Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் தினசரி ஒரு வேத வாக்கியம்: 2. பிரியமான மேதாவிகளே!

தினசரி ஒரு வேத வாக்கியம்: 2. பிரியமான மேதாவிகளே!

2. பிரியமான மேதாவிகளே!

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா 

தமிழில்: ராஜி ரகுநாதன்.

“அர்சத ப்ரார்சத ப்ரிய மேதாஸோ அர்சத”

— ருக் வேதம்.

“ஓ…! பிரியமான மேதாவிகளே! கடவுளை அர்ச்சனை செய்து வழிபடுங்கள்! (உபாசனை செய்யுங்கள்). சிறப்பாக அர்ச்சனை செய்யுங்கள்!” 

மனிதனாகப் பிறந்தவன் செய்ய வேண்டிய கடமைகளில் தேவ யக்ஞம் பிரதானமானது. தேவர்களுக்கு நாம் பெற்றுள்ள கடனை இவ்விதம் தீர்க்கவேண்டும். தேவர்களின் அருள் இல்லாவிட்டால் வாழ முடியாது.

ஜீவன் தன் கர்ம வினைக்கு தகுந்தபடி தெய்வ சக்திகள் நிறைந்த உடலைப் பெறுகிறான். அந்தந்த கர்மவினைக்கு அந்தந்த தேவதைகளின் அனுக்கிரகம் அந்தந்த புலன்களின் சக்திகளாக வெளிப்படுகின்றன. சூரியனிடமிருந்து கண் பார்வை. வாயுவிலிருந்து பிராணன்.  வருணனிடம் இருந்து ருசி.  அக்னிடமிருந்து வாக்கு. இந்திரனிடமிருந்து கரங்கள்… இவ்வாறு ஒவ்வொரு புலனிலும் ஒவ்வொரு தெய்வ சக்தி விளங்குகிறது. இவை அனைத்தையும் கட்டுப்படுத்தும் புத்தியின் நாடி மண்டலத்தில் அந்தந்த தேவதைகளின் ஸ்தானம் உள்ளது.

நம் உடலை நாம் தயாரித்துக் கொள்ள முடியாது. அதனை கட்டுப்படுத்துவது மட்டுமே நாம் செய்யக்கூடியது. உடலில் உள்ள பௌதிக விவரங்கள் கூட நமக்குத் தெரியாது. அவற்றை அறிய வேண்டுமென்றால் சூட்சுமமான பௌதிக விஞ்ஞான கருவிகளை கண்டுபிடிக்க வேண்டும். 

உடலுறுப்புகளை ஒழுங்குபடுத்தும் தெய்வ சக்திகளை அறிவதற்கு மற்றுமொரு சூட்சும விஞாஞானம் உள்ளது. அது குறித்து வேத கலாச்சாரம் போதிக்கிறது.

மொத்தத்தில் தேவர்களால் கிடைத்த இந்த தேகத்தால் நன்றி உணர்வோடு தேவர்களை வழிபட வேண்டும். அதுவே தேவ யக்ஞம். அந்த யக்ஞமே அனைத்து பிரபஞ்சத்தையும் சரிவர நடத்தி வைக்கும் சாதனம்.

அதனால்தான், “யக்ஞோ புவனஸ்ய நாபி:” என்கிறது ஸ்ருதி. 

தேவதைகளின் சக்தியனைத்திற்கும் மூலமான பரப்பிரம்மத்தை சிவனாகவோ விஷ்ணுவாகவோ ஜகதம்பாளாகவோ எண்ணி வழிபடும் விதானத்தை நம் நித்திய ஜீவிதத்தில் நிபந்தனைக ளாக்கியுள்ளார்கள் நம் முன்னோர்.

ஆயின், மேதாவிகள் என்று தம்மை நினைப்பவர்கள் தன் மேதமையே உயர்ந்தது என்று எண்ணி இந்த பூஜைகள் எல்லாம் கீழ் ஸ்தாயியைச் சேர்ந்தவை என்று கூறி அவற்றை எதிர்ப்பார்கள். அப்படிப்பட்டவர்களை சூட்சுமமாக எச்சரித்து வேதமாதா இவ்வாறு போதிக்கிறாள்:

நாம் எத்தனைதான் ஞானிகளானாலும் மேதாவிகளானாலும் பலப்பல பிறவி வினைகளின் தளைகள் நமக்கு உண்டு. அவை நினைவுகளின் வடிவில் நம் ஆழ்மனமான சித்தத்தில் நிலைபெற்றிருக்கும். அவை நீங்கினால்தான் சுத்த ஞானம் கிட்டும். மேதமை வேறு… சுத்த ஞானம் நிறைந்த ஆனந்த அனுபவம் வேறு. மேதமை பல விஷயங்களை ஒன்று திரட்டிக் கொள்ள கூடியது. ஆனால் சத்திய சாட்சாத்காரம் அதன் மூலம் கிடைக்காது.

அதனால் கர்ம வாசனை தொலைய வேண்டுமென்றால் கடவுளின் அருள் வேண்டும். கடவுள் பற்றிய சிந்தனை உள்ளத்தில் எழுவதே கடவுளின் அருள்.

ஆலோசித்து முடிவெடுக்கும் புத்தியோடு, ஆராதித்து ஆனந்திக்கும் உள்ளம்  ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை சிறந்து விளங்கும்.

எத்தனை பிறவிகளின் கர்ம வாசனைகள் குவிந்துள்ளதோ நாமறியோம். எத்தனை இயற்கை சக்திகளுக்கும் ஜீவ கோடிகளுக்கும் நாம் கடன் பட்டுள்ளோமோ நாமறியோம். அந்த வாசனைகள் அனைத்தும் தொலையை வேண்டும். அந்த கடன்கள் அனைத்தும் தீர வேண்டும். அது புத்தியின் சக்தியால் நடக்கக்கூடியது அல்ல. பகவானின் அருளால் மட்டுமே சாத்தியமாகும்.

நமக்குக் கிடைத்திருக்கும் உடல் என்னும் கருவி, அந்தக்கரணம்… இவற்றில் உள்ள தெய்வீக சக்திகளை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் தெய்வ சக்திகளை வழிபட்டு உபாசிக்க வேண்டும். 

புத்தி சக்தி வரையரைக்கு உட்பட்டது. உடல் உறுப்புகளின் எல்லையும் அவற்றின் சக்திகளும் சொற்பமானவை.  அதனால் யோகத்தால் சரீர சக்தியை விருத்தி செய்து கொள்ளவேண்டும், தவத்தால் மனச் சக்தியின் வலிமையை அதிகரித்துக் கொள்ள வேண்டும். 

சத்திய சாட்சாத்காரம் புத்திக்கு எட்டாதது. சிந்தனையும் பயிற்சியும் ஒருவித புரிதலை அளிக்கலாம். ஆனால் பரிபூரண ஞானத்திற்கு அது போதாது. உபாசனையின் பலத்தால் மட்டுமே அநேக ரகசியங்கள் புரியவரும். எந்த புத்தகமும் எந்த சொற்பொழிவும் சொல்ல இயலாத ரகசியங்கள் கடவுளின் கிருபையால் மட்டுமே ஸ்புரிக்கும். 

மேதமைக்கு உபாசனை துணையானால் தானும் உய்வடைந்து, மேலும் பலரையும் உயர்வடையச் செய்ய முடியும்.

பகவானை அர்ச்சனை செய்து வணங்காதவன் உய்வடைவது அசாத்தியம் என்பது வேதவாக்கு.

அதுமட்டுமல்ல…  கடவுளை உபாசனை செய்வதன் உட்பொருள், புத்தி பரிபக்குவம் அடைந்தவர்களுக்கு மட்டுமே புரியவரும். அதனால் அவர்களை உத்தேசித்து கூறிய வாக்கியமாகக் கூட இதனைக் கருதலாம்!

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version