ஏப்ரல் 21, 2021, 5:37 மணி புதன்கிழமை
More

  ஆன்மீக கேள்வி பதில்: வைகுண்ட ஏகாதசியின் வைபவம்!

  தியானித்து இந்த நாளை நல்ல விதமாக கழித்து, யோகத்தை அருளும்படி நாராயணனை பிரார்த்திப்போமாக!

  srirangam-paramapathavasal-open
  srirangam-paramapathavasal-open

  தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா 
  தமிழில்:  ராஜி ரகுநாதன்

  கேள்வி: வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பதன் பொருள் என்ன?

  பதில்: பவித்திரமான தனுர் மாதத்தில் வரும் தெய்வீகமான ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்றும் முக்கோடி ஏகாதசி என்றும் அழைக்கிறோம். பவித்திரமான ஏகாதசி பர்வம் ஒவ்வொரு மாதமும் வந்தாலும் சிலச்சில மாதங்களில் ஏகாதசிக்கு மிகச் சிறப்பு உள்ளது.

  பிரத்தியேகமாக இன்றைய விசேஷம் என்னவென்றால் வைகுண்டத்தின் வடக்குப்புற துவாரம்  திறக்கப்படும். ஒவ்வொரு வைணவ ஆலயத்திலும் வடக்குப் பக்கம் கதவு  இருக்கும். அதனை இன்று திறப்பார்கள். திருமலை வெங்கடேஸ்வரர் முதல் ஒவ்வொரு விஷ்ணு ஆலயத்திலும் தென்னிந்தியாவில் சொர்க்க வாசல் திறப்பது என்பது புகழ்பெற்ற அம்சமாக விளங்குகிறது.

  உத்தர துவாரம் அல்லது வைகுண்ட  துவாரம் அல்லது சொர்க்கவாசல் என்று இதற்குப் பெயர். ஜெயன் விஜயன் என்னும் இருவரும் வைகுண்ட துவாரத்திற்கு காவலாக இருப்பார்கள். புராணங்களில் கூட ஜெய, விஜயர்கள் காவலாக இருந்த வடக்கு பக்கம் வழியாக சென்ற சனக, சனந்தன  முனிவர்களை ஜயனும் விஜயனும் தடுத்து நிறுத்தியதாகவும் முனிவர்கள் அந்த துவார பாலகர்களை சபித்ததாகவும் காணப்படுகிறது.

  வைகுண்டத்திற்கு நான்கு புறங்களிலும் துவாரம் உண்டு. ஆனால் உத்தர(வடக்கு)  துவாரம் குறித்து மட்டும் ஏன் சிறப்பாகக் கூறப்படுகிறது?

  நம் புராணக் கதைகளுக்கும் பண்டிகைகளுக்கும் ஜோதிட சாஸ்திரத்திற்கும் பூகோள  மாற்றங்களுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளது. இறுதியில் அனைத்தும் யோக சாஸ்திரத்தோடும் விஸ்வ  ரகசியங்களோடும் ஒத்திசைவோடு இணைக்கப்பட்டிருக்கும். அதனால் இந்துக்களின் புராண கதைகள் ஒவ்வொன்றிலும் பல விஷயங்கள் மறைந்து இருக்கும் என்பதை உணரவேண்டும்.

  namperumal-mohini1-morning
  namperumal-mohini1-morning

  சாமானியர்களுக்கு கதை மட்டுமே முக்கியமாக காணப்படும். அதன் மூலம் அவர்கள் உற்சாகம் கொள்வார்கள். சில விஷயங்கள்  அந்தர்முகப் பார்வை உள்ளவர்களுக்கும் ஞானம் மீது விருப்பம் உள்ளவர்களுக்கும் ஆர்வம் ஏற்படுத்தும்.மொத்தத்தில் புராணக்கதைகள் பலரையும் உய்விக்கும்  ஞான  நிதிச் செல்வமாக உள்ளது என்பதை உணரலாம்.

