May 14, 2021, 3:35 am Friday
More

  மார்கழிச் சிறப்பு! திருப்பாவை – ஓர் அறிமுகம்!

  நப்பின்னைப் பிராட்டியின் ஒளிபொருந்திய திருமார்பில் கண்ணுறங்கும் கண்ணபிரானைத் துயில் எழுப்பி, பரமாத்மாவான

  andal-vaibhavam
  andal-vaibhavam

  திருப்பாவை தொடர்: விளக்கம் – வேதா டி.ஸ்ரீதரன்

  திருப்பாவை – தனியன்கள்
  பராசர பட்டர் அருளிச் செய்தது

  நீளாதுங்க ஸ்தநகிரி தடீஸுப்த முத்போத்ய க்ருஷ்ணம்
  பாரார்த்த்யம் ஸ்வம் ச்ருதிசதசிரஸ்ஸித்த(ம்) அத்யாபயந்தீ
  ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்யபுங்க்தே
  கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்துபூய:

  பொருள்

  நப்பின்னைப் பிராட்டியின் ஒளிபொருந்திய திருமார்பில் கண்ணுறங்கும் கண்ணபிரானைத் துயில் எழுப்பி, பரமாத்மாவான அவனுக்குத் தொண்டு செய்வதில் தனக்கு உள்ள விருப்பத்தை (தனது பாமாலைகளின் மூலம்) அவனிடம் விண்ணப்பித்து, தான் சூடிக்களைந்த பூமாலையால் அவனைத் தளைப்படுத்தி, (தனது பாமாலை, பூமாலைகளால்) அவனை பலவந்தமாக அடிமைப்படுத்தி, வேதங்களின் சிகரமான உபநிஷத்துகள் கூறுவதுபோல, அவனுக்கு அடிமைத்தொழில் செய்து பரமானந்தத்தை அனுபவித்துவரும் கோதை ஆண்டாளை மீண்டும் மீண்டும் நமஸ்கரிக்கிறேன்.

  அருஞ்சொற்பொருள்

  நீளாதுங்க – நப்பின்னைப் பிராட்டி

  ஸ்தனகிரி தடீ – மலைபோல் உயர்ந்த மார்பில் சாய்ந்து

  ஸுப்தம் க்ருஷ்ணம் – உறங்கும் கிருஷ்ணனை

  உத்போத்ய – திருப்பள்ளி எழச்செய்து (துயிலெழுப்பி)

  ஸ்வம் பாரார்த்த்யம் – தன்னுடைய அடிமைத்தொழிலை அறிவித்து (உனக்கே ஏவல் பூண்டவள் நான் என்று அவனிடம் விண்ணப்பித்து)

  ச்ருதிசதசிர: ஸித்தம் – நூற்றுக்கணக்கான (ஏராளமான) வேத மந்திரங்களின் சிரஸாக (வேதாந்தமாக) விளங்கும் உபநிஷத்துகளின் தாத்பரியம்

  அத்யாபயந்தீ – விண்ணப்பம் செய்து

  ஸ்வ உச்சிஷ்டாயாம் ஸ்ரஜி – தன்னால் சூடிக் களையப்பட்ட மாலை

  நிகளிதம் – விலங்கிடப்பட்டவன்

  பலாத்க்ருத்ய – பலத்தை உபயோகித்து

  புங்க்தே – அனுபவிக்கிறாள்

  யா கோதா – எந்த கோதையானவள்

  தஸ்யை இதம் இதம் நம: அஸ்து – உனக்கு இந்த இந்த நமஸ்காரம் உரித்தாகட்டும் (உன்னை மீண்டும் மீண்டும் நமஸ்கரிக்கிறேன்.)

  பூயஏவ பூய (பூய பூய ஏவ) அஸ்து – கால தத்துவம் இருக்கும் வரையிலும் (ஸதா ஸர்வ காலமும்)

  கோதை என்பது மாலையைக் குறிக்கும் தமிழ்ச்சொல். பகவானுக்குப் பாமாலையோடு பூமாலையும் சூடிக்கொடுத்த ஆண்டாளின் இயற்பெயரும் அதுவே.

  நீளாதேவியின் அம்சமாகப் பிறந்தவள் நப்பின்னைப் பிராட்டி. கிருஷ்ணன் என்றால் கரிய நிறத்தை உடையவன் என்று பொருள். ஜீவர்களின் ஆனந்தத்துக்கு விளைநிலமாக இருப்பவன் என்றும் பொருள் கொள்ளலாம்.

  aandal 2
  aandal 2

  ஆன்மிகம், தத்துவம்

  தினசரி அதிகாலையில் திருப்பாவை சொல்ல வேண்டும். இயலாத பட்சத்தில் சிற்றஞ்சிறுகாலே பாசுரத்தை மட்டுமாவது சொல்ல வேண்டும். அதுவும் இயலாவிடின், திருப்பாவையை ஓதியவாறு கோதையின் தாள்களில் வீழ்ந்து கிடந்த பராசர பட்டரின் பக்தியை நினைந்து போற்ற வேண்டும். பட்டரின் பக்தியைப் போற்றுவதன் மூலம் திருப்பாவை ஓதுவதன் முழுப்பலனையும் நாம் அடையலாம்.

  ***

  பகவானின் உறக்கம் என்பது மாயை. அவன் கள்ளன். அவனது உறக்கம் என்பதே பெரும் லீலைதான். அவனது அத்தனை மாயைக்கு நடுவிலும் ஆண்டாள் அவனைக் கண்டுகொண்டாள். தனது பாமாலையாலும் பூமாலையாலும் அவனுக்கு விலங்கிட்டாள். அதாவது, பகவானைத் தனக்கு அடிமையாக்கினாள். எதற்காக? அவனுக்கு அடிமைத் தொழில் செய்வதற்காக. இதுதான் வேதங்களின் சிகரமாக விளங்கும் உபநிஷத்துகளின் சாராம்சம். அதாவது, பகவானுக்குத் தொண்டு புரிவதே ஜீவனின் லக்ஷியம்.

  ***

  பூமாலையின் அழகு, மென்மை, பாமாலையின் இனிமை, கருத்தாழம் ஆகியவற்றால் மனித மனங்கள் மயங்கலாம். ஆனால், இந்த மாயாவிக்கு ஏது மனம்? அவனை எப்படி இவற்றால் மயக்க முடியும்? பலாத் க்ருத்ய என்ற வார்த்தையின் மூலம் இதை விளக்குகிறார் பட்டர். ஆண்டாள், பெருமாளைப் பலவந்தப்படுத்தித் தனக்கு அடிமையாக ஆக்கினாளாம். அவனோ பரமபுருஷன். புருஷன் என்ற சொல்லே அவனைத்தான் குறிக்கும். இவளோ நேரிழையாள். அவனோ வன்மை மிக்கவன். ஆயிரந்தோளுடையான். இவளோ மென்மையிலும் மென்மையானவள். பின்னர் எப்படி ஆண்டாளால் பெருமாளை பலவந்தமாக அடிமைப்படுத்த முடிந்தது? அதுதான் பக்தியின் சக்தி. பகவானின் அனைத்து ஆற்றல்களையும் – குறிப்பாக, அவனது மாயையை – செயலிழக்கச் செய்யும் ஆற்றல் படைத்தது பக்தி என்பதே இதன் உட்கருத்து.

  ***

  வைணவ சம்பிரதாயத்தில் ஆண்டாளையும் மதுரகவியையும் ஆழ்வார்களாகக் கொள்வதில்லை. ஆழ்வார்கள் பதின்மர் (பத்துப் பேர்) என்பதே வைணவ வழக்கு. மதுரகவிகளை நம்மாழ்வார் வைபவத்திலும், ஆண்டாளைப் பெரியாழ்வார் வைபவத்திலும் அடக்கிக் கூறுவதே இதற்குக் காரணமாகும்.

  உய்யக் கொண்டார் அருளிச் செய்தவை

  அன்ன வயற்புதுவை யாண்டாள் அரங்கற்குப்
  பன்னு திருப்பாவைப் பல்பதியம் – இன்னிசையால்
  பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை பூமாலை
  சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.

  சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவை
  பாடி யருளவல்ல பல்வளையாய் – நாடிநீ
  வேங்கடவற் கென்னை விதி என்ற இம்மாற்றம்
  நாம்கடவா வண்ணமே நல்கு.

