October 19, 2021, 7:07 am
More

  ARTICLE - SECTIONS

  திருப்புகழ் கதைகள்: சிவபெருமானின் எண் குணங்கள்!

  சிவபெருமான் உருவமில்லாதவர் என்பதை உருவமிலி என்று சொல்வதன் மூலம் அருணகிரியார் விளக்குகிறார். தனக்கென ஓர் உருவமில்லாதவர்.

  thiruppugazh stories

  திருப்புகழ் கதைகள் பகுதி 93
  – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

  கொடியனைய – திருச்செந்தூர் தொடர்ச்சி
  சிவபெருமானின் எண் குணங்கள்

  இத்திருப்புகழில் அருணகிரியார் சிவபெருமானின் எட்டு அருட்குணங்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். சிவபெருமானின் எட்டு குணங்களாவன – தன்வயத்தவனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கை யுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை என்று பழைய வேதம் கூறும். திருக்குறளின் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஒன்பதாம் திருக்குறளான

  கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
  தாளை வாணங்காத் தலை.

  குறளின் விளக்கத்தைத் தரும்போது பரிமேலழகர் இறவனின் எட்டு குணங்களாக மேலே சொன்னவற்றைக் குறிப்பிடுவார். சிவபெருமான் ஆதியில்லாத அநாதிப் பரம்பொருள். இதனைத் தமிழ் வேதம் – ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி – என விளக்குகிறது.

  முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருள்
  என்றதையும்
  அநாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே
  மநாதிகளுக்கு எட்டா வடிவாய்”

  என்ற கந்தர் கலிவெண்பா வரிகளையும் இங்கே நாம் படித்துணரவேண்டும்.

  சிவபெருமான் உருவமில்லாதவர் என்பதை உருவமிலி என்று சொல்வதன் மூலம் அருணகிரியார் விளக்குகிறார். தனக்கென ஓர் உருவமில்லாதவர். ஆன்மாக்களுக்காக உருவத்தை அடைகின்றனர். உருவமில்லாத முழுமுதற்கடவுள் ஆன்மகோடிகளை உய்விக்கும் பேரருட் பெருக்கால் ஆன்மாக்கள் எந்த எந்த வகையாகச் சிந்திக்கிறார்களோ அந்த அந்த உருவத்தை அடைகின்றனர்.

  “சிந்தாமணிக்கு ஒரு நிறமுமில்லை, அதனருகில் எந்த எந்த நிறப்பொருளுளவோ அந்த அந்த நிறத்தையடைகிறது. அதுபோல் எந்த எந்த ரூபமாகச் சாதகன் நினைக்கின் றானோ அந்த அந்த சமயம் அவனுக்கு அந்த அந்த ரூபத்தைச் சிந்தாமணியைப்போல் சிவபெருமான் அடைகிறார்” என்னும் திருவாக்கை இங்கே நாம் அறியவேண்டும்.

  lord shiva family
  lord shiva family

  சமயக் குரவர் நால்வரும் இக்கருத்தை வலியுறுத்தும் பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளனர். மாணிக்கவாசகப் பெருமான் அருளிய எட்டாம் திருமுறையான திருவாசகம் – திருக்கோவையாரில் 76 பதிகங்கள், 1058 பாடல்கள் உள்ளன. அதில் பதினொன்றாம் பதிகமான திருத்தெள்ளேணம் என்ற பதிகம் தில்லையில் அருளியது; நாலடித் தரவு கொச்சகக் கலிப்பாக்களால் ஆனது. தெள்ளேணம் என்பது பெண்கள் கைகொட்டி ஆடும் ஒரு விளையாட்டு. அப்பதிகத்தில்

  ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற்கு ஆயிரம்
  திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ
  – என்று பாடியுள்ளார். திருநாவுக்கரசர் திருப்பூவணம் தலத்தில் பாடியுள்ள ஆறாம் திருமுறை தேவாரத்தில்

  ஆரொருவர் உள்குவார் உள்ளத் துள்ளே
  அவ்வுருவாய் நிற்கின்ற அருளுந் தோன்றும்
  வாருருவப் பூண்முலைநன் மங்கை தன்னை
  மகிழ்ந்தொருபால் வைத்துகந்த வடிவுந் தோன்றும்
  நீருருவக் கடலிலங்கை அரக்கர் கோனை
  நெறுநெறென அடர்த்திட்ட நிலையுந் தோன்றும்
  போருருவக் கூற்றுதைத்த பொற்புத் தோன்றும்
  பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

  என்று பாடுவார். இந்தத் திருப்பூவணம் என்ற திருத்தலம் மதுரைக்கருகில் உள்ளது. இங்கே அருளுகின்ற இறைவனின் பெயர் திருப்பூவணர், இறைவியின் பெயர் மின்னணையாள் ஆகும். இக்கருத்தை நம் காரைக்காலம்மையாரும் விளக்கியுள்ளார்.