  அவ்விதமாக இப்போது வைகுண்ட ஏகாதசியை ஆராயும் போது… வடக்கு வாசல் திறப்பது என்பது எதைக் குறிக்கிறது? 

  இனி வரப்போவது உத்தராயணம். மகர சங்கிரமணத்திலிருந்து உத்தராயணம் தொடங்குகிறது. அதற்கு முன்பாக வருவது தனுர் மாதம். அதனால் இது பகல் பொழுதுக்கு முன் வரும் பிரம்ம முகூர்த்தம்  போன்றது.  விடியற்காலையில் செய்யும் ஆன்மீக சாதனைக்கு எத்தனை முக்கியத்துவம் உள்ளதோ ஆண்டு முழுவதற்கும் தனுர் மாதத்திற்கு அத்தனை முக்கியத்துவம் உள்ளது. 

  இந்த மாதத்தில் வரும் ஏகாதசி விரதத்தை சரியாக கடைபிடிக்க முடிந்தால்  சர்வ பாப நாசனம் கிடைக்கிறது. வைகுண்ட ஏகாதசி விரதம் பாபநாசத்திற்கும் விஷ்ணு பக்தி ஏற்படுவதற்கும் ஞானத்தேடலுக்கும் உதவிபுரிகிறது.

  வைகுண்ட ஏகாதசிக்கு உள்ள பிரத்யேக சிறப்பு என்னவென்றால்… உத்தர துவாரம் திறப்பது எனக் கூறப்படும் சொர்க்கவாசல் திறப்பது. மேலும் இப்போதிலிருந்து சூரிய சக்தியில் கூட மாற்றம் ஏற்படுகிறது. உத்தராயணம் வந்ததிலிருந்து சூரியசக்தியில் சிறப்பு காணப்படும். உத்தராயணம் தனுர் மாதத்தில் இருந்தே தொடங்கி விடுகிறது எனலாம். சிலர் இதனை உத்தராயணமாகவே கணக்கிடுவதும் காணப்படுகிறது.

  இத்தகைய பரம பவித்ரமான சமயத்தில் வைகுண்ட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது உண்மையாகவே சொர்க்கவாசல் திறப்பதற்கு சமமானது.

  உத்தரம் என்றால் வடக்கு. திசைகளில் மேலானது வடக்கு. அது மட்டுமல்ல மிகச் சிறப்பானது என்று ‘உத்தரா’ என்ற சொல்லுக்குப் பொருள் உண்டு. பிரதானமாக   உன்னதமான நிலையை உத்தரம் என்பார்கள்.’உத்’ என்றால் உத்கிருஷ்டம், மிகச் சிறந்தது என்று பொருள். ‘தரா’ என்பது ஒப்பிட்டுக் கூறும் சொல். அனைத்தையும் விட எது  உயர்வானதோ அதனை உத்தரா என்பார்கள். உத்தர துவாரமான  சொர்க்க வாசல் திறந்தாலொழிய பகவான் தரிசனம் கிடைக்காது.

  இப்போது ஞான பரமாகவும் யோக பரமாகவும்  இணைத்துப் பார்ப்போம். 

  ranganathar-muthukuri
  ranganathar-muthukuri

  வடக்கு வாசல் என்பது ஞான வாசல். வடக்கு திசை ஞானத்தின் திசை. கிழக்கு திசை ஐஸ்வர்ய திசை. ஆன்மீக சாதனைக்கு இந்த இரண்டு  திசைகளையே முக்கியமானவையாக கூறுவர். தக்ஷிணாமூர்த்தி வடிவத்தில் உள்ள சிவன் வடக்கு திசையில் அமர்ந்து இருப்பார். தெற்கு திசையை நோக்கி இருப்பார். சிவனை தரிசிக்கும் பக்தர்கள் வடக்கு திசையை பார்ப்பார்கள். அதனால் உத்திர திசை ஞான திசை. வடக்கு துவாரம் திறப்பது என்றால் ஞான கதவுகளைத் திறப்பது என்று பொருள். ஞானம் திறந்தால் பகவத் தரிசனம் கிட்டும். இதுதான் உண்மையான பொருள்.
  நம் உள்ளத்தில் ஞானக் கதவு திறக்க வேண்டும். உள்ளே இருக்கும் வைகுண்ட நாதன் தரிசனம் அளிப்பான். 

