றும் தேவர்களின் சேனாபதி என்றும் பொருள்படும் தேவசேனாபதி என ஸ்கந்தன் பெயர் பெற்றான் என்றும் சிலர் விளக்கம் கூறுவர்.

  முருகனுக்குத் தென்னாட்டில்தான் இரு மனைவிகள் அல்லது ஒரு மனைவி கொண்ட இல்லறத்தான் (சம்சாரி) கோலம். வடக்கிலோ அவன் குமார பிரமசாரி, திருமணம் ஆகாதவன். எப்படி?

  sasti-parayanam-in-thiruparankundram
  sasti-parayanam-in-thiruparankundram

  முருகனுடைய திருவிளையாடல்கள், அவதார அற்புதங்கள் தென்னகத்தில் நிகழ்ந்தாலும், அவனது தோற்றம் வடக்கில் உள்ள இமயமலையில்தான். இமயத்தில் தோன்றி, திருச்செந்தூரில் முக்கியக் கடமை முடித்த முருகப் பெருமானுக்கு இல்லறக் கடமை என்ற பந்தம் தெற்கில்தான் ஏற்பட்டது; அது வள்ளியாக இருந்தாலும் சரி, தேவசேனையாக இருந்தாலும் சரி. எனினும், அதற்கு முன்பு வடக்கிலே முருகன் பிரமசாரிதான். ஆகையால்தான் வடக்கிலே ஸ்கந்தன் பிரமசாரியாகவும், தெற்கிலே சுப்ரமணியன் இல்லறத்தானாகவும் இருக்கிறான்.
  உடனே சிலர், வடக்கிலே உள்ள ஸ்கந்தன் வேறு, தெற்கிலே உள்ள முருகன் வேறு என்று வர்ணமடிப்பார்கள். ஆனால், பழம்பெருமை வாய்ந்த பாரதத்துக்கு வடக்கு, தெற்கு என்ற பேதம் இல்லை. தென்னாடுடைய சிவனே போற்றி என்று போற்றப்படும் சிவபெருமான் வடக்கிலே கயிலைமலையில்தான் உறைகிறார். அங்கே சிவனது நெற்றிக்கண்ணில் தோன்றிய முருகப் பெருமான் தென்னாட்டுக்கு இடம் பெயர்ந்து குடிகொண்டுள்ளார்.

  thirupparankundram-murugan-temple
  thirupparankundram-murugan-temple

  இதனை நான் சொல்லவில்லை சங்க இலக்கியமான பரிபாடல் சொல்கிறது.

  முருகப் பெருமானுக்கு திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, குன்றுதோறாடல் (பழமுதிர்ச்சோலை) மற்றும் திருத்தணி என்று ஆறு முக்கிய படைவீடுகள் உள்ளன. இவற்றுக்கு பக்தர்களை வழிபடுத்துவதற்காக சங்கத் தமிழ்ப் புலவர் நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப் படையில் திருப்பரங்குன்றம்தான் முதல் படை வீடாகப் போற்றப்படுகிறது. இந்தத் திருமுருகாற்றுப் படைக்கும் முந்தையது எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான பரிபாடல்.

  செவ்வேள், திருமால், மதுரை, வையை (வைகை நதி) ஆகிய நான்கு பாடுபொருள்களைக் கொண்டு, பல புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பே பரிபாடல். செவ்வேளாம் முருகப் பெருமானப் போற்றும் பல பாடல்களைக் கொண்ட இந்தப் பரிபாடலின் எட்டாம் பாடல், ஆசிரியன் நல்லுந்தவனார் என்ற புலவரால் இயற்றப்பட்டது. அந்தப் பாடலில்தான், முருகப் பெருமான் உறைகின்ற திருப்பரங்குன்றத்தின் பெருமை உரைக்கப்பட்டுள்ளது.

