November 28, 2021, 6:10 am
More

  திருப்புகழ் கதைகள்: சிவபெருமான் ஆமையின் ஓட்டைத் தரித்த வரலாறு!

  தாருகாவனத்து முனிவர்கள் தவமே சிறந்தது என்றும், அவர்களது மனைவிமார் கற்பே உயர்ந்தது என்றும் கருதினார். கர்மமே

  thiruppugazh stories
  thiruppugazh stories

  திருப்புகழ் கதைகள் பகுதி 45
  மன்றல்அம் கொந்து (திருப்பரங்குன்றம்) திருப்புகழ்
  சிவபெருமான் ஆமையின் ஓட்டைத் தரித்த வரலாறு
  – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

  கமடம் என்றால் ஆமையோடு. தேவரும் அசுரரும் அமுதம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தபோது, தேவர்கள் அயன்பால் தம் நினைவை வெளியிட்டு அப்பிரமனுடன் அனந்தசயனராகிய அச்சுதரிடம் சென்று குறையிரந்தனர்.

  திருமால் “அவ்வாறே ஆகுக” என்று அன்னாரை அழைத்துக் கொண்டு பாற்கடலை அடைந்து, மந்தரமலையை மத்தாகவும் நாக அரசன் வாசுகியைக் கயிறாகவும் கொண்டு, தேவர்கள் வாற்புறத்தும், அசுரர்கள் தலைப்புறத்தும், பிடித்து இழுத்துக் கடையுமாறு செய்தனர்.

  இவர்கள் இழுக்கும் விசையினால் உடல் தேய்ந்து வருந்திய வாசுகி யென்னும் பணியரசன் துன்பம் பொறுக்க முடியாமல் ஆலகால விடத்தைக் கக்கினன். அது கண்டு அரியயனாதி அமரர் குழாம் அஞ்சியோடி அரனாரிடம் முறையிட, அவர் அவ்வாலகாலவிடத்தை யுண்டு கண்டத்தில் தரித்து திருநீலகண்டராக விளங்கினார்.

  பின்னர் விநாயகர் பூசை செய்து, தேவாசுரர்கள் மீண்டும் பாற்கடலைக் கடைந்தனர். அப்போது மந்தரமலை பாதலத்தில் அமிழ்ந்தது. உடனே நாராயணர் பெரிய கூர்ம (ஆமை) வடிவங் கொண்டு பாற்கடலிற் பாய்ந்து, மந்தரமலையைத் தாங்கி அமிர்தமதனம் புரியச் செய்தனர்.

  அடலின் மேதகு தேவரும் அவுணரும் அந்நாள்
  கடல் கடைந்திடும் எல்லையின் மந்தரம் கவிழ
  நெடிய மால்அது நிறுவியே பொருக்கென நீந்தம்
  தடவி உள்ளணைந்து ஆமையாய் வெரினிடைத் தரித்தான்!
  – என்று இந்தச் செய்தியை கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணத்தில் குறிப்பிடுவார்.

  அக்காலம் மந்தரமலையைத் தாங்கி நின்ற மாதவன் அவதாரமாகிய கூர்மம், தன்னை விடச் சிறந்தோர் ஒருவருமில்லை என்று மனம் செருக்குற்றது. இதனால் துன்பமுற்ற பிரமாதி தேவர்கள் ஓலமிட்டுக் கதறி கயிலைமலைச் சென்று “அழலுந்த நகுந்திறல் கொண்ட” அந்திவண்ணர் பால் நிகழ்ந்தது கூறி முறையிட்டனர்.

  கறைமிடற்று அண்ணல் கருணை பூத்து, புன்முறுவல் கொண்டு “அடியார்களே! அஞ்சன்மின்” என்று அபயமீந்து, தமது மடித்தலத்தில் எழுந்தருளியுள்ள கந்தப் பெருமானை திருநோக்கஞ் செய்தருளினர். அக்குறிப்பை உணர்ந்து குமாரக் கடவுள் திருப்பால் கடலை அணுகி ஓர் ஊங்காரஞ் செய்தார். அதனைக் கேட்ட கூர்மம் மூர்ச்சித்தது. அக்காலை முருகப்பெருமானுடன் பின் தொடர்ந்து வந்த அரிகர புத்திரராகிய ஐயனார் அக் கூர்மத்தைப் பற்றி இழுத்து வெளியிற் கொணர்ந்தனர்.

  பின்னர் இளையபெருமாளாகிய குகப் பெருமான் திருவுளமிரங்கி கூர்மத்தின் உயிரைப் போக்காது, அதன் ஓட்டினை மட்டும் பெயர்த்து உறுதி கூறி திருக்கயிலையை நணுகி, தந்தையார்பால் அவ்வாமையின் ஓட்டினை வைத்தருளினார். முக்கட்பரமன் தம் புதல்வராய முருகநாயகனை அணைத்து முதுகு தைவந்து மருங்கில் இருத்தினர். பின்னர் தேவர்கள் வேண்ட, அவ்வாமையின் ஓட்டைத் தமது திருமார்பில் உள்ள பிரம விட்டுணுக்களின் சிரமாலைக்கு நடுநாயகமாக அமைத்து தரித்துக் கொண்டு அமரர்களுக்கு அருள் பாலித்தனர்.

  பின்னர் கூர்ம வடிவேற்ற திருமால் மயக்கம் நீங்கி பண்டைய உணர்வு பெற்று பரமபதியைத் துதித்து, தெளிந்த அறிவுடனே, நாரதர் முதலிய முனிவர்க்கும் பிறர்க்கும் சிவபெருமானது பெருமையை நன்கு விளக்கும் கூர்மபுராணத்தைக் கூறித் தம் பழைய வடிவு தாங்கி வைகுந்த மெய்தினர்.

  maha shivaratri wishes 3
  maha shivaratri wishes 3

  சிவபெருமான் நாகங்களை
  ஆபரணமாகக் கொண்ட வரலாறு

  தாருகாவனத்து முனிவர்கள் தவமே சிறந்தது என்றும், அவர்களது மனைவிமார் கற்பே உயர்ந்தது என்றும் கருதினார். கர்மமே பலனைக் கொடுக்கும் என்றும் கருதி, முக்கண்ணனை நினையாது, மமதையுற்று வாழ்ந்திருந்தார்கள்.

  அவர்களுக்கு நல்லறிவு வழங்க சிவபெருமான் திருவுளங் கொண்டு ஆடையின்றி, திகம்பரராய்ப் பிட்சாடனத் திருக்கோலங் கொண்டு, திருமாலை மோகினி வடிவு கொள்ளச் செய்து அம்முனிவர் தவத்தையும் முனிவரின் மனைவியரின் கற்பையும் அழித்தனர். அந்த சமயத்தில் மோகினி வடிவில் வந்த திருமாலின் அழகில் ஆசையுற்ற்ய் முனிவர்கள் மயங்கினர்.

  பின்னர் “நம் தவத்தை அழித்து நமது பத்தினிகளின் கற்பை ஒழித்தவன் சிவனே; அவன் ஏவலால் அரிவையாக வந்தவன் அச்சுதனே” என்று ஞானத்தாலறிந்து, விஷ விருட்சங்களைச் சமித்தாக்கி வேம்பு முதலியவற்றின் நெய்யினால் அபிசார வேள்வி செய்து அதனினலிருந்து எழுந்த பல பொருள்களையும் பரமபதியின் மீது பிரயோகிக்க, சிவபரஞ்சுடர் அவற்றை உடை, சிலம்பு, ஆடை, ஆயுதம், மாலை, சேனை முதலியனவாகக் கொண்டனர்.

  தவமுனிவர் தாம் பிரயோகித்தவை முழுதும் அவமாயினதைத் கண்டு யாகாக்கினியினின்றும் எழுந்த சர்ப்பங்களைச் சம்புமேல் விடுத்தனர். அந் நாகவினங்கள் அஞ்சும் தன்மையின் அவனியதிரும்படி அதிவேகமாகத் தமது காளி, காளாஸ்திரி, யமன், யமதூதன் என்னும் நான்கு நச்சுப்பற்களில் விடங்களைச் சொரிந்து கொண்டு காளகண்டன் பால் வந்தன.

  மதனனை ஏரித்த மகாதேவன், ஆதிகாலத்தில் கருடனுக்கு அஞ்சித் தம்பால் சரண்புகுந்த சர்ப்பங்களைத் தாங்கி இருந்ததுடன் இப் பாம்புகளையும் ஏற்று “உமது குலத்தாருடன் ஒன்று கூடி வாழுங்கள்” என்று திருவுளஞ் செய்து அப் பன்னாகங்கள் அஞ்சும்படித் திருக்கரத்தாற் பற்றிச் சிறிது நேரம் நடித்து, திருக்கரம், திருவடி, திருவரை, திருமார்பு முதலிய ஆபரணங்களாக அணிந்து கொண்டனர்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,107FansLike
  369FollowersFollow
  45FollowersFollow
  74FollowersFollow
  1,745FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-