spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்இன்று ஸ்ரீபஞ்சமி... அப்படி என்ன சிறப்பு தெரியுமா?!

இன்று ஸ்ரீபஞ்சமி… அப்படி என்ன சிறப்பு தெரியுமா?!

- Advertisement -
saraswathi
saraswathi

16 2 2021 இன்று ஸ்ரீபஞ்சமி

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சர்மா 
தமிழில்: ராஜி ரகுநாதன் 

ஸ்ரீ மஹா சரஸ்வத்யை நமஹா! மாக மாதம் சுக்லபட்ச பஞ்சமி திதி ஸ்ரீபஞ்சமியாக வழிபடப்படுகிறது. இதன் சிறப்பு மிக அற்புதமாக புராதன நூல்களில் விளக்கப்படுகிறது.

ஸ்ரீபஞ்சமி தினத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது ஞான பஞ்சமி. சாதாரணமாகவே பஞ்சமி திதி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனை ஞான திதி என்பர். அதிலும்  சிறப்பாக மாக மாதத்தில் வரும் சுக்ல பக்ஷ பஞ்சமி திதியின் முக்கியத்துவம் பல புராணங்களிலும் ஆகமங்களிலும்  விளக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட புராணம், தேவி பாகவதம், பிரம்ம வைவர்த்த புராணம் போன்றவற்றில்  இதன் வைபவத்தைப் பற்றி பல அம்சங்கள் பேசப்படுகின்றன. 

இன்றைய தினம் சரஸ்வதிதேவி விராட்புருஷனின் சங்கல்பத்தால் அவருடைய நாவிலிருந்து உற்பத்தியானாள். விராட்புருஷன் என்றால் பிரபஞ்ச வடிவான பரமேஸ்வரன். பரமேஸ்வரனின் ‘ஜிஹ்வா’ என்றால் அவனுடைய ‘வாக்சக்தி’ என்று பொருள். புராணக் கதைகளை இவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும். பிரபஞ்சத்தை இயக்கும் பரமேஸ்வரனின் ஞான ஸ்வரூபமே சரஸ்வதி.

ஞானம் மூன்று விதமாக பலனளிக்கும். முதலில் தனக்குத் தெளிவாகப் புரிய வேண்டும். அதை பிறருக்கு விளக்கிக் கூறவேண்டும். மூன்றாவது அதனை பயன்படுத்த வேண்டும். ஞானம் புரிந்தால் அது  போதனையாகும். அதுவே புத்தி சக்தி. ஒரு விஷயத்தை தெளிவாக அறிந்து கொள்ளும் புலன் புத்தியே. “புத்திர் போத லக்ஷணா” என்பர்.

Hindu Goddess Of Learning Saraswathi Devi
Hindu Goddess Of Learning Saraswathi Devi

இரண்டாவது… புத்தியால் புரிந்து கொண்டதை பிறருக்கு வெளிப்படுத்த தெரியவேண்டும். ‘வியக்தம்’ செய்வதே வாக்கு என்பர். அதோடுகூட தான் பெற்ற ஞானத்தை வாழ்வில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

அப்போதுதான் அனுபவத்தில் அது பலனளிக்கும்.  இத்தகைய ஞானசக்தியை சரஸ்வதியாக வழிபடுகிறோம்.

சரஸ்வதி என்ற சொல்லுக்கு ‘பிரவகிப்பது’ என்று பொருள். ஒளியோ ஜலமோ ஒரே இடத்தில் நிற்காது. அது பரவும். அது பிரவகிக்கும். அதேபோல் ஞானமும் பிரவகிக்க வேண்டும். விரிவடைய வேண்டும்.

அது மட்டுமல்ல. நம் உடலில் ஒவ்வொரு அணுவிலும் பிரவகிக்கும் சக்தி எது என்று கேட்டால் பிராண சக்தியான சரஸ்வதியே.  அதனால் சரஸ்வதி என்றால் ஞானசக்தி மட்டுமல்ல பிராண சக்தியும் கூட .

அப்படிப்பட்ட சரஸ்வதிதேவி இன்று தோன்றினாள் என்று தேவி பாகவதம் கூறுகிறது. இன்று குழந்தைகள் முதல் பெரியவர் வரை சரஸ்வதி தேவியை பூஜை செய்து வணங்க வேண்டும். செய்ய வேண்டிய வழிமுறைகளில்.. பிரம்ம முகூர்த்தத்தில் துயிலெழுந்து மங்களகரமாக ஸ்நானம் செய்து அதன்பின் சரஸ்வதியை புத்தக வடிவிலோ பிரதிமை வடிவிலோ கலச வடிவிலோ வழிபட வேண்டும்.