  “மண்மிசை அவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப்
  புள்மிசைக் கொடியோனும், புங்கவம் ஊர்வோனும்,
  மலர்மிசை முதல்வனும், மற்று அவனிடைத் தோன்றி
  உலகு இருள் அகற்றிய பதின்மரும், இருவரும்,
  மருந்து உரை இருவரும், திருந்து நூல் எண்மரும்,
  ஆதிரை முதல்வனின் கிளந்த
  நாதர் பன்னொருவரும், நன் திசை காப்போரும்,
  யாவரும், பிறரும், அமரரும், அவுணரும்,
  மேஅரு முதுமொழி விழுத் தவ முதல்வரும்
  பற்றாகின்று, நின் காரணமாக;
  பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்.
  இமயக் குன்றினில் சிறந்து
  நின் ஈன்ற நிரை இதழ்த் தாமரை
  மின் ஈன்ற விளங்கு இணர் ஊழா
  ஒருநிலைப் பொய்கையோடு ஒக்கும் நின் குன்றின்
  அருவி தாழ் மாலைச் சுனை.”
  என்கின்றன இந்தப் பாடலின் முதல் 16 வரிகள்.

  இதன் பொருள்: உயிரினங்களுக்கு வழங்கத்தக்க செல்வ வளத்தைக் கொண்டவனும் கருடப் பறவையைக் கொடியாகக் கொண்டவனுமான திருமாலும், எருதை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமானும், தாமரை மலரில் இருந்து தோன்றிய உலகின் முதல்வனாகிய பிருமனும், அவனிடமிருந்து தோன்றிய பனிரெண்டு ஆதித்தர்களும், தேவ மருத்துவர்களாகிய அசுவினி தேவர்கள் இருவரும், திருத்தமான மெய் நூல்களை உணர்ந்த வசுக்கள் எட்டு பேரும், ஆதிரை முதல்வன் எனப்படும் சிவபெருமானின் அம்சமாகத் தோன்றிய தலைவர்கள் என்று போற்றப்படும் பதினோரு ருத்திரர்களும், திசைகளைக் காக்கும் அஷ்ட திக்பாலர்களான எட்டுப் பேரும், அமரர்களும் (தேவர்கள்), அவுணர்களுமான (அசுரர்கள்) ஏனையவர்களும், மிகச் சிறந்த வேதத்தை உணர்ந்த ஒழுக்கம் நிறைந்த தவசீலர்களான முனிவர்களும், உயிர்களின் முதல்வனாகிய முருகப் பெருமானே! உன்னைக் காணும் பொருட்டாகவே மண்ணில் உள்ள இந்த இடத்தில் வந்து தங்கியிருப்பதால், உன்னுடைய பரங்குன்றம் நீ பிறந்த இமயமலைக்கு ஒப்பானது.

  thiruparankundram-vel-function1
  thiruparankundram-vel-function1

  அத்துடன் திருப்பரங்குன்றத்திலே அருவி நீர் தேங்கி நிற்கின்ற சுனையானது, உன்னை ஈனுவதற்கு இடமளித்த பெரிய இதழ்களைக் கொண்ட சிறந்த தாமரை மலர்களைக் கொண்ட வற்றாத அருவி நீரைத் தாங்குகின்ற மிகச் சிறந்த இமய மலைச் சுனைக்குச் சமமானதாகும் என்கிறார் நல்லந்துவனார்.
  மேலும் திருப்பரங்குன்றத்தில் முருகப் பெருமான், பக்தர்களுக்கு எவ்வித வரங்களை அளிக்க வல்லவன் என்பதை இப்பாடலின் 103 தொடங்கி 108 வரையுள்ள வரிகள் தெரிவிக்கின்றன.

