Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 16)

விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 16)

இன்றைய விஞ்ஞானம் இதை போன்ற பல்லண்டங்களை மல்டிவெர்சு (multiverse) என கூறுகிறது.

விநாயகர் நான்மணிமாலை – பகுதி 16 :
பாடல் 18 – கலித்துறை

விளக்கம்: கு.வை.பாலசுப்பிரமணியன்

துணையே, யெனதுயி ருள்ளே யிருந்து சுடர் விடுக்கும்
மணியே, யெனதுயிர் மன்னவனே, யென்றன் வாழ்வினுக்கோர்
அணியே, யெனுள்ளத்தி லாரமுதே, யெனதற்புதமே,
இணையே துனக்குரைப்பேன், கடைவானில் எழுஞ்சுடரே.

பொருள் – விநாயகப் பெருமானே நீ எனக்குத் துணையாக வருபவன்; எனது உயிரின் உள்ளே இருந்து ஆன்ம ஞானத்தை வெளிப்படுத்துபவன்; நீ எனது மன்னவன்; என்னுடையா வாழ்விற்கு ஓர் அணிகலன்; எனது உள்ளத்தில் வாழ்கின்ற ஆரமுது; என் வாழ்வில் அற்புதங்கள் செய்பவன்; தொடுவானத்தில் எழுகின்ற காலைச் சூரியனே, மாலை மதியமே உனக்கு சமம் என இவ்வுலகில் நான் எதனைச் சுட்டிக்காட்டுவேன். நீ அனைத்திற்கும் மேலானவன்.

பாடல் ‘துணை’ எனத் தொடங்கி ‘சுடரே’ என முடிகிறது.

பாடல் 19 – விருத்தம்

சுடரே போற்றி, கணத்தேவர் துரையே போற்றி, எனக்கென்றும்
இடரே யின்றிக் காத்திடுவாய், எண்ணா யிரங்கால் முறையிட்டேன்;
படர்வான் வெளியிற் பலகோடி கோடி கோடிப் பல்கோடி
இடரா தோடுமண்டலங்க ளிசைத்தாய், வாழி யிறைவனே.
பொருள் – ஒளியாய் விளங்கும் விநாயகப் பெருமானே, தேவ கணங்களில் அதிபதியெ, நீ எனக்கு எந்த துன்பமும் வாராது காத்திட வேண்டும். உன்னை என்னுடைய எண்ணத்தால் ஆயிரம் முறை வேண்டுகிறேன். பரந்த இந்த வானவெளியில் பலப்பல கோடி அண்டங்கள் ஒன்றை ஒன்று இடறாமல் இயங்கவைத்தாய். நீ வாழ்க என் இறைவனே.

பாடல் ‘சுடர்’ எனத் தொடங்கி ‘இறைவனே’ என முடிகிறது.

பலகோடி இடறாது ஓடும் மண்டலங்கள் இசைத்தாய்

பாரதி அண்டங்கள் பற்றி தன்னுடைய பாடல்களில் பல இடங்களில் சுட்டுகிறார். அல்லாவைப் போற்றி அவர் பாடும் பாடலில், பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி அண்டங்கள் எல்லாத் திசையிலுமோர் எல்லையில்லா வெளிவானில் நில்லாது சுழன்றோட நியமம் செய்தருள் நாயகன் சொல்லாலும் மனத்தாலும் தொடரொணாத பெருஞ்சோதி அல்லா அல்லா அல்லா

என்று பாடுவார். இதே கருத்தைக் காளி மீது ஏற்றியும் பாடுகிறார்.

விண்டுரைக்க அறிய அரியதாய் விரிந்த வான வெளியென நின்றனை அண்டம் கோடி வானில் அமைத்தனை அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை

தமிழ்நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் அண்டவியல் பற்றிய இத்தகைய கருத்துகளை கூறியுள்ளனர். ஒருசமயம் குறும்பர்களிடம் இருந்து தப்பி காட்டிற்குள் புகுந்த காஞ்சியின் மன்னர் தொண்டைமான் இளந்திரையன், ரோமசர் என்ற சித்தரிடமிருந்து அண்டவியல் உபதேசம் பெற்றதாக ரோமசர் என்ற சித்தர் பற்றிய நூல்கள் கூறுகின்றன.

அவர் அருளிய உபதேசத்தில் அவர் பூமியின் வயது, சூர்ய குடும்ப தோற்ற மறைவு, அண்டத்தின் வயது ஆயுள், அண்டவியல் அலகுகள் போன்றவற்றை குறிப்பிடுகிறார். மேலும் ஒவ்வொரு பிரம்மா இறக்கும் போதும் தன் உடலில் இருந்து ஒரு முடி உதிர்வதாகவும், தற்போது அவர் 71 பிரம்மாக்களை பார்த்துள்ளதால் 71 முடிகள் உதிர்ந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

பூமியின் வயதை கணக்கிட 432ஐ 10 லட்சத்தால் பெருக்க வேண்டும் என்கிறார். அதாவது பூமியின் வயது 432 கோடியே 10 லட்சம் ஆண்டுகள் என்கிறார். (43,20,00,000 ஆண்டுகள்). இன்றைய விஞ்ஞானம் பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள் என கணிக்கிறது. ரோமசர் பிரம்மாவின் ஒரு நாளே சூர்ய குடும்ப ஆயுள் என்கிறார். அதாவது சூர்ய குடும்ப ஆயுள் 864 கோடி ஆண்டுகள் என்கிறார்.

பிரம்மாவின் ஒரு நாள் முடியும் போது 14 லோகங்களில் பூலோகம், புவர் லோகம், சுவர் லோகம் மட்டுமே அழியும் என்றும், மற்ற 11 லோகங்கள் ஒவ்வொரு பிரம்மா இறக்கும் போது அழியும் என்கிறார். இன்றைய விஞ்ஞானம் சூர்ய குடும்ப ஆயுள் 900 கோடி ஆண்டுகள் என கணிக்கிறது. இந்த அண்டத்தின் வயது 155 லட்சத்தி 52 ஆயிரம் கோடி ஆண்டுகள் (பிரம்மாவின் 51ஆம் ஆண்டு துவக்கம்) என்கிறார். அதைப்போல் அண்டத்தின் ஆயுள் 311 லட்சத்தி 4 ஆயிரம் கோடி ஆண்டுகள் (பிரம்மாவின் ஆயுள்) என்கிறார்.

இன்றைய விஞ்ஞானம் அண்டத்தின் வயது 1300 கோடி ஆண்டுகளுக்கு மேல் என கணிக்கிறது. சூரன் அல்லது சூரபதுமன் (கந்த புராணம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட்து) என்ற அவுன தேச அரக்கன், 1008 அண்டங்களை ஆளும் வரத்தை சிவனிடமிருந்து பெற்றதாக கூறுகிறார். இன்றைய விஞ்ஞானம் இதை போன்ற பல்லண்டங்களை மல்டிவெர்சு (multiverse) என கூறுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × five =

Translate »