அட்சர ரூபிணியான சரஸ்வதியைை புஸ்தக வடிவத்தில் வழிபடுவதை இன்றைய பிள்ளைகளுக்கு மிகவும் முக்கியமாக கற்றுத்தர வேண்டிய அவசியம் உள்ளது.  பெரியவர்களுக்கும் மனசாந்தி தேவை என்றாலும் உலகில் எதையாவது சாதிக்க வேண்டும் என்றாலும் ஞானம் தேவை.  சரஸ்வதியின் கிருபை எல்லா நேரங்களிலும் நமக்கு தேவையாக இருக்கிறது. 

சரஸ்வதி தேவியை தேவர்களும் வழிபடுகிறார்கள். “யாகுந்தேந்து…” என்று தொடங்கும் அகஸ்தியர் அருளிய ஸ்லோகத்தில் “யா ப்ரஹ்மாச்யுத சங்கர ப்ரப்ருதிபிர் தேவை ஸ்ஸதா பூஜிதா !ஸா மாப்பாது சரஸ்வதீ பகவதீ நிஸ்ஸேஷ ஜாட்யாபஹா !!” என்று வணங்குகிறார்.

“பிரம்மா விஷ்ணு ருத்ரன் போன்ற கடவுளர்களும்  போற்றி .
வழிபடும் சரஸ்வதிதேவி! என்னிடம் இருக்கும் அஞ்ஞானத்தை விரட்டி எப்போதும் என்னை இரட்சித்து காப்பாயாக!” என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.  

தேவர்களும் சிருஷ்டி ஸ்திதி லயம் ஆகிய பணிகளைச் செய்வதற்கு அது தொடர்பான ஞானமும் அதை பயன்படுத்தும் அறிவும் சரஸ்வதியின் அருளால்தான் கிடைக்கிறது.  

சரஸ்வதியின் ஞானத்தையும் வைபவத்தையும் விளக்கும் புராணங்கள், இன்று சரஸ்வதி தேவியை வழிபட வேண்டிய முறைகளை விவரித்து கூறுகின்றன. ஷோடசோபசார முறையில் வழிபட்டு வெள்ளை நிற மலர்களால் அர்ச்சிப்பதை இன்று சிறப்பாக கூறியுள்ளார்கள். ஏனென்றால் அவள் ‘சர்வ சுக்லா சரஸ்வதி”. 

சுத்தமான நிர்மலமான ஞான வடிவில் ஒளிவீசி பிரகாசிப்பவள். அவளருளால் உலகியல் கலைகளோடு  பாரமார்த்திகமான பிரம்ம வித்யை கூட கிடைக்கிறது. வித்யாதி தேவதையான சரஸ்வதியின் கிருபையை,  ‘பராவித்யா’ ரூபிணியாக விளங்கும் தேவியின் கருணையை இன்று நாம் பெறவேண்டும். வெள்ளைச் சந்தனம், வெள்ளை பூ, வெள்ளை வஸ்திரம், வெண் சங்கு இவற்றால் வழிபட வேண்டும்.

மாணவர்கள் இன்று சரஸ்வதியை நாமத்தாலோ சுலோகத்தாலோ அனுஷ்டானம் செய்வது சிறப்பான பலன் அளிக்கும். பெற்றோர் இன்று தம் பிள்ளைகளை சரஸ்வதி பூஜை செய்விக்க வேண்டும். இன்று நிவேதனம் செய்யும் பிரசாதத்தை மாணவர்கள் ஏற்று, நியமமாக சரஸ்வதி மந்திரம், நாமம், சஹஸ்ரநாமம் படித்து வழிபடவேண்டும்.

பாரத தேசமே சரஸ்வதி தேசம். பாரதி என்றால் சரஸ்வதி. பாரதி என்றால் ஞான ஸ்வரூபிணி. போஷிப்பவள் என்ற பொருளும் உண்டு.  அவரவர் அறிவு அவரவரை வளர்த்து காக்கிறது. இந்த அறிவும் சரஸ்வதி தேவியின் அருளே அல்லவா! கலைகள் அனைத்தும் அவள் அருளால் பிரகாசிப்பவையே!

‘சரஸ்வதி கடாக்ஷம்’ என்பது மிக முக்கியமான அம்சம். மந்திரம் பலன் அளிக்க வேண்டும் என்றாலும், கடவுள் அனுக்ரகம் பெற வேண்டும் என்றாலும் அதன் தொடர்பான மந்திரங்கள் தெரியவேண்டும். அது குறித்த ஞானம் வேண்டும். அதுவும் சரஸ்வதியின் அருளால் கிடைக்கப் பெறுவதே. 

சரஸ்வதியின் அருள் இருந்தால் எல்லா தேவதைகளின் அருளும் கிடைத்துவிடும்.

வேத விஞ்ஞானம் அனைத்தும் ஒரு சரஸ்ஸாகவும் அந்தச் ஸரஸ்ஸிலிருந்து உற்பத்தியாகும் தேவி சரஸ்வதியாகவும் வர்ணிக்கப்படுகிறது. வேத விஞ்ஞான சொரூபிணியான சரஸ்வதியின் கிருபை அகண்ட பாரத தேசத்தை கீர்த்தி உடையதாக்கட்டும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe