October 23, 2021, 3:42 am
More

  ARTICLE - SECTIONS

  திருப்புகழ் கதைகள்: மழையின் இயற்பியல்!

  நான்கு காரணங்களிலும் நீர் ஆவியாக வேண்டும். அதற்கு நீர் பரப்பு ஒன்று வேண்டும். அந்த நீர் பரப்பு, கடல், இந்திய நாட்டின் மூன்று பக்கத்திலும்

  thiruppugazh stories
  thiruppugazh stories

  திருப்புகழ் கதைகள் பகுதி 79
  – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

  உததிஅறல் மொண்டு – திருச்செந்தூர்
  மழையின் இயற்பியல் – 2

  கடல், ஏரிகள் முதலிய நீர்நிலைகளிலிருந்து நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகிறது. ஆவியான நீர் வளிமண்டலத்தின் மேலே செல்கிறது. மேலே செல்லச் செல்ல நீராவி குளிரடைந்து, மேகமாக மாறி, மழையாக, ஆலங்கட்டி மழையாகப் பெய்கிறது. நீர்நிலைகளிலிருந்து நீர் ஆவியாவதும் பின்னர் மழையாகப் பொழிந்து, ஆறுகளாக உருவெடுத்து, மீண்டும் கடலிலோ ஏரிகளிலோ கலத்தலை நீர் சுழற்சி (hydrological cycle) என்கிறோம். இத்தகைய மழைபொழிவின் இயற்ப்யல் அடிப்படை இப்பாடலில் அருணகிரியார் சுட்டுவதுபோல சங்க இலக்கியப்பாடல்களிலும் காணப்படுகின்றன.

  எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான நற்றிணையில்
  மறந்து கடல் முகந்த கமஞ் சூல் மாமழை (இளந்திரையனார்)
  இன் நீர்த் தடங் கடல் வாயில் உண்டு, சில்நீர் (பெயர் குறிப்பிடப்படாத புலவர்)
  வானம் நனி கடல் முகந்து, செறிதக இருளி, கனை பெயல் பொழிந்து (மருங்கூர்ப் பட்டினத்து சேந்தம் குமரனார்)
  மாக்கடல் முகந்து மணி நிறத்து அருவித்
  தாழ் நீர் நனந்தலை அழுந்து படப் பாஅய் (பெருங்குன்றூர்க்கிழார்) – எனப் பல புலவர்கள், மேகம் கடலில் இருந்து நீர் முகந்து வருவதைப் பாடியுள்ளனர்.

  மேகமானது முழங்கும் அலைகளையும் கரிய நிறத்தையும் குளிர்ச்சியையும் உடைய பெரிய கடல் வற்றிப்போகுமாறு அதன் நீரை முகந்துகொண்டு வந்தது. வலிமை மிக்க இடி சினத்துடன் முழங்கும்படியாக செய்தது. நீரின்பாரம் தாங்கமுடியாமல் தன்னுடைய வயிறு கிழிந்தது போலவும் மேகம் பெருமழையைப் பெய்தது. மலையின் உச்சியில் பெய்யும்..

  அப்பெருமழையால் ஓடும் நீர் திரண்டு வெண்மை மிக்க அருவிகளின் நீராகப் பெருகி வீழ்ந்து, வையை ஆற்றின் நீராகிப் பெருவெள்ளமாக வந்தது. இத்தகைய வையையின் நீர்பெருக்கு உயிர்களுக்கு எல்லா நன்மைகளையும் விளைவித்து, மென்புலமாகிய மருத நிலத்தின் இயற்கை அழகினை மிகுத்து, குறிஞ்சி முதலிய வன்புலங்களின் வளத்தைப் பெருக்கி வையை ஓடிவந்த இக்காட்சியைப் பாடும், பரிபாடலில் இடம்பெறும் மையோடக்கோவனாரின் பாடலில்

  திரை இரும் பனிப் பௌவம் செவ்விதா அற முகந்து,
  உர உரும் உடன்று ஆர்ப்ப, ஊர் பொறை கொள்ளாது,
  கரை உடை குளமெனக் கழன்று, வான் வயிறு அழிபு,
  வரைவரை தொடுத்த வயங்கு வெள் அருவி
  இரவு இருள் பகலாக, இடம் அரிது செலவு என்னாது,
  வலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளிய
  நிலன் உற நிமிர் தானை நெடு நிரை நிவப்பு அன்ன
  பெயலாற் பொலிந்து, பெரும் புனல் பல நந்த,
  நலன் நந்த, நாடு அணி நந்த, புலன் நந்த,
  வந்தன்று, வையைப் புனல்.

  இன்று நாம் மேக வெடிப்புப் பெருமழை (cloud burst) என்று சொல்லுகிறோம்; இத்தகையதோர் பெருமழையை, 2015ஆம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளத்தை ஏற்படுத்திய பெருமழையைப் புலவர் மையோடக்கோவனார் பாடியிருக்கிறார் என்றால் அது மிகையாகாது. மேகத்தின் வயிறு கிழிந்தது போல, கரை உடைந்த குளம் போல என்ற அவருடைய உவமைகள் படித்துப் படித்து மகிழத்தக்கது.

  மழை நமது வாழ்வின் மிக முக்கியமான, ஆனால் மிகச் சாதாரணமான நிகழ்வாகும். 2015ஆம் ஆண்டு பெருமழை பெய்து தமிழ்நாட்டை குறிப்பாக சென்னை மாநகரத்தை நிலைகுலையச் செய்தது. ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு மழை வெகு குறைவாகப் பெய்து தற்போது வறட்சி நிலையை அனுபவித்தோம்.

  மழை எவ்வாறு பெய்கிறது என்பது பற்றி பொதுவாக எவரும் நினைப்பதில்லை. தமிழகம் போன்ற ஒரு பகுதியில் ஓராண்டின் நான்கு பருவகாலங்களிலும் மழை பெய்யக்கூடும். ஆனால் எல்லாப் பருவங்களிலும் எல்லா இடங்களிலும் பெய்யும் மழைக்கு. காரணம் ஒன்றுதானா? வானிலை ஆய்வுத்துறை ’வெப்பச் சலனத்தால் மழை ஏற்படும்’ என்றும் மேல்மட்டக் காற்றுச் சுழற்சியால் மழை ஏற்படும்’ என்றும் சில சமயம் அறிவிப்பதுண்டு. எனவே மழை ஏற்பட பல காரணங்கள் உண்டு.

  மழைப்பொழிவுக்கான காரணத்தைச் சுருக்கமாகச் சொல்வதானால் ஈரமான காற்று வளிமண்டலத்தின் மேலே செல்லும்போது குளிரடைந்து, ஆவிச்சுருக்கம் ஏற்பட்டு, மேகமாய் மாறி, பின்னர் மழையாய் பொழிகிறது.

  ஈரமான காற்று வளிமண்டலத்தின் மேலே எழும்ப நான்கு வெவ்வேறு காரணங்கள் உள்ளன. நான்கு காரணத்தாலும் ஏற்படும் மழையும் அதனை உருவாக்கும் மேகங்களும் வெவ்வேறு விதமானவை. அந்த நான்கு விதமான மழைகளாவன (1) வெப்பச் சலன மழை (2) மலைப்பகுதி மழை (3) முகப்பு மழை (4) பருவக்காற்று மழை என்பனவாகும்.

  மேலே சொன்ன நான்கு காரணங்களிலும் நீர் ஆவியாக வேண்டும். அதற்கு நீர் பரப்பு ஒன்று வேண்டும். அந்த நீர் பரப்பு, கடல், இந்திய நாட்டின் மூன்று பக்கத்திலும் உள்ளது.

  இந்தக் கடல்நீர் ஆவியாகி மேகமாக, புயல்களாக மாறி தமிழகத்தில் மழை பொழிகிறது என்ற அறிவியல் உண்மையை சங்கப் புலவர்கள் முதல் அருண்கிரையார் வரை புலவர்கள் அனைவரும் பாடியிருக்கிறார்கள் என்பது வியப்பத்தைத் தரும் செய்தி அல்லவா!

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,137FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,580FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-