  வைகுண்ட துவாரம் என்றால் ஞானதுவாரம். அதன் வழியாகவே விஷ்ணுவை தரிசிப்பதற்கு சென்றார்கள் சனக, சனந்தன முனிவர்கள். ஞானம் பக்தி என்ற இரு மார்க்கங்களிலும் விஷ்ணுவை அடைய விரும்பினார்கள். ஆனால் அந்த வழியில் தடைகள் ஏற்பட்டன.

  அவை ஜெயன் விஜயன் என்ற துவாரபாலகர்கள். பாகவதத்தில்  அங்கு ஒரு சொல் வருகிறது.  ஞான துவாரம் வழியே செல்லும்போது ரஜோ குணமும் தமோ குணமும்  தடை செய்தனவாம். உடனே சனக, சனந்தனர் சாபம் அளித்து, பகவான் தரிசனத்தை தடுப்பவர்கள் வைகுண்டத்தில் இருக்கக்கூடாது. ரஜோகுண தமோ குண விகாரங்கள் நீங்குவதற்கு மூன்று பிறவிகள் பூலோகத்தில்  எடுக்கும்படி சபித்தனர். அதனால் அவர்கள் பூமியில் வந்து விழுந்தனர்.

  ரஜோகுணம் தமோகுணம் இருப்பவர்கள் பூமியில் இருக்க வேண்டியவர்களே.  விஷ்ணுவின் கருணையால் மூன்று பிறவிகள் எடுத்து அவர்கள் மீண்டும் வைகுண்டம் சென்று சேர்ந்தார்கள்.  விஷ்ணுவோடு யுத்தம் செய்து ரஜோ, தமோ குணங்களைப் போக்கிக் கொண்டு மீண்டும் தூய்மை அடைந்து வைகுண்டத்தை அடைந்தார்கள்.

  இதிலிருந்து அறிவது என்ன? ரஜோ குண, தமோ குணம் உள்ளவர்கள் வைகுண்ட துவாரம் வழியே நாராயணனை தரிசிக்க இயலாது. அதோடு அவர்கள் ஞானத்தையும் தடை செய்வார்கள். அதை நீக்கினால்தான் பகவானின் தரிசனம் கிடைக்கும். ரஜோ, தமோ குணங்களற்ற சுத்த சத்துவம் நிறைந்தவர்கள் சனகர் சனந்தனர்கள்.  அதனால்தான் இங்கே மூன்று கதாபாத்திரங்களை காண்பிக்கிறார்கள். 

  யாரிடம் சுத்தமான சத்துவகுணம் உள்ளதோ அப்படிப்பட்டவர் மட்டுமே ஞான துவாரம் எனப்படும் சொர்க்க வாசலைத்  திறந்து உள்ளே இருக்கும் கடவுளை தரிசிக்க முடியும். இது ஞான பரமான அர்த்தம்.  இந்தக் கருத்தை இன்று சிறப்பாக உணரவேண்டும்.

  காலம், தேசம், கதை, ஞானம், யோகம் இவற்றின் தொடர்பாக வைகுண்ட ஏகாதசியின் சிறப்பினை உணர வேண்டிய அம்சங்கள் உள்ளன. அதிலும் இதற்கு வைகுண்ட துவாரம் என்ற பெயரே உள்ளது. வைகுண்டம் என்றால் என்ன? வைகுண்டம் என்ற பெயர் விஷ்ணு லோகத்துக்கு உரியது.  சுவாமியின் பெயர் வைகுண்டநாதன்.

  srirangam-paramapatha-vasal
  srirangam-paramapatha-vasal

  “வைகுண்ட ப்ருஷ ப்ராண:” என்ற நாமத்தை  விஷ்ணு சகஸ்ரநாமத்தில் படிக்கிறோம். ” விகுண்டஸ்ய பாவம் வைகுண்டம்”.  விகுண்டமே வைகுண்டம். குண்டம் என்றால் குறை, தடை என்று பொருள். முழுமை இல்லாமல் தடை செய்வது, பரி பூரணத்துவம் ஏற்படாமல் தடுப்பது குண்டத்துவம்.  அப்படிப்பட்ட தடையை பரிபூரணத்துவம் இல்லாமையை,  குறைகளை விலக்கி,  சம்பூர்ணமான தத்துவத்தை அளிப்பதே வைகுண்டம் என்பதிலுள்ள உட்பொருள்.

