Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் தினசரி ஒரு வேத வாக்கியம்: 13. சிரத்தையால் செல்வம்!

தினசரி ஒரு வேத வாக்கியம்: 13. சிரத்தையால் செல்வம்!

13. சிரத்தையால் செல்வம்! 

vedavaakyam

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா 
தமிழில்: ராஜி ரகுநாதன் 

‘ஸ்ரத்தயாவிந்ததே வசு’
-ருக்வேதம்

‘சிரத்தையால் செல்வத்தைப் பெறுவோமாக!’

சிரத்தை என்பது சிறப்பான சக்தி. இதன் மூலம் எதை வேண்டுமானாலும் பெற முடியும். உண்மையாக வாழ்வதே சிரத்தை எனப்படும். மூடநம்பிக்கை சிரத்தை அல்ல.

யுக்தி, தவம்,  ஆதாரத்தோடு கூடிய சத்தியத்தை ஏற்பது… இவை  சிரத்தை. சத்தியமே தர்மமும் சாஸ்திரமும். மகரிஷிகளின் சத்திய அனுபவமே சாஸ்திரம். சாஸ்திரப் பிரமாணத்திடம் கொள்ளும் விசுவாசமே சிரத்தை. தேவதைகள் சிரத்தைக்கு வசப்படுவார்கள்.

“இது சத்தியம். இது என்னை உய்விக்கும்” என்று நம்பிக்கையோடு மேற்கொள்ளும் சாதனை சிரத்தை  எனப்படுகிறது.

“இப்படிப்பட்ட சிரத்தைக்கு நான் வசமாவேன்” என்பது சிவபுராணத்தில் சிவனின் வாக்கு.

“ந கர்மணா நப்ரஜயா நஜபைர்னஸமாதிபி:||

ந ஞானானே ந சான்யேன வஸ்யோஹம் ஸ்ரத்தயாவினா ||”

‘கர்மங்களால், புதல்வர்களால், ஜபம், சமாதி போன்ற ஆன்மீக சாதனைகளால், விசாரணையால் அல்லது பிற மார்க்கங்களால் நான் வசப்படமாட்டேன். சிரத்தைக்கு மட்டும் வசமாவேன்”.

பகவத்கீதையில் கூட, “ஸ்ரத்தாவான் லபதே ஞானம் – தத்பரஸ்ஸம்யதேந்த்ரிய:” என்று ஶ்ரீகிருஷ்ணன் உரைக்கிறான்.

புலன்களை கட்டுப்படுத்தியவன், ஒரு நிலைப்பட்ட மனம் கொண்டவன், சிரத்தை உள்ளவன்… ஆத்ம ஞானத்தைப் பெற கூடியவன் என்பது இதன் பொருள்.

“அஞ்ஜஸ்ய அஸ்ரத்த தானஸ்ய சம்சயாத்மா வினஸ்யதி” 

மூர்க்கன்,  ஸ்ரத்தையற்றவன், அனைத்தையும் சந்தேகப்படும் குணம் உள்ளவன் நசிந்து போவான் என்று கூட அடித்துக் கூறுகிறான் பரமாத்மா. 

யக்ஞம், தானம், அர்ச்சனம் போன்ற சத் கர்மாக்களுக்கு சாஸ்திரங்களின் மீது விசுவாசமே பரமப் பிரமாணம். அலௌகிகமான விஷயங்கள் பற்றிய ஞானம் அளிப்பவை சாஸ்திரங்கள். பௌதிக உபாயங்கள் தோல்வியடையும் இடத்தில் சாஸ்திர உபாயங்கள் பணி செய்யும். அந்த உபாயங்கள் மீது நம்பிக்கையை  நிலைநிறுத்திக் கொண்டால் அது நற்பலனை அளிக்கும்.

சிரத்தையே அனைத்து தர்மங்களுக்கும் மூலம். ‘ஸ்ரத்தயா சத்யமாப்யதே’  – சிரத்தையால் சத்தியம் கிடைக்கப் பெறுகிறது என்பது யஜுர்வேத வாக்கியம். சிரத்தையால் சாஸ்வதமான, பரிபூரணமான, சத்தியமாகிய பகவான் கூட கிடைக்கப் பெறுவான். சிரத்தையை ஜகன்மாதாவின் வடிவமாகக் கருதுகிறது நம் கலாச்சாரம். யாகம், யக்யம், அவற்றின் நியமங்களில் கூட சிரத்தையே பிரதானம்.

சிரத்தையோடு செய்யும் தானம், ஹோமம் போன்றவை ‘சத்கர்மா’ எனப்படுகிறது. அசிரத்தையோடு செய்யும் தானம், ஹோமம் போன்றவை ‘அசத்கர்மா’ எனப்படுகிறது. என்பது கீதை வாக்கு.

சாத்வீகமானவற்றின் மீது கொள்ளும் சிரத்தை நம்மை உயர்த்துகிறது. சிரத்தை சாதனைக்கு வலிமை சேர்க்கிறது. ஸ்ரத்தை இல்லாத சாதனை பலன் அளிப்பதில்லை.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version