கல் யானைக்கு கரும்பு கொடுத்த லீலை! மதுரையில் இன்று!

மதுரை கல் யானைக்கு கரும்பு கொடுத்த திருவிளையாடல்

14.01.18 இன்று மாலை சொக்கநாதப்பெருமான் எல்லாம் வல்ல சித்தராக வந்து நிகழ்த்திய 63 திருவிளையாடல் படலம்.

மதுரை அன்னை மீனாட்சி உடனமர் அருள்மிகு சொக்கநாதப்பெருமான் திருக்கோயிலில் 14.01.18 மாலை நடைபெறும். வருடம் ஒருமுறை மட்டும் வெளியே வரும் எல்லாம் வல்ல சித்தர்.

இறைவன் அபிசேகப் பாண்டியனுக்கு முக்தி அளிக்க எண்ணி மதுரைக்கு எல்லாம் வல்ல சித்தராக உருமாறி வந்தார். மக்களுக்கு அவர் செய்யும் சித்துகளைக் கேள்வியுற்ற மன்னன் சித்தரை அழைத்துவர மந்திரிமார்களை அனுப்பினார். ஆனால் அரசனே தன்னை வந்து காண வேண்டும் என்று சித்தர் மந்திரிகளை திருப்பி அனுப்பிவிட்டார்.

மந்திரிகளை வந்து சித்தர் கூறியதை தெரிவித்தும், அரசனே சித்தரைக் காண சென்றார். அங்கு கூடியிருந்த மக்கள் அரசனுக்கு வணக்கத்தினைத் தெரிவித்து விலகி நின்றனர். அரசன் ஏன் சித்துகளை மதுரையில் வாழும் மக்களிடம் செய்து காட்டுகின்றார்கள். தங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். அதற்கு சித்தர், தான் காசியிலிருந்து வருவதாகவும், தனக்கு ஒன்றும் தேவையில்லை என்றும், வேண்டுமானால் அரசன் வேண்டுவதைக் கேட்டுப் பெறலாம் என்றும் கூறினார்.

அரசன் சித்தரைச் சோதிக்க அருகில் கரும்பு வைத்திருந்த ஒருவரிடம் வாங்கி, இக்கரும்பினை இந்திர விமானத்தை தாங்கும் கல்யானை உண்ணும் படி செய்ய வேண்டும் என்றார். அதனை ஏற்ற சித்தர் கல்யானையை பார்க்க அக்கல்யானைக்கு உயிர்வந்து மன்னன் தந்த கரும்பினை தின்றது.

அத்துடன் மன்னன் அணிந்திருந்த முத்துமாலையை பிடுங்கி உண்டது. இதனால் அரசன் கோபம் கொள்ள, சித்தரை காவலர்கள் தாக்க வந்தார்கள். சித்தர் காவலர்களைப் பார்க்க அனைவரும் சிலையாக நின்றனர்.

அரசன் சித்தரிடம் மன்னிப்புக் கேட்டு, தனக்கு பிள்ளை வரம் வேண்டினான். அதை தந்த சித்தர் மறைந்தார். அபிஷேகப் பாண்டியனுக்கு விக்ரமன் என்ற ஆண்குழந்தை பிறந்து பல கலை கற்று சிறந்து விளங்கினான். அபிசேகப் பாண்டியன் மகனுக்கு பட்டாபிசேகம் செய்து முக்தி அடைந்தார்.