  பொருள்

  அன்னங்கள் உலாவும் வயல்களால் சூழப்பட்ட வில்லிபுத்தூரில் அவதரித்தவள்; பகவானின் கீர்த்தியைப் பாடும் பல பாடல்கள் அடங்கிய திருப்பாவையை இன்னிசையுடன் பாடி அரங்கனுக்கு அளித்தவள்; அந்தத் தூய பாமாலையுடன், தான் சூடிக்களைந்த பூமாலையை அவனுக்குச் சூட்டியவள். இத்தகைய பெருமை கொண்ட சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளை வாழ்த்துவோம்!

  சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே! புராதனமான பாவை நோன்பைத் திருப்பாவை வாயிலாகப் பாடியவளே! எமக்கு அருள்புரியும் ஆற்றல் படைத்தவளே! வளைக்கரம் உடையாளே! ‘பகவானுக்கே என்னை விதிக்க வேண்டும்’ என்ற (என்று மன்மதனிடம் முறையிட்ட) உன்னுடைய (பரமாத்மனுக்கு அடிமை பூணும்) வழிமுறையை நாங்கள் வாழ்நாள் முழுவதும் கைக்கொள்ளுமாறு எங்களுக்கு அனுக்கிரகம் செய்வாயாக!

  அருஞ்சொற்பொருள்

  பன்னுதல் – ஆராய்ந்து பார்த்தல், புகழ்தல்

  பல்வளையாய் – ஏராளமான வளைகள் அணிந்த கரங்களை உடையவளே

  இம்மாற்றம் – இத்தகைய (உன்னுடைய) வழிமுறையை, பாதையை

  நாம் கடவா வண்ணம் – நாங்கள் மீறாமல் இருக்குமாறு

  நல்கு – அனுக்கிரகம் புரிவாய்

  andal rangamannar
  andal rangamannar

  ஆண்டாள், ரங்கமன்னார்

  பகவானையே ஆண்டவள் என்பதால் ‘ஆண்டாள்’ என்றே அழைக்கப்பட்டாலும், அவளது இயற்பெயர் கோதை என்பதே. வட பாரதத்தில் கோதா என்று இதை உச்சரிக்கின்றனர். நாச்சியார் என்ற திருப் பெயரையே வைணவப் பெரியோர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று அவளை வாழ்த்துவது மரபு. அவள் ஸ்ரீரங்கத்தில் அரங்கனுடன் ஐக்கியமானவள். அவனோ பூலோக ராஜா. எனவே, ஆண்டாள் அவதாரத் தலமாகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் அவனை ரங்கமன்னார் (ரங்க மன்னன்) என்ற பெயரில் வழிபடுகிறோம்.

  ஆன்மிகம், தத்துவம்

  பாரதந்திரியம் என்றால் சுய இச்சையைப் புறக்கணிப்பது, (ஸ்வ-தந்திரம் என்பதற்கு எதிர்ச்சொல் இது.) அதாவது, சுய இச்சை இல்லாதவர்களாய் பகவானுக்கும் அடியாருக்கும் அடங்கி நடப்பது. பகவானுக்குப் பாரதந்திரியமாக இருப்பதே ஜீவனின் இயல்பு நிலை. இத்தகைய நிலையை விரும்பி அடைந்தவள் ஆண்டாள். அவளது பக்தி நம்மை உய்விக்கட்டும். வேங்கடவர்க்கு என்னை விதி – ‘நான் பெருமாளுக்கு மட்டுமே உரித்தானவள். என்னை அவனிடம் கொண்டுசேர்ப்பாயாக’ என்று மன்மதனிடம் ஆண்டாள் வேண்டுகிறாள் (நாச்சியார் திருமொழி). அதே வழிமுறையை நாமும் கடைப்பிடித்து அவனுக்கு அடிமை பூண்டு வாழ்வதற்கு அவளது அனுக்கிரகம் கிடைக்கட்டும்.

  aandal
  aandal

  திருப்பாவைஓர் அறிமுகம்

  கோபிகைகள் அப்பழுக்கு இல்லாத தூய அன்பு கொண்டவர்கள். வேதம் கூறும் இறுதிப் பொருளான பரமாத்மனே மனித வடிவில் தங்கள் மத்தியில் ஸ்ரீகிருஷ்ணனாகப் பிறப்பெடுத்து வந்திருக்கிறான் என்பதைத் தங்கள் அன்பின் வாயிலாக அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

  கோபிகைகள் அவனைக் குழந்தைக் கண்ணனாகப் பார்த்து அவனது குறும்புகளில் மனதைப் பறிகொடுத்தார்கள். அவனது லீலைகளில் மனம் லயித்தார்கள். அவனது வடிவழகில் மயங்கினார்கள். அவனிடம் காம வசப்பட்டார்கள். எந்தப் பரமாத்மனுக்கு அடிமையாகித் தொண்டு புரிவதுதான் ஜீவனின் இலக்கோ, அந்தப் பரமாத்மனே இந்தப் பெண்களின் அன்புக்கு அடிமையாக இருந்தான். அதேநேரத்தில், தனது மாயாவித்தனத்தால் அவர்களுக்குக் கட்டுப்படாதவன் போலவும் காட்டிக் கொண்டான். அவர்களை விட்டுப் பிரிந்ததாக அவன் போட்ட வேஷங்கள் கோபிகைகளைத் துன்புறுத்தின.

  கோபிகைகளோ சாஸ்திர அறிவு இல்லாதவர்கள். என்ன செய்தால் அவன் தங்களுக்கு வசப்படுவான் என்று சிந்தித்த அவர்கள், மார்கழி மாதத்தில் காத்யாயினியை வேண்டி விரதம் இருக்கிறார்கள். ”அம்மா, ஸ்ரீகிருஷ்ணனை எங்களுடன் இணைத்து வை” என்று வேண்டுகிறார்கள். இந்த நோன்புக்காக அவர்கள் காலிந்தி நதியில் நீராடியதையும், அம்பாளின் பிரதிமையை (பாவை) வழிபட்டதையும் பாகவதம் வாயிலாக அறிய முடிகிறது.

  ஆண்டாளும் கோபிகைகளைப் போலவே கண்ணனையே நினைந்து அவனையே மணாளனாக அடைந்தவள். தன்னையும்  ஒரு கோபிகா ஸ்திரீயாகவே பாவித்த ஆண்டாளும் இதுபோன்ற ஒரு நோன்பை மேற்கொள்கிறாள். இந்த நோன்பை அவள் ‘பாவை’ என்று அழைக்கிறாள். இந்த நோன்புக்காக அவள் மேற்கொண்ட நியமங்கள், நீராட்டத்துக்காக சக கோபிகைகளைத் துயிலெழுப்புவது, கண்ணனைத் துயிலெழுப்புவது, அவனிடம் வரம் கேட்பது முதலிய அம்சங்களை அவள் தனக்கே உரிய பாணியில் விவரிக்கிறாள்.

  இதுதான் திருப்பாவை.

  திருப்பாவை: நூல் அமைப்பு

  திருப்பாவையில் ஆண்டாள் பாவை என்கிற நோன்பை அறிமுகப்படுத்துகிறாள். இந்த நோன்பில் மார்கழி அதிகாலையில் நீர்நிலைகளில் நீராடுவதும், நாம சங்கீர்த்தனமும் முக்கிய அம்சங்கள். அடுத்ததாக, பாவைக்கான விரத நியமங்களை விவரிக்கிறாள். இந்த விரதத்தினால் மழை பெய்யும், நாடு செழிக்கும் என்று கூறுகிறாள். மேலும், நாம் இதுவரை செய்த பாவங்களும், இனிமேல் செய்யப் போகிற பாவங்களும் அனலில் இட்ட தூசு போல மறையும் என்றும் வாக்குத் தருகிறாள்.

  பின்னர், பாவை நோன்பு மேற்கொண்டிருக்கும் தோழிகள் சிலர் இணைந்து, உறக்கத்தில் இருக்கும் தோழிகளை எழுப்பி, நீராட அழைக்கிறார்கள். இதையடுத்து, அரண்மனைக்குச் சென்று கண்ணனைத் துயிலெழுப்பி அவனிடம் வரம் கேட்கிறார்கள்.

  இறுதியாக, திருப்பாவையைப் பாராயணம் செய்பவர்களுக்கு இக-பர நன்மைகள் அனைத்தும் கிடைக்கும் என்று நமக்கு ஆண்டாள் வரம் தருவதுடன் திருப்பாவை நிறைவு பெறுகிறது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,242FansLike
  0FollowersFollow
  19FollowersFollow
  74FollowersFollow
  1,185FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »