Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 19)

விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 19)

manakkula vinayakar

விநாயகர் நான்மணிமாலை – பகுதி 19
– விளக்கம் : முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

பாடல் 25 – வெண்பா

நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல் – உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்;
சிந்தையே, இம்மூன்றுஞ் செய்.

பொருள் – என் மனமே! நீ மூன்று செயல்களைச் செய்ய வேண்டும். அவையாவன: முதலாவது கவிதை இயற்றி நம் தமிழ் மொழிண்டாற்ற வேண்டும். இரண்டாவது நம் தாய்திரு நாட்டிற்கு உழைக்க வேண்டும்; அதன் விடுதலைக்குப் போராடவேண்டும். மூன்றாவது, மேற்சொன்ன செயல்களில் ஒரு விநாடியேனும் சோர்வடையாமல் இருக்க வேண்டும். இம்மூன்று செயல்களையும் செய்ய உமாதேவியின் மைந்தன் கணநாதன் நம்மையும் நம்முடைய குடியினையும் வாழவைப்பான். எனவே மனமே இந்த மூன்று செயல்களையும் செய்.

பாடல் ‘நமக்கு’ எனத் தொடங்கி, ‘செய்’ என முடிகிறது.

பாடல் 26 – கலித்துறை

செய்யுங் கவிதை பராசக்தியாலே செய்யப்படுங்காண்
வையத்தைக் காப்பவ ளன்னை சிவசக்தி வண்மையெலாம்
ஐயத்திலுந் துரிதத்திலுஞ் சிந்தி யழிவதென்னே
பையத் தொழில்புரி நெஞ்சே கணாதிபன் பக்தி கொண்டே.

பொருள் – நான் செய்கின்ற கவிதை எல்லாம் (இங்கே நான் என்பது பாரதியாரைக் குறிக்கும்) அன்னை பராசக்தியின் கருணையாலே செய்யப்படுகிறது என்பதனை மனமே நீ பார்ப்பாயாக. இந்த வையகத்தையே காப்பவள் அந்த அன்னை. என்னுடைய வலிமையெல்லாம் சந்தேகத்திலும் பதற்றத்துடன் செய்யும் வினைகளிலும் செலவாகி அழிகிறது. என் நெஞ்சே நீ கணகலுக்கு எல்லா அதிபதியான விநாயகன் துணைகொண்டு மெல்லத் தொழில் புரிவாயாக.

பாடல் ‘செய்யும்’ எனத் தொடங்கி, ‘பக்தி கொண்டே’ என முடிகிறது.

பாடல் 27 – விருத்தம்

பக்தி யுடையார் காரியத்திற் பதறார், மிகுந்த பொறுமையுடன்
வித்து முளைக்குந் தன்மை போல் மெல்லச் செய்து பயனடைவார்
சக்தி தொழிலே யனைத்து மெனிற் சார்ந்த நமக்குச் சஞ்சலமேன்?
வித்தைக் கிறைவா, கணநாதா, மேன்மைத் தொழிலிற் பணியெனையே.

பொருள் – பக்தியுடையவர்கள் செய்யும் வேலையிலே பதற்றம் அடைய மாட்டார்கள். மிகுந்த பொறுமையுடன் வெளையைச் செய்வார்கள். விதை முளைக்கின்றதைப் போல அவர்கள் மெல்லச் செய்து பயனடைபவர்கள். எல்லாத் தொழிலும் அன்னை சக்தியின் அருளாலே செய்யப்படுகிறது என்னும்போது நமக்கு சஞ்சலம் எதற்கு? வித்தைகளுக்கெல்லம் இறைவா! கணநாதா! மேன்மையான தொழிலைச் செய்ய எனக்கு அருளுவாயாக.

பாடல் ‘பக்தி’ எனத் தொடங்கி, ‘பணியெனையே’ என முடிகிறது.

விதையில் இருந்து செடி உருவாகும் நிகழ்வினை விதை முளைத்தல் என்று சொல்கிறோம். விதை முளைக்க வேண்டுமானால் சில காரணிகள் அவசியமாகத் தேவைப்படுகின்றன.

அவையாவன: (1) சத்துள்ள மண், (2) நீர், (3) காற்று, (4) சூரிய ஒளி. இந்த நான்கு காரணிகளும் கிடைத்தால் மட்டுமே விதயானது முளைக்கும். இவற்றில் எந்த ஒரு காரணி கிடைக்காவிட்டாலும் விதையானது முளைக்காது. அனைத்து விதைகளுக்கும் முளைக்கும் தன்மை மாறுபடும். இதற்குக் காரணம் விதையின் விதையுறை.

விதையுறை சில விதைகளுக்கு கடினமானதாகவும், சில விதைகளுக்கு கடினமானதாகவும் இருக்கும். விதையுறை இலேசாக உள்ள விதைகள் விரைவாகவும் விதையுறை கடினமானதாக உள்ள விதைகள் மெதுவாகவும் முளைக்கும். விதைகளை மண்ணில் ஊன்றுவதற்கு முன் அவ் விதைகளை நீரில் நன்கு ஊரவைத்து ஊன்றினால் சற்று விரைவாக முளைக்கும். இதனை ‘விதைநேர்த்தி’ என அழைக்கிறோம்.

(தொடரும்)

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version