  எங்கே குறை இருக்காதோ, எங்கே தடை இருக்காதோ அப்படிப்பட்ட பரிபூரணமான அகண்ட சச்சிதானந்த மூர்த்தி இருப்பது வைகுண்டம்.   

  பரமாத்மா சம்பூர்ணமான சச்சிதானந்த ஸ்வரூபம். அவருடைய தத்துவமே உலகம் எங்கும் வியாபித்துள்ளது. ஒரு தீபத்தைச் சுற்றிலும் ஒளி இருப்பது போல பகவானை சுற்றிலும் வைகுண்டம் உள்ளது. தீபத்திற்கும் ஒளிக்கும் வேறுபாடு இல்லாதது போல பகவானுக்கும் வைகுண்டத்திற்கும் வேறுபாடு கிடையாது. விஷ்ணு தத்துவமே வைகுண்டத்தில் பரவி உள்ளது.

   வைகுண்ட லோகம் என்ற உடனே விஷ்ணு தொடர்பான ஸ்திதியை நம் உள்ளம் நினைக்குமானால் நம் இதயமே வைகுண்டம். நம் உடலுக்கும் குண்டத்துவம் உள்ளது. நம் கையை சற்று தூரம் வரை மட்டுமே நீட்ட முடியும். அதற்கு மீறி நீட்ட இயலாது. ஒவ்வொரு உறுப்பும் ஒரு எல்லைக்கு உட்பட்டு உள்ளது. அந்த எல்லையே குறை.  பகவான் அபரிமிதமானவன். எல்லைகளற்றவற்றவன். அதுதான் விகுண்ட தத்துவத்தின் சிறப்பு. 

  அதுமட்டுமல்ல உலகில் அனைத்தையும் ஒன்றோடு ஒன்று சேர்த்து வைப்பவன் இறைவன். அவ்வாறு இணைக்கும்போது ஒன்று இன்னொன்றுக்கு தடையாக மாறாமல் எவ்வாறு சேர்த்தால் பிரபஞ்சம் செயல்பட்டு இயங்கும் என்பது இறைவனுக்குத் தெரியும். அதனால் தான் பூமி ஜலம் அக்கினி வாயு ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களையும் பஞ்சீகரணம் செய்து இந்த பிரபஞ்சத்தை நடத்தி வருகிறான் பரமாத்மா.

  srirangam paramapathavasal
  srirangam paramapathavasal

  அவ்வாறு ஒன்றிணைத்து நடத்துபவனை வைகுண்டன் என்கிறோம் என்று ஆதிசங்கரர் வைகுண்டம் என்ற சொல்லுக்கு பாஷ்யம் எழுதுகிறார். இதே சொல்லை மகாபாரதம் கூட கூறுகிறது.

  அதுபோன்ற பரிபூரணமான, அகண்டானந்த சொரூபமான விஷ்ணு பதத்தை தரிசிப்பதற்கு ஞான துவாரத்தை திறக்க வேண்டும். ஞானதுவாரமே வைகுண்ட துவாரம். இத்தனை விசேஷமான தத்துவம் இதில் உள்ளது .