  ‘கனவின் தொட்டது கை பிழையாகாது
  நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை
  வரு புனல் அண்க’ என வரம் கொள்வோரும்.
  ‘கரு வயிறு உறுக’ எனக் கடம்படுவோரும்,
  ‘செய் பொருள் வாய்க்க’ எனச் செவி சார்த்துவோரும்,
  ‘ஐ அமர் அடுக’ என அருச்சிப்போரும்…

  இதன் பொருள்: கனவிலே எனது கைத்தலத்தைக் காதலர் பற்றுவதுபோல் அதாவது எனக்கு அவருடன் திருமணம் ஆனதுபோல் கனவு கண்டேன், அது நனவாகும் வகையில், முருகா, உனது வைகை நதியில் புதுப்புனல் பாயட்டும் என்று வேண்டிக் கொள்வார்களாம் இளம் பெண்கள். திருமணமான பெண்களோ, எனது வயிற்றிலே உனது திருவருளால் கரு உருவாகட்டும், உனக்கு எனது நன்றிக் கடனாக இன்னது செய்கிறேன் என்று வேண்டிக் கொள்வார்களாம். பொருட்செல்வம் தேடுவதற்காகச் சென்ற எனது கணவர் வேண்டிய பொருளோடு வர வேண்டும் என்று முருகப் பெருமானின் செவிகளில் ஓதி வேண்டிக் கொள்வார்களாம் இல்லத்தரசிகள். போருக்குச் சென்றுள்ள எனது தலைவன் வெற்றியோடு திரும்ப வேண்டும் என்று வேண்டி வேறு சிலர் அர்ச்சனை செய்வார்களாம். மானுட வாழ்வின் மகத்தான நிலைகளான திருமணம் ஆகுதல், மகப்பேறு ஈனுதல், செல்வம் சேர்த்தல், வெற்றி பெறுதல் ஆகியவற்றுக்கு முருகப் பெருமானின் அருள் அவசியம் என்பதை இப்பாடல் வரிகள் பகர்கின்றன.

  இந்தப் பாடலின் முத்தாய்ப்பு வரிகள் மிகச் சிறப்பானவை:
  உடம் புணர் காதலரும் அல்லாரும் கூடி,
  கடம்பு அமர் செல்வன் கடி நகர் பேண
  மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த
  நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம்,
  மண் பரிய வானம் வறப்பினும், மன்னுகமா,
  தண் பரங்குன்றம்! நினக்கு.

  குளிர்ச்சியுடைய திருப்பரங்குன்றமே! நஞ்சாகிய கறையைத் தன் கழுத்தில் தேக்கிய அண்ணலாம் சிவபெருமானுக்கு குற்றமில்லாத உமாதேவியிடம் தோன்றியவனும், கடம்ப மரத்தின் நிழலில் ஆவலுடன் அமரக்கூடியவனுமான முருகப் பெருமானின் கட்டுக்காவல் கொண்ட திருக்கோவிலைக் கொண்டுள்ள நீ, கருத்தொருமித்த காதலரும், இதர பிறரும் வேண்டுதலுக்காக வந்து வழிபடுகின்ற பெருமையைப் பெற்றிருப்பதால், மண்ணுலகில் வாழுகின்ற உயிர்கள் வருந்தும்படியாக மழை நீர் பெய்யாமல் உலகமே வறண்டு போனாலும்கூட, உன்னிடத்திலே இடைவிடாது ஒழுகும் அருவி நீரைப் போன்ற செல்வம் குறைவுபடாமல் என்றென்றும் தங்குவதாகுக! என்ற வாழ்த்துடன் இப்பரிபாடல் நிறைவு பெறுகிறது.

  குன்றா இளமைக் குமரன் வீற்றிருக்கும் திருப்பரங்குன்றம், வந்து வணங்குகின்ற பக்தர்களுக்கு வற்றாத செல்வத்தை வாரி வழங்கும் சிறப்பைக் கொண்டுள்ளது. பனிமலையில் பிறந்த பரமனின் குமரனாம் முருகப் பெருமான் உவந்து வீற்றிருக்கும் பரங்குன்றத்தின் புகழ் வாழ்க! வளர்க!

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,233FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-