October 29, 2021, 2:25 am
More

  ARTICLE - SECTIONS

  திருப்புகழ் கதைகள்: கரிக் கொம்பம் – திருச்செந்தூர்!

  உகந்த கடப்பமலர்களைத் தொடுத்து மாலையாக்கி அவருடைய அடிமலரில் புனையவேண்டும் என்பதாகும்.

  thiruppugazh stories
  thiruppugazh stories

  திருப்புகழ் கதைகள் பகுதி 83
  – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

  கரிக் கொம்பம் – திருச்செந்தூர்
  வாழ்க்கைப் பண்புகள்

  சிரப்பண்புங் கரப்பண்புங்
  கடப்பந்தொங் கலிற்பண்புஞ்
  சிவப்பண்புந் தவப்பண்புந் …… தருவோனே

  இவ்வரிகளில் வரும் சிரப்பண்பு என்பது என்னவென்றால், இறைவனுடைய திருவடிகளை வணங்குவதாகும். வணங்காத தலை உயர்வில்லாதது; பயனற்றது. இறவனைக் காணாத கண்ணும், கேளாத காதும், பேசாத வாயும் இருந்தும் பயனின்றி இழிவு பெறுவது போல் இறைவனை வணங்காத தலையும் இகழத்தக்கதாம். இதனையே திருவள்ளுவர்

  கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
  தாளை வணங்காத் தலை.
  .. – என்று கூறுவார். அன்றியும் இறைவனை வணங்காத தலை மறுபிறப்பில் நன்றி மறந்த வினைப்பயத்தால் விறகு சுமந்து வேதனையுறும் என

  சும்மாடு கட்டிச் சுமந்துழலு வார்சிலரை
  இம்மா நிலத்தில் எண்ணுங்கால்-அம்மாநின்
  பொன்னா ரடிமுடியைப் போற்றாத பேரன்றோ
  மன்னா சிதம்பரதே வா.

  குருநமசிவாயர் பாடுவார். வடலூர் இராமலிங்க அடிகளாரோ

  எங்கள் பெருமான் உன்னை வணங்காத மூடர்தலை
  இதழ் விறகு எடுக்குந்தலை
  – என்பார். மேலும் அடிகளார்

  வீட்டுத் தலைவநின் தாள்வணங்கார்தன் விரிதலைசும்
  மாட்டுத் தலை,பட்டி மாட்டுத் தலை,புன் வராகத்தலை,
  ஆட்டுத் தலை,வெறி நாய்த்தலை, பாம்பின் அருந்தலை,கல்
  பூட்டுத்தலை, வெம்புலைத்தலை, நாற்றப் புழுத்தலையே.
  – என்ற கடுமையான சொற்களால் இராமலிங்க அடிகளார் சாடுவார்.

  சிரப்பண்பு என்பது அருணகிரிநாதருடைய சிரத்தில் முருகப்பெருமான் வேதாகமங்களின் சிரத்தில் விளங்கும் தனது திருவடிமலரைச் சூட்டினார் என்றும் இதற்கு நாம் பொருள்கொள்ளலாம்.

  கந்தரநுபூதியில் அருணகிரியாரே
  சாடுந் தனிவேல் முருகன் சரணஞ்
  சூடும்படி தந்தது சொல்லு மதோ
  வீடுஞ் சுரர் மாமுடி வேதமும் வெங்
  காடும் புனமுங் கமழுங் கழலே.
  ..- என்று பாடுவார்.

  கரப் பண்பு என இங்கே அருண்கிரியார் சுட்டிக் காட்டுவது என்னவெனில் கரத்தைத் தந்த இறைவனைக் கடிமா மலர்த் தூவி அர்ச்சித்து கைகூப்பித் தொழுவதேயாகும். அவ்வண்ணம் தொழுத கரங்கள் மறுபிறப்பில் நன்றி பாராட்டிய புண்ணியத்தால், பொன் வழங்கும் புனிதக் கரங்களாகத் திகழும். தொழாத கரங்கள் பிச்சையேற்க நீட்டும் துன்பத்தை அனுபவிக்கும். இதனை இராமலிங்க அடிகளார்,

  தோன்றல்உன் திருமுன் குவித்த பெரியோர் கைகள்
  சுவர்ணம் இடுகின்ற கைகள்.

  பரம நின் திருமுன்னர் குவியாத வஞ்சர்கை
  பலியேற்க நீள் கொடுங்கை

  arunagiri muruga peruman
  arunagiri muruga peruman

  ஆடு மாடுகட்குக் கரங்கள் இல்லை. மனிதனுக்குக் கடவுள் கரங்களைத் தந்தனர். அவர் தந்த கரத்தால் அவரைத் தொழுதும், அவருடைய ஆலயங்களாகிய வறியவர்கட்கு இயன்றதை வழங்கியும் உய்தல் வேண்டும். ஆகவே, கரப் பண்பு வணங்குதலும், வழங்குதலும் ஆகும்.

  கடப்பந் தொங்கலில் பண்பு என அவர் இங்கே குறிப்பிடுவது முருகவேளுக்கு உகந்த கடப்பமலர்களைத் தொடுத்து மாலையாக்கி அவருடைய அடிமலரில் புனையவேண்டும் என்பதாகும்.

  சிவப் பண்பு அவர் சொல்வது சிவமாகுந் தன்மையை ஆகும். சீவர்கள் பெறுவதே முடிந்த முடிபு. “சீவன் சிவசொரூபமென தேறி” என்கின்றார் பிறிதொரு திருப்புகழில். “சித்தமலமறுவித்து சிவமாக்கி” என்கின்றார் மாணிக்கவாசகர். சீவன் சிவனாகும் இயல்புடையது என்பதை உணர்த்தியுள்ளார். சிவம் சாராதது சவம்தானே.

  இப்பாடலில் குறிப்பிடப்படும் தவப் பண்பு எனப்படுவது சிவத்தை தவத்தால் அடைய முடியும். தவம் என்றால் சிந்தையை யடக்கிச் செந்நெறி நிற்றல் ஆகும். இவ்வாறு வாழ்க்கைப் பண்புகளை அருணகிரியார் இத்திருப்புகழில் சுட்டிக் காட்டியுள்ளார்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  368FollowersFollow
  39FollowersFollow
  74FollowersFollow
  1,593FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-