  இன்று வைகுண்ட ஏகாதசியன்று விசேஷமாக செய்ய வேண்டியது என்னவென்றால்… பிரம்ம முகூர்த்தத்தில் துயிலெழுந்து தூய்மையாகி விஷ்ணு வழிபாடு இன்று முழுவதும் உபவாசத்தோடு கடைபிடிக்கவேண்டும். விஷ்ணு பூஜை, நாம சங்கீர்த்தனம், விஷ்ணு கானம், விஷ்ணு விரதம் இன்று பூராவும் விஷ்ணு மயமாக வாழ்ந்து இரவு உறங்காமல்கண் விழித்து  மறுநாள் துவாதசியன்று சுவாமியை வழிபட்டு அதன் பிறகு நெய்வேத்யம் செய்த பதார்த்தங்களை பாரணை செய்து உண்டு இந்த விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

  அதனால்தான் ஏகாதசிக்கும் துவாதசிக்கும் அத்தனை முக்கியத்துவம் உள்ளது.

  இன்று மகாவிஷ்ணுவை  தியானிக்கவேண்டிய விதானமும் நாமமும்: 24 கேசவ நாமங்களால் சுவாமியைத் தியானிக்க வேண்டும். அவை சிருஷ்டியில் உள்ள 24 தத்துவங்களுக்கும் குறியீடுகள். அதேபோல் காயத்ரி மந்திரத்தில் உள்ள 24 அட்சரங்களின் சொரூபம் அவை. 

  அதேபோல் நம் பிராண சக்தி கூட நம் முதுகெலும்பிலிருந்து பயணிக்கும் போது அவை கூட 24. ஒன்றுக்கொன்று இதுபோன்று தொடர்பு உள்ளது. இதுவே பாரத ரிஷிகளின் விஞ்ஞானத்தில் உள்ள ரகசியமான சங்கேதங்கள்.

  மொத்தத்தில் கேசவ நாமத்தால் வழிபடவேண்டிய நாராயணனின் சொரூபத்தை இன்று சிறப்பாக வழிபடுகிறோம். மேலும் நாராயணனை “சசங்க சக்கரம் சகிரீட குண்டலம்” என்று போற்றுகிறோம்.  சங்கு சக்கரம் தரித்து, பத்மம் கதை தரித்து தோள்களில் சார்ங்க தனுசு தரித்து பிரகாசிக்கும் விஷ்ணு ஸ்வரூபத்தை தியானிக்கவேண்டும்.

  இதனையே வனமாலீ கதீ சார்ங்கீ என்ற விஷ்ணு சகஸ்ரநாமத்தில் இறுதியில் அனுசந்தான ஸ்லோகமாக கூறியுள்ளார்கள். வனமாலையை வித்யாலங்காரமாக அணிந்துள்ளார். மேலும் பஞ்சாயுதங்கள்  நாராயணனின் பிரதானமான ஆயுதங்களாக இங்கு வர்ணிக்கப்படுகின்றன. இந்த பஞ்சாயுதங்களின் பெயரை நினைத்தால் கூட நாம் உய்வடைவோம்.

  srirangam paramapathavasal2
  srirangam paramapathavasal2

  இவை உயர்ந்த ரட்சணை கவசங்கள். அதனால்தான் சங்கம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே! சக்ரம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே! கதாம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே! சார்ங்கம் சதாஹம் சரணம் ப்ரபத்யே! கட்கம் சதாஹம் சரணம் பிரபத்யே!  என்கிறோம்.

  சுதர்சனம் எனப்படும் சக்கரம், பாஞ்சஜன்யம் எனப்படும் சங்கு, சார்ங்கம் எனப்படும் வில், கௌமோதகம் எனப்படும் கதை, நந்தகம் எனப்படும் கத்தி இவற்றை அணிந்துள்ளார் விஷ்ணு. பத்மம் கரத்தில் தரித்துள்ளார். இது திவ்யமான பத்மம். ஞான தர்ம சக்தி ஸ்வரூபம்.

  இவ்விதமான ஆயுதங்களோடு நீலமேக சியாமளனாக, கருட வாகனாரூடனாக நாராயணனை இந்த திவ்யமான வைகுண்ட ஏகாதசி தினத்தன்று ஸ்மரித்து, தியானித்து இந்த நாளை நல்ல விதமாக கழித்து, யோகத்தை அருளும்படி நாராயணனை பிரார்த்திப்போமாக!

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »