Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் தினசரி ஒரு வேத வாக்கியம்: 8. முன்னேறு முன்னேறு!

தினசரி ஒரு வேத வாக்கியம்: 8. முன்னேறு முன்னேறு!

முன்னேறு! முன்னேறு!

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா 
தமிழில்: ராஜி ரகுநாதன் 

“ஆரோஹணமாக்ரமணம் ஜீவிதோ ஜீவதோயனம்”
அதர்வண வேதம் 

“உயர்வும் முன்னேற்றமும் ஒவ்வொரு ஜீவனுக்கும் நோக்கமாக இருக்க வேண்டும்”

சோம்பி இருப்பது மனிதனின் வளர்ச்சிக்குத் தடை.  எந்தத் துறையில் இருந்தாலும் அதில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும். முன்னேற்றத்தை சாதிக்க வேண்டும். அதற்கு தார்மீகமான, ஒழுங்குபட்ட முயற்சியில் ஈடுபடுவது அவசியம்.

படைப்பு சக்கரத்தின் இயக்கத்திற்காக ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு திறமை, ஒவ்வொரு பணி, அதற்கேற்ற புத்தி,  அதனை நிர்வாகம் செய்யும் அமைப்பு… போன்வற்றை இயல்பாகவே கடவுள் கொடுத்துள்ளார். இந்த விஸ்வ சுழற்சியில் பிரதி அணுவும் பயனுள்ளதே! உயிர்ப்புள்ளதே!  வீண் என்பது எதுவும் இல்லை. 

இது போதும்! இத்தனை போதும்!‘ என்ற உதாசீனப் பழக்கம் மனிதனுக்கு இருக்கக்கூடாது. அத்தகைய அலட்சியம் தோல்விக்கு வழிவகுக்கும்.

தான் செய்யும் பணியில் முழு புரிதல், பயிற்சி, தீட்சை, செயல்முறை போன்றவை மிக முக்கியம். பணி புரிவது ஒரு உயர்ந்த லட்சியத்திற்காக என்ற நினைப்பு வேண்டும். ஆனால் லட்சியம் உயர்ந்ததாக இருந்தால் மட்டும் போதாது என்பதை இந்த வாக்கியத்தில் உள்ள ‘ஆரோஹணம், ஆக்ரமணம்’ என்ற இரண்டு பதங்களும் குறிக்கின்றன.  

அதாவது நிரந்தரம் முன்னோக்கிச் செல்ல வேண்டும்  என்பது இதன் பொருள். பின்வாங்காத உறுதியோடு, நிலையான மனதோடு தடைகளைத் தாண்டி தொடர்ந்து செல்வதையே ஆரோஹணம், ஆக்ரமணம் என்ற சொற்கள் குறிப்பிடுகின்றன.

இப்போது உள்ளதைவிட உயர்வு, இப்போது செய்வதை விடச் சிறப்பான முயற்சி… இவ்விரண்டும் மனிதனின் இலட்சியங்களாக மாறினால் வெற்றி நிச்சயம்.

வேதக் கலாச்சாரம் மூக்கைப் பிடித்துக்கொண்டு மூலையில் முடங்கிக் கிடக்கும்படி  போதிக்கவில்லை. ‘உத்திஷ்டத‘ என்று விழிப்பூட்டுகிறது. 

இது போன்ற வாக்கியங்கள் மூலம் நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் நம்மில் உள்ள சைதன்யத்தை நல்ல முறையில் பிரகாசமாக பயன்படுத்தி பூமியை ஐஸ்வர்யத்தோடு கூடியதாக, செழிப்பானதாக, மகிழ்ச்சியானதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஊக்கம் ஏற்படவேண்டும். 

ஆயின் இதில் தர்மத்தை விட்டு விடக்கூடாது.  தர்மத்திற்கு மூலம் கடவுள் மீது நம்பிக்கை. இவ்விரண்டும் ஒன்றிணைந்த கடமை உணர்வையே வேதமாதா ஒவ்வொரு இடத்திலும் போதிக்கிறாள்.

முன்னேற்றம் என்றால் தர்மத்தையும் சம்பிரதாயத்தையும் விட்டுவிட்டு புதிய வேடம் தரிப்பதல்ல.  தர்மத்தை முன்னெப்போதையும் விட அதிக சிரத்தையோடு கடைப்பிடிப்பதே முன்னேற்றம்.

மேலும் வாழ்க்கையில் அப்போதைக்கப்போது… ஒரு நாளை விட மறுநாள் சிறப்பாக கழிக்க வேண்டும். நேற்றை விட இன்று உயர்வாக செயலாற்ற வேண்டும். இன்றை விட நாளை இன்னும் சிறந்து விளங்கவேண்டும். போகப்போக விழுமியங்கள் குறையக்கூடாது. வளரவேண்டும்.

ஆத்மாவின் உயர்வே நம் கலாச்சாரத்தின் உயர்ந்த லட்சியம். தர்மத்தை கடைப்பிடிப்பதில் சிரத்தை நிரந்தரம் வளர்ந்து கொண்டே வர வேண்டும். நம் வாழ்நாளில் மட்டுமின்றி அடுத்த தலைமுறை நம்மைவிட அதிகமாக தர்மத்தை தொடர வேண்டும். இவ்வாறு காலக்கிரமத்தில் தர்மத்தை கடைபிடிப்பது அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் புருஷப் பிரயத்தனம் என்பது உய்வடையும். 

மானுட வாழ்வின் நோக்கமே நேற்றைவிட இன்று நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புவதே! இந்த ‘நன்மை’  தார்மீகமானதாக உலக நன்மையை விரும்புவதாக இருக்க வேண்டும் என்பது வேதத்தின் எதிர்பார்ப்பு.

படைப்பில் உள்ள ஐஸ்வர்யத்தை உலக நன்மை என்ற திசையை நோக்கிச் செலுத்தி  புத்தி கூர்மையால் நல்ல முறையில் பயன்படுத்தும் மனிதர்கள்  இருந்துவிட்டால் ஒரு நாட்டுக்கு அதைவிட வேறென்ன வேண்டும்?

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version