  நூல்அறிவு பேசி நுழைவு இலாதார் திரிக,
  நீல மணிமிடற்றான் நீர்மையே — மேல்உலந்தது,
  எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்
  அக்கோலத்து அவ்வுருவே ஆம்
  …அவரது!

  எனவே ஆன்மீக நண்பர்களே கடவுள் இல்லை என்று சொல்வாருடனும் இந்து மதத்தில் ஏன் பல வடிவிலான கடவுள் இருப்பது பற்றிப் பேசும் மனிதர்களுடனும் விவாதம் செய்வதில் பொருளில்லை.

  சிவபெருமானே எல்லாம் வல்ல இறைவன். அவரது திருமகனாரான முருகப்பெருமான் தன்னிகரற்ற இறைவன். சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை.

  ஆதிசங்கரர் இந்து மதத்தில் ஆறு பிரிவுகள் உண்டு எனச் சொன்னார். அவையாவன – சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், கணாபத்யம், சௌரம் என்பனவாம். சைவத்தின் பிராதான இறைவன் சிவபெருமான்; வைணவத்திற்கு திருமால்; சாக்தம் பிரிவிற்கு சக்தி; கௌமாரத்திற்கு முருகப்பெருமான்; கணாபத்யம் பிரிவிற்கு விநாயகர்; சௌரம் என்ற பிரிவிற்கு சூரியன்.

  ஒவ்வொரு பிரிவும் தங்களது பிரதான இறைவனே பெரியவன் என்று கூறும். மற்ற தெய்வங்கள் எல்லாம் தம்முடைய பிராதான இறைவனால் உருவாக்கப்பட்டனர் என்று கூறும். ஆனால் இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிரிடத்தும் இறைவன் இருக்கின்றான் என்பதை நாம் உணர்ந்தால் உலகில் அமைதி நிலவும்.

  சிவமூர்த்தி தமது திருவடியை வழிபடும் அன்பர்கட்குத் துணையாக இருந்து அருள்புரிகின்றார் என்பதனை இத்திருப்புகழில் அன்பர் பங்கன் என்று அருணகிரியார் குறிப்பிடுகிறார். இதனையே வள்ளல்பெருமான் இராமலிங்க அடிகளார் விண்ணப்பக் கலிவெண்பாவில் மிக அருமையாக விளக்குவார்.

  பாண்டியன்முன் சொல்லிவந்த பாணன் பொருட்டுஅடிமை
  வேண்டி விறகு எடுத்து விற்றனையே – ஆண்டுஒருநாள்

  வாய்முடியாத் துன்பு கொண்ட வந்திக்குஓர் ஆளாகித்
  தூய்முடிமேல் மண்ணும் சுமந்தனையே……..ஆய்துயர

  மாவகஞ்சேர் மாணிக்க வாசகருக்காய் குதிரைச்
  சேவகன்போல் வீதிதனில் சென்றனையே-மாவிசையன்

  வில்அடிக்கு நெஞ்சம் விரும்பியதுஅல்லால்ஒருவன்
  கல்அடிக்கும் உள்ளம் களித்தனையே-மல்லலுறும்

  வில்வக்கிளை உதிர்த்த வெய்ய முசுக்கலையைச்
  செல்வத் துரைமகனாய்ச் செய்தனையே-சொல்அகலின்

  நீளுகின்ற நெய்அருந்த நேர்எலியை மூவுலகம்
  ஆளுகின்ற மன்னவனாய் ஆக்கினையே-கோள்அகல

  வாய்ச்சங்கு நூல்இழைத்த வாய்ச்சிலம்பி தன்னைஉயர்
  கோச்செங்கட் சோழன்எனக் கொண்டனையே-ஏச்சுறுநல்

  ஆறுஅடுத்த வாகீசர்க்கு ஆம்பசியைக் கண்டு,கட்டுச்
  சோறுஎடுத்துப் பின்னே தொடர்ந்தனையே-கூறுகின்ற

  தொன்மைபெறுஞ் சுந்தரர்க்குத் தோழன்என்று பெண்பரவை
  நன்மனைக்குந் தூது நடந்தனையே.

  என்று சிவபெருமான் எவ்வாறு அன்பர் பங்கனாக விளங்கினார் என்று வள்ளலார் பெருமான் கூறுகிறார்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,140FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,565FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-