Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 28)

விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 28)

manakkula vinayaka

விநாயகர் நான்மணிமாலை – பகுதி 28
விளக்கம் : முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

சென்ற பகுதியின் தொடர்ச்சி…
அனுமன் தொடர்ந்து (பீமனிடம்) கூறலானார்.

கிருத யுகத்தில், அந்தணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோரது தனித்துவமான பண்புகள் அனைத்தும் இயற்கையாக இருந்தன. அவர்கள் தங்களுக்குரிய கடமைகளைச் சரியாகச் செய்தனர். அப்போது பிரம்மனே (பிரம்மன் என்பது கடவுள்; நான்முகப் பிரம்மா அல்ல) ஒரே புகலிடமாக இருந்தான். அவர்களின் பழக்க வழக்கங்கள் அனைத்தும் இயற்கையாகவே பிரம்மனை அடைவதாக இருந்தது. அவர்களது ஞானத்தின் நோக்கம் பிரம்மனாகவே இருந்தது. அவர்களது அனைத்துச் செயல்களும் பிரம்மனைக் குறித்தே இருந்தன.

இவ்வழியில் அனைத்து வகையினரும் தகுதியை அடைந்தனர். ஒரே சீரான ஆன்மாவே அவர்களது தியான நோக்கமாக இருந்தது. அப்போது ஒரே மந்திரம் தான் (ஓம் என்ற மந்திரம் மட்டும்தான்) இருந்தது. ஒரே கட்டளையே இருந்தது. பலதரப்பட்ட பண்புகளைக் கொண்டிருந்தாலும், அவர்கள் அனைவரும் ஒரே வேதத்தையே பின்பற்றினார்கள்.

அவர்களுக்கு ஒரே தர்மமே இருந்தது. காலத்தின் பிரிவுகளின் படி அவர்கள், எந்த நோக்கத்தையும் கொள்ளாமல் நால்வகை வாழ்வுகளை மேற்கொண்டதால் அவர்கள் விடுதலையை அடைந்தனர். பிரம்மத்துடன் தன்னை அடையாளம் காண்பதே கிருத யுகத்தின் தர்மமாக இருந்தது. கிருத யுகத்தில் நான்கு வர்ணங்களின் அறங்கள் நான்கு பிரிவுகள் {கால்கள்} உடையதாக இருந்தது. முக்குணங்கள் {சத்வம், ரஜஸ், தமஸ்} இல்லாத அந்த யுகமே கிருத யுகமாகும். திரேதா யுகத்தின் தன்மையையும் என்னிடம் இருந்து கேட்டுக்கொள்.

இந்த யுகத்திலேயே வேள்விகள் அறிமுகமாகின. அறமும் கால் இழந்தது. நாராயணன் சிவப்பு நிறத்தை ஏற்றான். மனிதர்கள் உண்மையைப் பயின்று, தங்களைத் தர்மங்களிலும், தர்மச் சடங்குகளிலும் ஈடுபடுத்திக் கொண்டனர். அதுமுதல் வேள்விகளும், பலதரப்பட்ட தர்ம நோன்புகளும் நடைமுறைக்கு வந்தன. திரேதா யுகத்தில் மக்கள் நோக்கத்தை அடைவதை பல வழிகளில் செய்யத் தொடங்கினர்.

அவர்கள் செயல்கள் மூலமாகவும் கொடைகள் மூலமாகவும் அவற்றை அடைந்தனர். அவர்கள் அறத்தின் பாதையில் இருந்து வழுவாதிருந்தார்கள். அவர்கள் தவத்திற்கு அர்ப்பணிப்புடன் இருந்தனர். நால் வர்ணங்களும் தங்கள் கடமைகளைச் சரியாகப் பின்பற்றிச் சடங்குகளைச் செய்தனர். திரேதா யுகத்தின் மனிதர்கள் இப்படியே இருந்தனர்.

