September 27, 2021, 9:01 am
More

  ARTICLE - SECTIONS

  திருப்புகழ் கதைகள்: பதினொரு வகை நடனங்கள் (2)

  நகைச்சுவைக்குரிய வைணவ வினோதக் கூத்துகளில் இது ஆறாவதாகும்.

  thiruppugazh stories

  திருப்புகழ் கதைகள் பகுதி 96
  – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

  கொம்பனையர் – திருச்செந்தூர்
  பதினொருவகை நடனங்கள்-2

  பாணாசுரனது கோட்டையைச் சூழ்ந்து கொண்டு காவல் காத்துக்கொண்டிருந்த அக்கினிதேவரையும் தன்னை எதிர்த்த பிறரையும் ஸ்ரீகிருஷ்ண பகவான் நாசஞ்செய்தார். அதன் பின்னர் பாணாசுரன் தானே நேரில் வந்து போர், தொடங்க, அவனுக்குப் பக்கபலமாகச் சிவபெருமானும் சுப்பிரமணியன் முதலான பரிவாரங்களுடன் வந்து எதிர்த்துப் போர்புரிந்தனர்.

  கண்ணன் ஜ்ரும்பணாஸ்திரத்தைப் பிரயோகித்துச் சிவனை ஒன்றுஞ் செய்யாமற் கொட்டாவி விட்டுக்கொண்டு சோர்வடைந்து போகும்படிசெய்து, சுப்பிரமணியனையும் கணபதியையும் ஹூங்காரங்களால் அடக்கி, பின்னர், அநேகமாயிரஞ் சூரியர்க்குச் சமமான சுதர்சனம் என்கிற தனது சக்கரத்தை எடுத்துப்பிரயோகித்து, அப்பாணனது ஆயிரந்தோள்களையும் தாரைதாரையாய் உதிர மொழுக அறுத்து அவனுயிரையும் எடுக்க முற்பட்டார்.

  அப்போது பரமசிவன் அருகில்வந்து வணங்கிப் பலவாறு பிரார்த்தித்தனால், அவ்வாணனை நான்கு கைகளோடும் உயிரோடும் விட்டருளினார் என்பது புராணக்கதையாகும்

  திருமால் பாணாசுரனின் சோ நகருக்கு வந்து உலோகத்தையும் மண்ணையும் கலந்து செய்யப்பட்ட குடத்தின் மேல்நின்று ஆடிய ஆடல் குடக்கூத்தாடல். இது வினோதக்கூத்து ஆறினுள் ஒன்றாகும்.

  மாதவி மாயோன் வடிவம் கொண்டு தலையிலும் தோளிலும் கையிலும் குடம் கொண்டு ஆடியிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. இக்கூத்தை சித்தரிக்கும் சிற்பங்கள் திருவெள்ளறை திருமால் கோயிலிலும் சுசீந்தரம் கோயிலிலும் காணப்படுகின்றன.

  வாணன் பேரூள் மறுகிடை நடந்து
  நீணிலம் அளந்தோன் ஆடிய குடமும்

  (கடலாடு காதை, புகார்க் காண்டம், சிலப்பதிகாரம்)

  நகைச்சுவைக்குரிய வைணவ வினோதக் கூத்துகளில் இது ஆறாவதாகும்.

  பரவிய சாந்தி அன்றியும் பரதம்
  விரவிய வினோதம் விரிக்குங்காலை
  குரவை கலி நடம் குடக்கூத் தொன்றிய
  கரண நோக்கு தோற்பாவைக் கூத்
  தென்றிவை யாறும் நகைத்திறச் சுவையும்
  வென்றியும் வினோதக் கூத்தென இசைப்ப

  என அடியார்க்கு நல்லார் கூறுவார். இவ்வைணவக் கூத்தினைக் கல்லாடனாரும்,

  மூன்று புரத் தொன்றில் அரசுடை வாணன்
  மேருக் கிணைத்ததோள் ஆயிரத் தோடும்
  எழு கடல் கிளர்ந்த திரள்கலி யடங்க
  முகம்வே றிசைக்கும் குடமுழவ
  – என்று பெருமை மிக்க அசுரனை மாற்றுருவில் வென்றதாகக் கூறுவார்.

  குடக்கூத்து – திருவெள்ளாறை கோயில் சிற்பம்

  krishnan kudakooththu - 1
  திருவெள்ளறை கோயிலிலுள்ள சிற்பம்

  பாண்டரங்கம் ஆடலும் சிவனால் ஆடப்பட்டுள்ளது. சிவன் போர்கள் பலவென்ற வலிமையோடும் வெற்றிக் களிப்போடும், பாரதி வடிவாய் இறைவன் வெண்ணீறு அணிந்து ஆடியதாகும். பாண்டரங்கம் என்பதனை பண்டரங்கம் என்றும் குறிப்பிடுவர். மாதவி அச்சம் தரக்கூடிய காளி உருத்தாங்கி அகோரத்தாண்டவமாடித் தன் ஆடற்புலமையை வெளிப்படுத்தினாள்.

  தேர்முன் நின்ற திசை முகன் காணப்
  பாரதி ஆடிய வியன் பாண் டரங்கமும்

  (கடலாடு காதை, புகார்க் காண்டம், சிலப்பதிகாரம்)

  ரிக், யசூர், சாம, அதர்வணம் என்னும் மறை பூட்டிய (குதிரைகள்) தேரில், பூமிக்கும் வானத்திற்குமாக நின்ற நான்முகனான பிரம்மாவின் முன், சுடலைப் பொடி பூசிய உக்கிரசிவன் ஆடிய (வெறியாட்டு) தாளக் கூத்தாட்டம் பாண்டரங்கம்.

  பாண்டரங்க ஆடல் இலக்கணமாகக் கல்லாடனாரும்,

  பாண்டரங் கத்தொரு பாடுபெற் றமைந்த
  மோகப் புயங்க முறைத் துறை தூக்கி
  அதற்குச் சாரணி அருட்கரம் ஒன்றில்
  பாணி இரண்டும் தாளம் ஆக்கி
  ஒருதாள் மிதித்து
  என்று கூறுவர்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,465FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-