துவாபர யுகத்தில் அறம் ஒரு பாதிக் குறைந்தது {இரு கால்கள் குறைந்து, இரு கால்களில் நின்றது}. நாராயணன் மஞ்சள் நிறத்தை அணிந்தான். வேதங்கள் நான்காகப் பிரிக்கப்பட்டன. சில மனிதர்கள் நான்கு வேதங்களை அறிந்தனர், சிலர் மூன்று வேதங்களை அறிந்தனர், சிலர் ஒரு வேதத்தை அறிந்திருந்தனர். மேலும் சிலர் ரிக்கைக் கூட அறியவில்லை. சாத்திரங்கள் இப்படிப் பகுக்கப்பட்டபிறகு செயல்கள் அதிகரிக்கத் தொடங்கின.

மக்கள் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி, துறவிலும் கொடையிலும் ஈடுபட்டனர். முழு வேதத்தையும் பயிலும் திறனற்றதால், அது பல பாகங்களாகப் பிரிக்கப்பட்டது. அறிவு குறைந்ததன் விளைவாகச் சிலரே உண்மையில் நிலைத்திருந்தார்கள். மக்கள் சத்தியத்தில் இருந்து வழுவிய போது, பலதரப்பட்ட நோய்களும், ஆசை பெருகவும், இயற்கைப் பேரிடர்களும் ஏற்பட ஆரம்பித்தன.

இவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் தவம் மேற்கொள்ள ஆரம்பித்தனர். சிலர் வாழ்வில் நல்ல காரியங்களை விரும்பியோ அல்லது சொர்க்கத்தை விரும்பியோ வேள்விகளைக் கொண்டாடினர். துவாபர யுகம் தொடங்கியதும் மனிதர்கள் அவர்கள் செய்யும் அக்கிரமங்களால் சிதைவுக்குள்ளாகினர். ஓ! குந்தியின் மகனே {பீமா}, கலி யுகத்தில் அறம் ஒரே காலில் நிற்கும். இந்த கலியுகத்தின் தொடக்கத்தில் நாராயணன் கருப்பு நிறத்தை அணிவான்.

இந்த யுகத்தில் வேதங்களும் நெறிகளும், அறம், வேள்விகள், அற நோன்புகள் ஆகியன பயன்பாட்டில் இருந்து விழுந்துவிடும். அதிக மழை, வறட்சி, எலிகள், வெட்டுக் கிளி, பறவைகள், அண்டை நாட்டுப் பகை மன்னர்கள் – ஆகிய பயிருக்கு சாதகமற்ற ஆறு பொருள்கள், நோய், களைப்பு, கோபம், பிற குறைபாடுகள், இயற்கைப் பேரிடர், துயரம், பற்றாக்குறை பயம் ஆகியன உண்டாகும். யுகம் கரையும்போது, அறமும் குறைவடைகிறது.

அறம் குறையும் போது, உயிரினங்கள் அழிகின்றன. உயிரினங்கள் அழிந்தால் இயற்கை அழிவைச் சந்திக்கிறது. யுக முடிவில் செய்யப்படுகிற அறச் செயல்கள் எதிர்மறை பலன்களை அளிக்கின்றன. பல யுகங்கள் வாழ்வன கூட இம்மாற்றங்களுக்கு ஆட்படுகின்றன. ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே, உனது ஆவலை அறிந்ததால் இதைச் சொல்கிறேன்.

ஒரு நல்ல மனிதன் ஏன் மிதமிஞ்சிய, பயனற்ற பொருளைக் குறித்து ஆவலாக இருக்க வேண்டும்? ஓ! நீண்ட கரங்கள் கொண்டவனே {பீமா}, ஒவ்வொரு யுகத்தின் தன்மைகள் குறித்து முழுமையாகச் சொல்லிவிட்டேன். உனக்கு நன்மை உண்டாகட்டும். இனி நீ திரும்பிப் போ” என்றான் {ஹனுமான்}.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version